காதல் ஆயிரம் [பகுதி - 58]
571.
வன்படை ஏற்று வழிநடத்தும் மன்னவனே!
பொன்படைப் பூவெனை வென்றவனே! - தென்னவனே!
இன்னடை யாக இனிப்பவனே! இன்பத்துள்
என்னுடை யாக இரு!
572.
உருக்கியெனை வாட்டும் உயர்மார்பா! காதல்
பெருக்கியெனை வாட்டும் பிணிக்கு - மருந்தாய்ச்
சிறுக்கியெனைச் சிந்தாமல் செல்லமாய்த்
தூக்கி
இறுக்கியெனை முத்தம் இடு!
573.
பார்க்கின்ற பார்வையில் பாவையின் உள்ளத்துள்
சேர்க்கின்ற காதல் செழித்தோங்கும்! - கோர்த்துப்
புதிய மலரின் புகழ்தொடுத்துப் பாட
இதயக் கவியே எழு!
574.
பரந்தவுன் மார்பினைப் பாவைநான் பற்றித்
திரண்டவுன் வன்மையைத் தீண்ட - இருண்டெழும்
வானின் மழைபோல் வளர்ந்தெழும் ஆசைகள்!
தேனின் மழைபோல் திரண்டு!
575.
அன்புக்(கு) அலைபாயும் என்னகத்தை ஏனடி
துன்பத்துள் தள்ளித் துரத்துகிறாய்? -
என்செய்வேன்?
கும்முக்(கு) எனவிருக்கும் கோல வடிவழகு
வம்புக்(கு) இழுக்கும் வரிந்து!
576
கண்தூது தந்தவளே! காதல் கமழ்ந்திட
மென்தூது தந்தவளே! வெண்ணிலவே! - இன்தூது
நான்பெற்றுத் துள்ளுகிறேன்! நாளும் அதைப்படித்துத்
தேன்சொட்டும் என்னுள் திரண்டு!
577.
நாளை வருவதாய் நங்கை உரைத்திட்டாள்!
காளை மகிழ்விற்(கு) ஏதுகணக்கு? - காலையிளம்
பாளை சிரிப்பழகும் சூளை உதட்டழகும்
ஆளை அசத்தும் அழகு!
578.
பாடிமுத் தங்கள் படைப்பாயா? பொன்மயிலே!
ஆடிமுத் தங்கள் அளிப்பாயா? - நாடியெனைச்
சூடிமுத் தங்கள் சுரப்பாயா? நாள்தோறும்
கோடிமுத் தங்கள் கொடுத்து!
579.
நீ..நடந்த பாதை! நெடும்புகழ்ப் பைந்தமிழ்ப்
பா..நடந்த பாதை! பசுங்கிளியே! - வா..நடந்து
பூ..நடந்த பாதை! புலவன்என் நெஞ்சமெனும்
கா..நடந்த பாதை கவர்ந்து!
580.
எங்கடி சென்றனை என்னை மறந்து..நீ?
இங்கிடி பட்டே எரிகின்றேன்! - வங்கக்
கடலலை வந்துயிர் வாட்டுதடி! என்றன்
உடல்நிலை தேறுமோ ஓது!
(தொடரும்)
ஒவ்வொரு ஈற்றடியும் அற்புதம்,
RépondreSupprimerசொல்லாடல் வியக்க வைக்கிறது ஐயா...
RépondreSupprimerஐயா!....
RépondreSupprimerஅழகிய சொற்கள், நான் படிக்கும் காலத்தில் நினைவில் இருந்தவை இன்று உங்கள் கவியால் மீண்டும் மனதில் புதுப்பிக்கப்பட்டது.
வணக்கமும் வாழ்த்துக்களும்....
தினந்தினம் இங்குதரும் திகட்டாத தேந்துளியெம்
இனமது எழுந்திட இயக்கிடும் உமதரும்பணி
கனஞ்செய்து நாள்தோறும் கவிபாடி இங்குஎன்
மனமது கவிகற்குமே மானசீகமாகவே!
RépondreSupprimerநீ..நடந்த பாதை! நெடும்புகழ்ப் பைந்தமிழ்ப்
பா..நடந்த பாதை! பசுங்கிளியே! - வா..நடந்து
பூ..நடந்த பாதை! புலவன்என் நெஞ்சமெனும்
கா..நடந்த பாதை கவர்ந்து!
அருமை ! மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா...