samedi 23 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 61]




காதல் ஆயிரம் [பகுதி - 61]

601.
கவிவண்ணம் தீட்டக் கலைவண்ணம் காட்டு!
புவிவண்ணப் பாக்கள் பொலியும்! - சுவைசேர்
குவிவண்ண மார்பு கொடுக்கும் கவி..கேள்
செவிவண்ணம் கொள்ளும் செழித்து!

602.
மணக்கும் மலரே மயக்கும் மதுவே!
பிணக்கும் நடிப்பேன்? பெருமை - அணைய
எனக்குள் இருக்கின்றாய்! இன்றமிழ் பாடி
உனக்குள் இருக்கின்றேன் ஊர்ந்து

603.
செந்தேனில் ஊறும் செழுந்தமிழைக் கோர்த்தெடுத்து
வந்தேன் வடிவாய் உனைப்பாட! – விந்தையடி
சொந்தமெனக் கற்பனைகள் சொக்கிவர உன்கொலுசு
சந்தமெனப் பாக்கள் தழைத்து!

604.
கொட்டிநின்று பார்த்தவளே! கோல விழியழகில்
முட்டிநின்று வாங்குதடி என்மூச்சு! - மொட்டுன்னை
எட்டிநின்று பார்த்தேநான் ஏங்குவதோ? கைகளைக்
கட்டிநின்று காலம் கழித்து!

605.
வித்தகன் நெஞ்சை விழியால் விலங்கிட்டுப்
பித்தகன் ஆக்கிய பேரழகே! - நத்தகியே!
புத்தகம் பெற்றேன்! புலமை பொலிந்தொளிர
புத்தகம் கற்றேன் புகழ்ந்து!

606.
பாட்டும்..நீ! பண்ணும்..நீ! பாவலன்நான் இன்பெய்தி
மீட்டும் வியன்யாழ்..நீ! வெண்மதி..நீ! - காட்டுத்தீ
மூட்டும் கயல்விழி..நீ! மோக மொழிபேசி
வாட்டும் நிலையினை மாற்று!

607.
பொய்யிற் பிறந்த புலவரே! நீ..என்றன்
மெய்யிற் கலந்து விளைவதேன்? - மொய்த்துயிரை
நொய்போல் புடைப்பதேன்? உன்றன் நினைவலைகள்
நெய்போல் மணப்பதேன் நீடு!

608.
நெஞ்சியிவள் என்றான்! நினைவெல்லாம் நீயென்றான்!
பஞ்சியிவள் என்றான்! பழமென்றான்! - விஞ்சுசுவை
மஞ்சியிவள் என்றான்! மதுவருந்திப் பின்னவன் 
நஞ்சியிவள் என்றான் நகர்ந்து! 
609.
மெல்ல நடைபயிலும் மெல்லிடையாள்! என்னுயிரைக்
கொல்லக் கணைதொடுக்கும் கூர்விழியாள் - வெல்லமெனச்
சொல்லும் கவிதை! சுடர்தமிழ் நெஞ்சத்தை
அள்ளும் கவிதை! அறி!

610.
தமிழே உனக்குநான் சாற்றும் கவிகள்
அமுதே எனச்சுவை ஆர்க்கும்! - நமதுயிர்
ஒன்றி மகிழ்கின்ற ஒப்பில்லா வெண்பாட்டு
குன்றில் ஒளிரும் விளக்கு!

(தொடரும்)

5 commentaires:

  1. கடைசி வரி

    உழைத்தாரா? உரைத்தாரா?

    RépondreSupprimer
  2. நன்றி நண்பரே . கருத்திற்கு . கவிதையே படித்தேன் . மிக நன்று

    RépondreSupprimer
  3. ஐயா...
    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    தமிழ்மேல் காதல்கொண்டு நீங்கள் புனையும் பாக்கள் படிக்கப் படிக்க மெய்மறக்க வைக்கும் அற்புத காவியமாக மிளிர்கிறது. வேறு இலக்கியங்கியங்கள் தேடிப்போகாமல் இங்கேயே இருந்து இதுபோல படைத்த ஏனைய கவிகளையும் திரும்பத்திரும்ப படித்து நம் அறிவை மேம்படுத்தக்கூடியதாக உங்கள் பாக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

    இவைகளைப் படிக்கக் கிடைத்த நாமும் அதிஷ்டசாலிகள் என்றே நினைக்கின்றேன்.
    உங்கள் படைப்புக்கள் அனைத்துமே அதி சிறப்பு மிக்கவை!

    வாழ்க தமிழ்! வளரட்டும் உங்கள் புகழ்!

    RépondreSupprimer
  4. எங்கள் இன்தமிழ் எம்முடன் வாழ்கிறது
    உங்களின் கவிகள் உயிரோடு கலக்கிறது
    திங்களாய் குளிர்கிறது தினந்தோறும் உம்பாக்கள்
    மங்காது ஒளிர்கிறது மணமெங்கும் பரவுகிறது...

    உங்களை நானும் வாழ்த்த விரும்பி ஆர்வத்தினால் இங்கு கிறுக்குவதை சாதாரண பாட்டு, எழுத்துவரிகள் என்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன். இதை கவிதை அப்படி என்று ஏதும் பெரிய பெயருடன் யாரும் தப்பாகத் தலைப்பிட்டுவிடவேண்டாம். நன்றி!

    RépondreSupprimer
  5. வரிகள் மயக்குகிறது ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer