mercredi 27 mars 2013

வானவில்




வானவில்

பகலவன் நெய்த
பட்டுச் சேலை!

இயற்கை இயற்றிக்
கவிதை நூலின்
மேல் அட்டை!

இயற்கை மகள்
எழுதும் ஓவியக்
கோடுகள்!

வானப்பெண்ணின்
வண்ணத் தாவணி

வான தேவதை - தன்
நகங்களுக்கு இட்ட
வண்ணங்களோ?

வானமகள் சூடும்
தலையணியோ? - அல்லது
கருங்குழலைக் கட்டும்
வண்ண ''ரிப்பனோ''

வானத்தில் சேலைகளைப் பரப்பி
ஏலம் விடும் ஏந்தல் யாரோ?

வானத்தில் மாநாடு
நடக்கிறது
வானவில்தான் நுழைவாயில்!

வானத்தில்
வண்ணக் கொடி பறக்கிறது -ஓகோ
அங்கே சுதந்திர திருநாளா?

வானவில்லே! - உன்
நிறங்களை எண்ணி விடலாம்! - ஆனால்
எங்கள் மனிதரின் நிறங்களை
எண்ணிட முடியா?

நிறங்களைப் பார்த்து
வேற்றுமையை வளர்க்கின்றார் மாந்தர்!
உன்னுள் இருக்கும் ஒற்றுமையை
உலகோர் ஏற்பதென்றோ?

வானவில்லே!
உனக்கும் - எங்கள்
அரசியல் வாதிக்கும்
ஓர் ஒற்றுமை உண்டு! - நீ
தோன்றுவாய் - பின்
மறைந்துவிடுவாய்!
எங்கள் அரசியல் வாதிகள்
வாக்குச் சீட்டைப்
பெற்றவுடன் - எங்கோ
மறைந்துவிடுவார்!

வானவில்லே!
என் காதலியின் புருவம்போல்
என்னுயிரைக் கவர்கின்றாயே!

இருளை ஓட்டும்
இளங்கதிர் வரவாய்
இன்பம் தந்தாய்! - கவிதைப்
பொருளைக் கூட்டிப்
பொலிந்தாய் என்னுள்!
மீண்டும் உன்னைக்
காண்பதென்றோ?

என் காதலிபோல் - நீயும்
என்னை மறந்துவிடதே!


4 commentaires:

  1. அழகான வானவில்லின் நிறங்கள் போல விதவிதமாக வந்த உணர்வு...
    அருமை. நல்ல கற்பனை...

    ஏழுவர்ணங்காட்டி
    எழுகின்ற வானவில்லில்
    சூழ்ந்த எண்ணங்களோ
    சொல்லிலடங்லா
    காட்டும் கவியில் நீங்கள்
    நாட்டு நடப்பினை மெல்ல
    பாட்டுக் கருத்தினிலே சொல்லிச்
    சாட்டினீர் மெல்ல எங்கோ...

    RépondreSupprimer
  2. நிறங்களைப் பார்த்து
    வேற்றுமையை வளர்க்கின்றார் மந்தர்!
    உன்னுள் இருக்கும் ஒற்றுமையை
    உலகோர் ஏற்பதென்றோ?.......

    தங்களின் ஏக்கம் புரிகின்றது அய்யா.நன்றி

    RépondreSupprimer
  3. இயற்கை மகள்
    எழுதும் ஓவியக்
    கோடுகள்!

    வண்ண வண்ணமாய் ஒளிரும் வரிகள் அருமை ..

    RépondreSupprimer
  4. வேற்றுமைகளை பார்ப்பவர்கள் மனிதர்களே அல்ல...

    நடக்கும் உண்மைகளை அழகாக சொல்லி உள்ளீர்கள் ஐயா...

    முடிவில் இரு வரிகள் "ஏன்..?" என்னும் கேள்வி கேட்கத் தோன்றுகிறது...

    RépondreSupprimer