காதல் ஆயிரம் [பகுதி - 55]
541.
வந்தாள் மலர்க்கொடியாள்! சிந்திசைக்கச்
செந்தமிழைத்
தந்தாள் கனிமொழியாள்! தந்ததன - சந்தமிட
விந்தை நடம்புரிந்தாள்! விக்கும் மனத்திற்கு
மொந்தை மதுகொடுத்தாள் முன்!
542.
உன்முகம் பார்க்கின்ற ஒவ்வொரு நாளுமே
என்னகம் ஏந்தும் வளர்பிறையே! - மின்னிடும்
பொன்முகம் காணாப் பொழுதெலாம் தேய்பிறையே!
வன்சுமை ஏறும் மனத்து!
543.
உன்குரல் ஓசை உயிர்க்கூட்டில் சுற்றுதடி!
பொன்திரள் மார்பு பொலியுதடி! - என்னுடைய
வன்திரள் நெஞ்சம் வளர்ந்து புடைக்குதடி!
பன்திரள் எண்ணம் படர்ந்து!
544.
மெல்லிய புன்னகை உள்ளுயிர் கீழ்வரை
அள்ளிய செய்கையை அப்பப்பா! - கள்ளியே!
சொல்லிய சொற்கள் சுழன்றே இழுக்குதடி!
தள்ளியே நின்றெனைத் தாக்கு!
545
கூடிக் களிக்கும் குளிர்மொழியாள் பார்வையில்
பாடிக் களிக்கும் பசுஞ்சோலை! - நாடியில்
ஓடிக் களிக்கும் உணர்வலைகள்! இன்பத்தைச்
சூடிக் களிக்கும் சுரந்து!
546.
கோடி மலர்கள் குவிந்ததுபோல் கொஞ்சுதமிழ்
பாடி மலர்கள் படைப்பவளே! - தேடிவர
ஆடி மலர்கள் அமுதூட்டும்! அன்பே!நீ!
கூடி மலர்கள் கொடு!
547.
வானில் வளம்வரும் ஊர்தியில் நானமர்ந்தேன்!
ஊனில் வளம்வரும் உன்னினைவு! - நாணமுடன்
மானின் வளம்வரும் மங்கை தருங்கவிதை
தேனின் வளம்வரும் தேர்ந்து!
548.
நீ..வரும் நாளெண்ணி நெஞ்சம் நெகிழ்ந்ததடி!
பூ..வரும் காலம் புலர்ந்ததடி! - நாவினிக்கப்
பா..வரும் பாதை திறந்ததடி! உன்னழகோ
தேவரும் காணாத் தெளிவு!
549.
எனக்காக வாங்கிவரும் இன்றமிழ் நூல்கள்
கனக்காகப் பேசுதடி காதல்! - மனமோ
உனக்காக ஏங்கி உலறும் கவிதை
மினுக்காக மின்னும் மிளிர்ந்து!
550.
அப்படிப் பார்க்காதே! என்னகம் ஆடுதடி!
எப்படிச் செய்தான் இறைவனுனை! - இப்படிநான்
ஏங்கிக் குலைகின்றேன்! இன்னல் இரவுகளைத்
தாங்கிக் குலைகின்றேன் தாழ்ந்து!
(தொடரும்)
அருமை ஐயா...
RépondreSupprimerநேற்று முழுக்க ஒரு திரட்டி பிரச்சனையால் உங்கள் பக்கம் பலமுறை முயன்றும் வர முடியவில்லை... இன்று அந்த பிரச்சனை இல்லை...
Supprimerவணக்கம்!
கணிப்பொறி நோயைக் கலையும் வழியை
அணியெனச் சொன்னீா் அறிந்து
தேடி மலர் எடுத்தேன்
RépondreSupprimerதேனினும் இனிய கவிதை படித்தேன்
அமுதொன்றும் தேவையில்லை
ஆயிரம் பாக்கள் போதுமே.
Supprimerவணக்கம்!
கோடி மலா்ச்சோலை கொண்டொளிரும் பேரழகைப்
பாடிக் களிக்கின்ற பாவலன்நான்! - நாடியே
சந்தக் கவியழகி தந்த தமிழமுதம்
சிந்தை மயக்கும் செழித்து!
வண்ணங்கொண்ட வெண்நிலவோ! அவள்
RépondreSupprimerபண்ணதுபாடிப் பரவசமாக்கும் நற்தமிழ்ப்
பெண்னென நிற்கும் பேரழகோ! உங்கள்
எண்ண(ம்)கள் உற்றகவி தருகுதே எமக்கும் களி...
Supprimerவணக்கம்!
எண்ணம் மயங்கும் இளங்கொடியாள்! இன்பூறும்
வண்ணம் வழங்கும் வளா்மதியாள்! - பெண்ணினமே
ஆகா எனவியக்கும் அற்புத பேரழகி!
ஓகோ எனப்போற்றி ஓது!
இன்பக் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமை !..
RépondreSupprimerமேலும் தொடர என் வாழ்த்துக்கள் .......
Supprimerவணக்கம்!
இன்பக் கவிதைகள் ஏங்கித் தவமிருக்கும்
அன்பாய் அவளை அடைந்திடவே! - இன்றேன்
இனிமை எனும்சொல் இருக்குமிடம் கற்றேன்!
தனிமை அளிக்கும் தமிழ்!