vendredi 8 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 46]



காதல் ஆயிரம் [பகுதி - 46]

451.
காதலே வாழ்க! கருத்தொன்றி நெஞ்சங்கள்
கீதம் இசைக்கும்! கிளுகிளுக்கும்! - பாதம்
பதித்த இடம்செழிக்கும்! பாவையின் தேன்வாய்
உதித்த மொழியினிக்கும் ஊற்று!

452.
சரித்த கதைகளைச் சாற்றுகிறேன் கேளாய்!
விரித்த விழிகுள்ளே வீழ்ந்தேன்! - சரியாய்ப்
பெருத்த தனத்தழகும் என்னைப் பிடித்தே
உருத்த உருகும் உயிர்!

453.
கோல விழிப்பெண்ணே! சோளச் சிரிப்பழகே!
சாலம் புரிகின்ற தண்ணிலவே! - காலமெல்லாம்
ஞாலம் எனைப்போற்ற நற்றுணை ஆனவளே!
சீலம் செழிக்கதடி சேர்ந்து!

454.
வா..வா வளர்மதியே! வானமுதை நான்பருகத்
தா..தா தளிர்கொடியே! தண்டமிழே! - ஆகாவென்(று)
ஆடும் இளம்மயிலே! அன்பே! அருங்கவியைக்
கூடும் பொழுதினைக் கூறு!


455.
உனக்குள்ளே நானும் எனக்கள்ளே நீயும்
இணைந்துள்ளே பொங்குதடி இன்பம்! - மணக்கும்
புனைந்துள்ள பொற்கவிதை! பூமகளே கற்றுப்
புனைந்துள்ள கோபம் பொசுக்கு!

456.
பச்சைநிறச் சேலையில் பார்க்குமிடம் நின்றிருந்தேன்;!
இச்சையுற ஏங்கிடுவாய் என்றிருந்தேன்;! – மச்சானே!
கச்சணிந்த அவ்விடத்தைக் காதலுடன் நீ..பார்க்க
உச்சத்தில் ஏறும் உணர்வு!

457.
என்னைச் சிறையிடும் உன்விழிகள்! எந்நாளும்
உன்னைச் சிறையிடும் என்கவிகள்! - மின்னிடும்
பொன்னைச் சிறையிடும் பூமேனி! நம்காதல்
முன்னைப் படைத்த முடிவு!

458.
சாமப் பொழுதே விரைந்தோடு! தண்ணிலவே
காமப் பெருநெருப்பு காய்கிறது! - மாமர
தோப்புறங்கத் தோகை மயிலுறங்க என்னுயிர்க்
காப்புறங்கா தோங்கும் கணத்து!

459.
காலமெலாம் காதல் கவிபாடக் கண்ணேவுன்
சாலமெலாம் காட்டித் தழுவுக! - மாலவன்
ஞாலமெலாம் ஆள்கின்றான்! நற்கவி நானுன்றன்
கோலமெலாம் ஆள்கின்றேன் கூர்ந்து!

460.
பருத்தித் துணிச்சேலை! பாவலனைக் கொல்லும்!
கருத்தில் கயல்விழிகள் துள்ளும்! - பருவ
விருத்தி உரையெழுத மின்னும் அழகே!
திருத்தி எழுதுவாய்த் தீர்ப்பு!

(தொடரும்)

7 commentaires:

  1. காதல் காதல் காதல் இல்லையேல் சாதல் நன்று தானோ.

    RépondreSupprimer
  2. காதல் கவி மழையில் நனைந்து இன்புற்றேன்.

    RépondreSupprimer
  3. ///உனக்குள்ளே நானும் எனக்கள்ளே நீயும்
    இணைந்துள்ளே பொங்குதடி இன்பம்! - மணக்கும்
    புனைந்துள்ள பொற்கவிதை! பூமகளே கற்றுப்
    புனைந்துள்ள கோபம் பொசுக்கு!////

    மனதுக்கு இதமாக இருந்தது ஐயா...
    இந்த வரிகள்...

    RépondreSupprimer
  4. தமிழணங்கினையே உங்கள் உறுதுணையாக்கி, துணைவியாக்கி பெருங்கவி படைக்கும் அருங்கவி ஐயா!...
    உங்களால் பெருமைபெற்றது தமிழும் தமிழ்ப் பெண்களாகிய நாங்களும்தான்.

    உங்கள் கைகளில் தவழும் தமிழணங்கு பேரதிர்ஷ்டம் பெற்றவள்தான்...:)
    நாளும் நாளும் உங்கள் கவி மேலும் மேலும் சிறந்து பொலிகிறது!

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. அருமையான வரிகள் சார் ! தொடர்ந்து வருகிறேன் இன்றிலிருந்து.....

    RépondreSupprimer
  6. அருமையான வரிகள்...தங்களின் வரிகளை எப்படிப்பாராட்டுவது எனத் தெரியவில்லை

    RépondreSupprimer