காதல் ஆயிரம் [பகுதி - 43]
421.
பேரழகுப் பெட்டகமே! பெண்மயிலே தேடுகிறேன்
ஓரழகும் இல்லை உனக்கீடாய்! - தேரழகு!
மார்பழகு! சின்ன மலையழகு! என்பதெலாம்
சார்பழகுச் சொல்லெனச் சாற்று!
422.
கள்குடித்த இன்பத்தைக் கண்ணழகு தந்ததடி!
உள்படித்த எண்ணம் உளருதடி! - நல்லதமிழ்ச்;
சொல்வடித்த வண்ணம் சுவைக்குதடி! நான்வல்ல
வில்லெடுத்த வீரன் விரும்பு!
423.
இன்பத் தமிழூட்டும்! இன்..பா சுவைகூட்டும்!
எண்ணம் இனிக்க இசைமீட்டும்! - வண்ணங்கள்
பின்னி அரங்கேறும்! பன்னீர் மழைபொழியும்!
கன்னிவிழி தந்த கணை!
424.
தேக்காய் இருந்தொளிரும் தேகம் இலகுதடி!
வாக்காய் இனிக்குதடி வாய்ச்சொற்கள்! –
நேக்காகக்
காக்காய்ப் பிடிக்கவில்லை! கன்னியுன் கட்டழகு
தூக்காய்த் தெரியுமுயிர் தொட்டு!
425
அருளும் பொருளும் அணியெனப் பெற்றுத்
திருவும் கலையும் திகழப்! - பருவம்
பெருகும் அழகே! பருகும் அமுதே!
உருகும் உயிரோ உருண்டு!
426.
கருணா கரனை ஒருபாகம் கொண்டாள்
திருநா அருள்கின்ற செல்வி! - அருமாங்
கனியே! முழுதுமெனை ஆளும் கலையே!
அணியே! அருள்வாய் அனைத்து!
427.
வெக்கம் எதற்கடி? வேதனை போக்கிடவே
பக்கம் ஒதுங்கடி! பள்ளியறை - சொக்குமடி!
அக்கம் இருந்தவர்கள் அங்காடி போந்தனரே!
துக்கம் விடுத்தெனைத் தூண்டு!
428
அன்ன நடையழகு! வண்ண உடையழகு!
சின்ன இடையழகு! சித்திரமே! - பொன்மலரே!
சொன்ன மொழியழகு! சொக்கும் விழியழகு!
என்ன உரைப்பேன் இனி!
429
ஆக்கும் கவிதையெல்லாம் அன்புதனை ஊட்டுதடி!
போக்கும் வழியறிந்தும் பூவே!நீ - தாக்குவதேன்?
ஏக்கம் நெகிழ்ந்துருக என்னருகே நீயிருந்தால்
தூக்கம் வருமோ துணிந்து?
430.
வருகிறேன் என்றவுடன் வானவில் தோன்றும்
தருகிறேன் தண்டமிழ்ச் சந்தம்! - பெருகுதே
கற்பனை இன்பம்! கனியிதழ் முத்தங்கள்
நற்றுணை நல்கும் நலம்!
(தொடரும்)
இது வரை அறியாத கற்பனை வளமும் சொல்லழுகும் இனைந்து காந்தமாய் இழுக்கிறது வெண்பாக்கள்
RépondreSupprimerபடிக்க படிக்க பரவசம் பொங்குகிறது...
RépondreSupprimerஅருமை...
இன்பத் தமிழூட்டும்! இன்..பா சுவைகூட்டும்!
RépondreSupprimerஎண்ணம் இனிக்க இசைமீட்டும்! - வண்ணங்கள்
பின்னி அரங்கேறும்! பன்னீர் மழைபொழியும்!
அழகுக்கவிதை ! பாராட்டுக்கள்..
வானவில் ரசிக்க மறந்தேன்
RépondreSupprimerவார்த்தை ஜாலத்தில் மயங்கி நின்றேன்.
என்ன வர்ணனை....! அழகு....
RépondreSupprimerஅடடா .
RépondreSupprimerநானும் காதல் வெண்பாக்கள் எழுதி வைத்திருக்கிறேன். ஒரு நூறு தேறும். இங்கே அருவியாய்க் கொட்டுகிறதே.
அருமையான உவமானங்களுடன் அருஞ்சுவைக்கவிகள்!
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா!
சிறக்கும் பாக்கள் உம்சிந்தையில் என்றும்
சுரக்கும் தேந்தமிழ் ஊற்றுக்கள் கண்களை
நிறைக்கும் கனவுபல காட்டும் கவிபடிக்க
பறக்குமெம் எண்ணங்கள் வான்னோக்கியேதான்...
தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.
RépondreSupprimer