காதல் ஆயிரம் [பகுதி - 60]
591
உன்குரல் கேட்டவுடன் என்னெஞ்சுள் பொங்கிவரும்
நன்குறள் நல்கும் நறும்பாலே! - மென்குரலில்
எத்தனை நுண்ணயங்கள்! என்னவளே! கவ்வுதடி
அத்தானை உன்றன் அழுகு!
592.
படுத்தால் பறந்துவரும் பாவை நினைவு!
தடுத்தால் இயலா! தமிழ்போல் - தொடுத்தே
சுரக்கும் அமுதே! உறக்கமினி இல்லை
இரக்கம் அளிப்பாய் எனக்கு!
593.
வேலிரண்டும் வீசுகின்ற விந்தைகளைத் தாம்கண்டு
தோளிரண்டும் கூடத் துடிக்குதடி! - கேளடி!
தாளிரண்டும் உன்குடில்முன் தங்கித் தவமிருக்கும்!
நாளிரண்டாய் மெல்ல நகர்ந்து!
594.
அங்கிருந்து பாக்கள் அவள்எழுத, மின்மடலில்
இங்கிருந்து நான்எழுத, என்னென்பேன்? -
தங்கமே!
தங்குதடை இல்லாமல் தண்டமிழ்ச் சொல்லமுதம்
பொங்குகடல் ஆகும் பொழிந்து!
595.
வேலை முடிந்துநான் வீட்டுக்கு வந்தவுடன்
சோலை கிளிவிடுத்த தூதறிய - மூளைதுடிக்கும்!
பாலை நிகர்த்த பசும்பாவை மின்னஞ்சல்
ஓலை எனக்கிங்(கு) உயிர்!
596.
மின்னஞ்சல் ஒவ்வொன்றும் இன்னஞ்சல்! நான்காக்கும்
பொன்னஞ்சல்! வாடாத பூவஞ்சல்! - கன்னல்
கவியஞ்சல்! காதல் கணையஞ்சல்! ஆசை
குவியஞ்சல்! கோடி கொடு!
597.
அன்பே! அமுதே! அருந்தவமே! நான்அருந்தும்
இன்தேன் குடமே! எழில்விரிப்பே! - உன்தேன்
குடிப்பேன்! உயிர்ஒன்றிக் கொஞ்சிக் களிப்பேன்!
படிப்பேன் காதல் பதம்!
598.
இன்னும் இரவை விழித்திடச் செய்வதேனோ!
மின்னும் அழகே! விளையாட்டேன்- பொன்னும்உன்
முன்னே பொலிவிழந்து பின்னே முகம்புதைக்கும்!
என்னே அழகொளிர் ஈர்ப்பு
599
எட்டிப் பழுத்தாலும் ஏறிப் பறித்திடுவேன்!
குட்டி முறைத்தால் உளம்குளிரும்! - வட்டிமேல்
வட்டி வளர்வதுபோல் வண்ண விழிசாலம்
கொட்டிக் குவியும் கொழித்து!
600.
மொத்தமாய் என்னை முடிந்தவளே! உன்னழகில்
பித்தமாய் நெஞ்சம் பிதற்றுதடி! - முத்தழகே!
சுத்தமாய் இல்லை சுயநினைவு! பாட்டெழுதச்
சித்தமாய் நிற்குமோ செப்பு!
(தொடரும்)
ரசிக்க வைக்கும் அஞ்சல்கள்...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
மின்னஞ்சலுக்கும் வெண்பா அடடா அருமை ஐயா. நன்றி.
RépondreSupprimerஐயா...
RépondreSupprimerஅழகிய அருந்தமிழ்ச் சொற்களை வைத்து நீங்கள் இயற்றும் பாக்களால் நிறையக் கற்கக்கூடியதாக இருக்கிறது. தமிழை ஆராய்ந்து அறிந்து கொள்ள வல்லமை இல்லாவிடத்து எனக்கு உங்கள் கவியாக்கம் அத்தனையும் அரிய புதையல்.
அழகிய கவிவரிகள். அள்ளிக்கொண்டு போகிறது என்னை.
வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!