காதல் ஆயிரம் [பகுதி - 53]
521.
கனிவுறு பார்வை! கமகமக்கும் மல்லி!
பனியுறு இன்பம்! பசுந்தேன்! - இனிய
கனவுறு காட்சிகள் கண்களில் ஆட
நினைவுறு இன்பமோ நீண்டு!
522.
சிவப்புநிறச் சேலை! சிரித்தெனைத் தாக்கும்!
உவப்புற ஏற்றும் உணர்வை! - தவப்பூவே!
என்னுயிரை வாட்டி வதைக்காதே! ஏங்குகிறேன்!
உன்னழகைக் காட்டி உயர்த்து!
523.
என்னை மறந்ததுமேன்? என்கை விரல்கொண்டு
கண்ணைப் பெயர்த்ததுமேன்? கன்னெஞ்சம் -
கொண்டதுமேன்?
உன்னைச் சரணடைந்தேன் உள்ளம் உயருமென!
மண்ணைக் கொடுத்தாய் மகிழ்ந்து!
524.
கொஞ்சிச் சிணுங்கும் குயின்மொழியில் என்னுடைய
நெஞ்சி சிணுங்கி நெகிழ்ந்துருகும்! - வஞ்சியே!
தொட்டுச் சிணுங்கும் செடிபோல உன்பார்வை
பட்டுச் சிணுங்கும் பரிந்து!
525.
உயிருள்ள நாள்வரை உன்னை மறவேன்!
பயிருள்ள நற்பசுமைப் பாவாய்! - மயங்கிக்
குயிலுள்ள தோப்புக்குள் கூடிக் களிக்க
மயிலுள்ள பேரழகே வா!
526.
தங்கப் புதையலென மங்கை உருகண்டேன்!
பொங்கும் உணர்வேங்கும்! போதையுறும் - செங்கரும்பாய்ச்
சங்கத் தமிழ்பிறக்கும்! அங்கமெலாம் புல்லரிக்கும்!
வங்க அலைபோல் வளர்ந்து!
527.
சிலைபோல் இருக்கும் சிவந்தபொன் மேனி!
மலைபோல் இருக்குமெழில் மார்பு! - மலரே
கலைபோல் மயக்கும் கயல்விழிகள்! ஆசை
அலைபோல் அடிக்கும் அகத்து!
528.
துன்பம் மிகுந்து துவண்டிடும் நேரமெல்லாம்
இன்ப முகமெண்ணி யான்எழுவேன்! - என்னவளே!
உன்னை நினைத்தே உருபெறும் பாட்டெல்லாம்
பொன்னைப் நிகர்த்ததெனப் போற்று!
529.
ஆயிரம் வெண்பாவை அள்ளி அளித்தவளே!
சேயிடம் பெற்ற சிரிப்பழகே! - தூயவளே!
நீ..செய்த நல்லுதவி நெஞ்சுள் நிலைத்ததடி!
பா..செய்த பண்பின் பயன்!
530.
மணியென்ன? மின்னும் மலரென்ன? வண்ண
அணியென்ன? வானமுது என்ன? - இனிய
கனியென்ன? முற்றல் கரும்பென்ன உன்முன்?
இனியென்ன வேண்டும் எனக்கு!
(தொடரும்)
/// பா..செய்த பண்பின் பயன்! ///
RépondreSupprimerஅருமை ஐயா...
ஆயிரம் வெண்பாவை அள்ளி அளித்தவளே!
RépondreSupprimerசேயிடம் பெற்ற சிரிப்பழகே! - தூயவளே!
நீ..செய்த நல்லுதவி நெஞ்சுள் நிலைத்ததடி!
பா..செய்த பண்பின் பயன்!
வியந்து நிற்க வைத்த வரிகள் நன்றி ஐயா.
//பொங்கும் உணர்வேங்கும்! போதையுறும் - செங்கரும்பாய்ச்
RépondreSupprimerசங்கத் தமிழ்பிறக்கும்! அங்கமெலாம் புல்லரிக்கும்!//
கவிஞரையா...
உங்கள் உணர்வுமிகு கவிகண்டால் எங்களுயிர் மறக்கும் எமக்கு...
அருமை ஐயா அத்தனையும். வாழ்த்துக்கள்!