mardi 19 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 57]


காதல் ஆயிரம் [பகுதி - 57]


561.
தள்ளி விடுவதேன்? தாகப் பெருமனத்தைக்
கிள்ளி விடுவதேன்? கிள்ளையே! - அள்ளி
அணைக்கமனம் ஏங்குதடி! நம்முயிரை அன்பால்
பிணைக்கமனம் ஏங்கதடி பேசு!

562.
தாகம் கொடுத்தவளே! தாவி அணைத்தாட
மோகம் கொடுத்தவளே! முத்தமிழே! - வேகமுடன்
ஓடும் இயந்திரமாய் உள்ளம் உருளுதடி!
கூடும் நினைவுகளைக் குவித்து!

563.
ஊடல் பொழுதும் உவந்தருளும் இன்பமெனப்
பாடல் இருக்கும் பசுங்கிளியே! - வாடும்
வலியில் துடிக்கின்றேன்! வார்க்கச்சொல் இல்லை!
அலையில் மிதக்கும் அகம்!

564.
என்ன அழகடி! என்னுயிரின் ஓட்டத்தைச்
சின்ன இதழ்கள் சிதைக்குதடி! - தின்னக்
கொடுத்த இனிப்பல்வா! கொஞ்சும் கிளியே
எடுக்க தடையேன் இனி!

565.
குரலிசை கேட்டுக் குளிருதடி உள்ளம்!
அருளிசை மாதே! அமுதே! - பொருளிசை
கொஞ்சிக் குலவுதடி! கோதையே உன்னழகில்
நெஞ்சி குலவுதடி நீண்டு!

566.
பேசத் துடிக்குதடி! பெண்ணே உனைத்தழுவி
வீசத் துடிக்குதடி மென்காற்று! - வாசமலர்
பூத்துப் பொலிந்தாடும் பொற்கொடியே! உன்னழகைச்
சேர்த்துப் பொலிந்தாடும் சிந்து!

567.
விட்டுப் பிரிந்து வெகுதூரம் சென்றவளே!
சிட்டுப் பிரிந்(து)இணை சேருதடி! - பட்டுடல்
தொட்டுத் தடவிச் சுகிழ்த்தநிலை வேண்டுமடி 
எட்டுப் பிறப்பும் எனக்கு!

568.
என்னடி பெண்ணே! எழிலாய் நடக்கின்ற
பொன்னடி கண்டுடல் புல்லரிக்கும்! - என்மார்பு
வன்னிடி தாங்கும்! வளர்மதியே உன்னுடைய
மென்னிடிக் கேங்கும் மெலிந்து!

569.
வளம்பெற வேண்டும்! மணக்கும்நம் காதல்
நலம்பெற வேண்டும் நயந்து! - மலரே
கயல்போல் களித்திடும் கண்ணழகைக் காட்டு!
வயல்போல் செழித்திடும் வாழ்வு!

570.
கற்பனை மின்னும்! கவிபாடச் சொற்களின்
நற்றுணை மின்னும்! நலம்மின்னும்! - பற்பல
அற்புதம் மின்னும் அழகுடையாள்! அன்னவளின்
பொற்பதம் மின்னும் பொலிந்து!

[569 ஆம் வெண்பா விற்பூட்டு அணியில் அமைந்தது.
வெண்பாவின் ஈற்றுச்சொல், 
வெண்பாவின் முதல் சொல்லுடன் 
தொடா்பு உடையதாக அமைய வேண்டும்.
வளம்பெற என்று தொடங்கி வாழ்வு என்று முடிந்துள்ளது
வாழ்வு வளம்பெற வேண்டும் எனப் பொருள் தொடா்பு 
அமைய வேண்டும்]

[570 ஆம் வெண்பா நாலடித் தொடா்பு அணி அமைந்துள்ளது
வெண்பாவின் தனிச்சொல், 
வெண்பாவின் நான்கு அடிகளுக்கும் தொடா்பு உடையதாக அமைகின்ற புதிய அணியை நான் உருவாக்கியுள்ளேன்.
வெண்பாவின் தனிச்சொல் பற்பல
பற்பல கற்பனை மின்னும்
பற்பல நற்றுணை மின்னும்
பற்பல அற்புதம் மின்னும்
பற்பல பொற்பதம் மின்னும்

(தொடரும்)

5 commentaires:

  1. முடிவில் விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா... நன்றி...

    RépondreSupprimer
  2. ஐயா பிரமிக்க வைத்தது பாக்களும் விளக்கமும் . வணங்குகிறேன்.

    RépondreSupprimer
  3. ஐயா... வியக்க வைக்கின்றன உங்கள் பாக்கள். நாம் தேடி அலைந்தாலும் எம் வாழ்நாள் காலத்தில் இப்படி ஒரு அரிய வாய்ப்பைப் பெறுவோமா என்பது சந்தேகமே. அற்புதப் பொக்கிஷமாக நீங்கள் தரும் பாக்கள் இருக்கின்றன. அதுவும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் தருவது மேலும் சிறப்பே.

    விற்பூட்டு அணி, நாலடித் தொடா்பு அணி அருமையாக இருக்கிறது.
    உங்கள் விளக்கமும் அதற்காகவே பாடப்பட்ட பாக்களுங்கூட சிறப்பாக உள்ளது.

    அத்தனையும் பேணிக்காக்க வேண்டிய சொத்துக்கள்! மிக்க நன்றி!

    உங்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  4. ஐயா!...
    நீங்கள் சொல்லித் தந்திருக்கும் இந்த விற்பூட்டு அணியென கீழே ஒரு கவி படித்துள்ளேன். பாருங்கள். தவறினைச் சுட்டிக்காட்டுங்கள்.
    ஆர்வத்தினால் எழுதிப்பார்த்தேன். தகுதி இல்லாவிடின் தவிர்திடுங்கள்.
    பிழை பொறுத்தருள வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா!

    பேசப் பிடிக்கும்! பெருமை சேர்க்கும்!
    பாசமாய் வாழ்வில் பண்பினை ஊட்டும்!
    பாக்கள் படைக்கும் பாவலரே! உங்களைப்
    பூக்கள்தூவிப் போற்றுமே தமிழ்!

    RépondreSupprimer

  5. புதியதோர் அணியை உருவாக்கி , தமிழ் இலக்கியத்தில் ( இலக்கணத்தில் ) யாரும் படைக்காத சாதனையைப் படைத்து விட்டீர்கள்

    RépondreSupprimer