காதல் ஆயிரம் [பகுதி - 62]
611.
கண்ணிரண்டும் ஏங்குதடி! காதல் கவியின்றி
மண்ணிருண்டு போனதடி! வாடுகிறேன்! - எண்ணத்துள்
புண்ணிறைந்து குத்துதடி! பூவே எனைவெறுத்தால்
விண்ணடைந்து வாழ்வேன் விரைந்து!
612
பனியென்ன? துன்பப் படையென்ன? காலச்
சனியென்ன? தாங்கி எழுவேன்! - துணிந்தே
இனியென்ன செய்வாயோ? ஏங்குமென் நெஞ்சம்!
கனியன்ன பெண்ணே கதை!
613.
தேன்விழி என்றவன் தேள்விழி என்கிறான்!
மான்விழி! மைவிழி என்றவன்! - ஏன்மறந்தான்?
வான்மதி என்றவன் வானிடி என்கிறான்!
கூன்மதி ஆனேன் குலைந்து!
614.
கட்டுண்டேன் காதல் மொழியழகில்! நாள்தோறும்
வெட்டுண்டேன் மோதல் விழியழகில் - தொட்டுன்றன்
மொட்டுண்டேன்! மோகத்தேன் சொட்டுண்டேன்!
உன்னிடம்
இட்டுண்டேன் இன்பம் இசைத்து!
615.
முகத்திலே முத்தம் பதிக்காமல் கொஞ்சும்
அகத்திலே அன்பாய் அளிப்பாய்! - சுகத்தின்
இதத்திலே சொக்கும் இதயம்! சொல்லும்
பதத்திலே இன்பம் படைத்து!
616.
வானவில் காரிகையே! வண்ணவிழிப் பார்வையால்
ஆன..வில் எய்தும் அருமழகே! - தேன்மொழியே!
மானவில் ஏந்தும் மறவன் மனமுனைக்கண்(டு)
ஊனவில் ஆகும் உடைந்து!
617.
பாட்டொன்று பாடப் பணிகின்றேன்! பாவையுடன்
கூட்டொன்று வைத்துக் குளிர்ந்திடவே! -
வாட்டுவதேன்
காட்டொன்று காட்டி? கவிஞனென் பாதையில்
பூட்டொன்று போடுமோ பூ?
618.
பூக்கள் மலர்ந்தாடும் பொற்பாவை புன்னகையில்
பாக்கள் மலர்ந்தாடும்! பாகருந்த - ஊக்கமுடன்
ஈக்கள் பறந்தாடும்! என்னுயிரை உன்னழகு
தாக்கப் பறந்தாடும் சார்ந்து!
619.
முள்ளொன்று தைத்தவலி முற்றும் மறந்தேன்!உன்
சொல்லொன்று தைத்தவலி கொல்லுதடி! - கள்ளியே!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதேன்?
கல்லொன்று கொண்டாய் கனத்து!
620.
பூவிளங்கு போட்டவளே! பொன்மானே! காதலின்
பா..விளங்கக் கூடிப் படிப்போம்..வா! -
ஓவியமே!
நீ..விளக்கம் சொல்ல நெகிழ்ந்துருகி நான்சொல்ல
மாவிளக்கம் காண்போம் மகிழ்ந்து!
(தொடரும்)
முள்ளொன்று தைத்தவலி முற்றும் மறந்தேன்!உன்
RépondreSupprimerசொல்லொன்று தைத்தவலி கொல்லுதடி! - கள்ளியே!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதேன்?
கல்லொன்று கொண்டாய் கனத்து!
எந்த வலி பொறுத்திடினும் இந்த வலி தாங்காது.
உண்மைதான் ஐயா .மனத்தைக் காயப் படுத்தி விட்டால் அதற்க்கு மருந்தேது ! அருமை ! வாழ்த்துக்கள் மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .
Supprimerவணக்கம்!
மோதல் வலியை முறியடிக்கும் வன்மறவன்!
காதல் வலியால் கலங்குகிறேன்! - மாதவள்
பொல்லாத் தலைக்கனத்தால் சொல்லால் எனைச்சுட்டாள்!
அல்லா பொறுப்பார் அதை!
/// முகத்திலே முத்தம் பதிக்காமல் கொஞ்சும்
RépondreSupprimerஅகத்திலே அன்பாய் அளிப்பாய்! ///
ரசிக்க வைக்கும் வரிகள் பல...
வாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
சுவைதரும் பேரழகில் சொக்கிநான் பாட
அவைதரும் அன்பாம் அமுதை! - தவஞ்சோ்
அவை..தரும் அந்தமிழை! இக்கவிபோல் இன்பம்
எவைதரும் இங்கே இயம்பு!
காதம் ஆயிரம்- ஒவ்வொரு துளியும் தேனமுதம்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தேன்துளி ஊறுகின்ற தேவதையின் பூஉதட்டில்
நான்துளி உண்டேன்! நடந்துவரும் - மான்..கிளி
வண்ண மயிற்கூட்டம் வந்தாடும் கற்பனையால்
எண்ணம் இனிக்கும் இசைத்து!
வணக்கம் ஐயா...
RépondreSupprimerஇதந்தரும் கவியமுதம் இனிதாய் எமக்கும்
பதமாகப் கூறிடும் பலகதைகள் உங்கள்கவியில்
விதவிதமாய்ச் சொற்களை விரும்பிநாம் பயில
நிதம்வந்தோம் இங்கு நிறையவே தாருமின்னும்...
Supprimerவணக்கம்!
உலக மொழிகளில் உள்ளசுவைச் சொற்கள்
நிலவவள் நெற்றியில் நிற்கும்! - புலவன்யான்
என்ன உரைத்தாலும் எல்லாம் சிறிதளவே!
அன்னவள் அன்பின் அகம்!