mercredi 27 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 65]



காதல் ஆயிரம் [பகுதி - 65]


641.
கண்ணே உனையெண்ணிக் கட்டுக் கவியெல்லாம்
விண்ணே நிகர்த்த விரிவுறுமே! - பெண்ணே!
இனிய கனவுகள் என்னுள் நிலைக்க
இனியெனக் கில்லை இடர்!

642.
முத்துமணி மாலை முழுதுமெனை யாட்கொள்ளும்!
பத்துமணி என்னுயிரைப் பந்தாடும்! - புத்தமுதே!
சித்துமணி மையழகில் சிக்கிக் கிடக்கின்றேன்!
பித்துமணி முற்றும் பிணைந்து!

643.
சிலையென மின்னும்! செழுந்தமிழ்ச் சீர்கள்
மலையென மின்னும் மணியே! - மலரே!
கலையென மின்னும் கவிப்பெண்ணே! ஆசை
அலையென மின்னும் அடித்து!

644.
கன்னல் தமிழ்செழிக்கும்! கம்பன் கவிசிறக்கும்!
இன்னல் அகற்றிக் குறளினிக்கும்! - என்னவளே!
உன்றன் மொழிகேட்டே உள்ளம் நெகிழ்ந்துருகும்
என்றன் உயிரை இணைந்து!

645
அணிமணி மின்னும்! அருந்தமிழ் மின்னும்!
துணிமணி மின்னும் சுடர்ந்து! - பனிமலர்
மின்னும்! படர்புகழ் மின்னும்! அவளெழில்
மின்னும் கவியெனை வென்று!

646.
அலகிலாக் கற்பனையை அன்னவள் நல்க
உலகெலாம் சுற்றிவரும் உள்ளம்! - மலரெலாம்
சொக்கிக் களிக்கும் சுடரழகில் என்னெஞ்சம்
சிக்கிக் களிக்கும் செழித்து!

647.
உன்றன் மடல்படித்து உள்ளம் குளிர்ந்ததடி!
தென்றல் தழுவும்உன் கைபோன்று! - மன்றதிரப்
பேசிக் களிக்கும் பெருங்கவியை உன்விழிகள்
வீசிப் பிடிக்கும் விரைந்து!

647.
மங்கைதரும் இன்ப மயக்கத்தில் பாட்டெழுதக்
கங்கைதரும் புண்ணியத்தைக் காண்கின்றேன்! - பொங்கிவரும்
கற்பனைக்கு ஏதுதடை? கன்னற் கவிக்கன்னி
நற்றுணைக்கு ஏதுதடை நல்கு!

648
உருவில் இரண்டாய் உயிரினில் ஒன்றாய்த்
தரும்சொல் இணைந்து தழைக்கும்! - வரும்நொடிகள்
வார்க்கும் நினைவுகள் வாச மலர்ச்சோலை!
சேர்க்கும் கனவுகள்!செந் தேன்!

649.
உன்பெயர் ஓதுமடி என்னிதயம்! எந்நொடியும்
என்பெயர் ஓதுமடி உன்னிதயம்! - பொன்மகளே!
எண்ணும் பொழுதெல்லாம் இன்பம் சுரக்குதடி!
உண்ணும் அழகே! உதவு!

650.
உடல்நிலை நோயால் உறும்நிலை கேட்டே
இடர்நிலை எய்தும் இதயம்! - தொடர்ந்து
படர்நிலை காணும் துயர்நிலை! பார்வை
சுடர்நிலை குன்றும் சுருண்டு!

(தொடரும்)

4 commentaires:

  1. ஐயா வணக்கம்!

    ஏதுதடை தமிழ்சுவைக்க அலை
    மோதும் உங்கள் கவிகேட்டால்
    போதுமென்று போகமுடியாமல்
    சூதுசெய் சூழலாகி சுழண்டிட்டோமே...

    RépondreSupprimer
  2. படித்துக் களித்தேன்
    தங்கள் கவிதைகளைத் தொடர்ந்து படித்து வந்தாலே
    யாரும் கவி புனைய முடியும்
    நானுமந்த நோக்கில் தங்கள் படைப்புகளை
    தொடர்ந்து படித்து வருகிறேன்
    ஏகலைவனாக ஆசை.பார்ப்போம்

    RépondreSupprimer
  3. அன்புள்ள பாரதிதாசன் ஐயா...

    வணக்கம். நிரம்பிய ஆற்றலைக் கவிதைகளில் காண்கிறேன். இவ்வுலகம் அன்பு (காதல் ) மயமாக மாறவேண்டும். அதைத்தான் எல்லோரும் விரும்புகிறேன். இருப்பினும் ஒரு வேண்டுகோள் உஙகளின் இலக்கிய இலக்கணப் புலமையை சிறுவர்கள் எதிர்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்ளும் விதமாக பல்வகைப் பொருண்மைகளில் கவிதை எழுத. வெண்பா எழுத எனக் கற்றுக்கொடுக்கும் தொடரையும் ஆரம்பிக்கலாமே... யோசித்துப் பாருங்கள் ஐயா.. வணக்கம்.

    RépondreSupprimer