காதல் ஆயிரம் [பகுதி - 49]
481.
மந்திரப் பார்வை மலர்க்கணைகள் வீசிட!
தந்திரச் சொற்கள் சலங்கையிட! - சிந்தனையும்
இந்திரச் சோலையை ஏகிக் களிக்குதடி
சுந்தரப் பாக்கள் சுரந்து!
482.
சிட்டுக் குருவிகள் சேர்ந்தாடும் காட்சியிலும்
கட்டுக் குழலழகே காண்கின்றேன் - மொட்டழக
விட்டுப் பிரியாமல் கொட்டிக் கொடுத்தசுகம்
எட்டுப் பிறவிகளுக்(கு) ஈடு!
483.
கயலிரண்டும் காதல் கலைபயிலும்! சின்ன
முயலிரண்டும் முட்டி முகரும்! - உயர்ந்தே
வயல்விளைய வாழும் பறவைகள்! அன்பே
துயர்தொலைய செய்திடுவாய் சூழ்ந்து!
484.
விஞ்சுமடி காதல் கனவுகள்! கற்பனைகள்
மிஞ்சுமடி கண்பறிக்கும் மின்னலென! - வஞ்சியே!
கொஞ்சுமடி கோவைக் கனியமுதைக் கேட்டுருகிக்
கெஞ்சுமடி நெஞ்சம் கிடந்து!
485.
மல்லிகைக் பந்தல்! மரகதப் பொற்குவியல்!
நல்லிசை ஊற்று! நறுங்காற்று! - அல்லி..நீ
சொல்லிசை இன்பம்! சுடரும் கலைப்பெருக்கு!
மெல்லிடை மின்னும் மிளிர்ந்து!
486.
வான்போல் இடிக்குதடி! மீன்போல் துடிக்குதடி
தேன்போல் இனித்தஉனைத் தேடிமனம்! - ஏன்மறந்தாய்?
தூண்போல் இருந்தவுளம் கூன்போல் விழுந்ததடி!
வீண்போல் கிடக்கதடி வெந்து!
487.
பருந்து விழிக்கூர்மை பாவையின் பார்வை!
விருந்து படைக்க விரும்பும்! - பெருமை
பொருந்தும் மனத்துள் புகுந்தவுன் ஆசை
அருந்தும் அழகை அணைத்து!
488.
பூஞ்சேலை தந்தாய்! பொலிவுடன் கட்டிநான்
மாஞ்சோலை பக்கம் மயங்கிவர – வாஞ்சையுடன்
தேன்குடித்த தென்னவனே! தேடிவந்து உன்னிடத்தில்
நான்படித்த பாடம் நடத்து!
489.
கண்கட்டு வித்தைகளைக் காட்டாதே! ஏமார்ந்து
புண்பட்டுப் போகும் புலவனுயிர்! - வெண்ணிலவே!
பொன்பட்டு மேனிப் பொலிவினிலே ஏங்குகிறேன்
என்கட்டு மேனி இளைத்து!
490.
பிறவா நிலையேன்? இறவாத் தமிழை
உறவாய் உயிராய் உடையேன்! - அறஞ்சேர்
மறவா! கவிவளவா! மாலை நிகழ்வை
மறவா துரைத்தேன் மகிழ்ந்து!
(தொடரும்)
அருமை...
RépondreSupprimerநெஞ்சமதை நீங்கா
RépondreSupprimerநிரந்தரமாய் என்றும்
தஞ்சமெனத் தமிழ்மொழி
மங்கையிடம் நீதந்து
கொஞ்சிக் குழையும்
சேயெனப் பாக்களை - உன்
அஞ்சுகத்திடம் பெற்றனையோ
தந்தையெனவுமாகினையோ!
மல்லிகைக் பந்தல்! மரகதப் பொற்குவியல்!
RépondreSupprimerநல்லிசை ஊற்று! நறுங்காற்று! - அல்லி..நீ
சொல்லிசை இன்பம்! சுடரும் கலைப்பெருக்கு!
மெல்லிடை மின்னும் மிளிர்ந்து!
அழகு வரிகள்..பாராட்டுக்கள்..
பிறவா நிலையேன்? இறவாத் தமிழை
RépondreSupprimerஉறவாய் உயிராய் உடையேன்! - அறஞ்சேர்
மறவா! கவிவளவா! மாலை நிகழ்வை
மறவா துரைத்தேன் மகிழ்ந்து!
வாழ்த்துக்கள் ஐயா எந்நாளும்
இதுபோன்றே வண்ணக் கவிதைகள் வடித்து
உங்கள் எண்ணம் போல் தமிழுக்கும் பெருமை
சேர்த்திடுங்கள் !