வள்ளலார் காட்டும் வழி!
உருப்படா மானிடரே ஒன்று கேளீர்
ஓரூரில் பலகோவில் கட்டி வைத்தீர்!
ஒருகடவுள் உலகத்தில் இருத்தல் உண்மை
உருவாக்கல் உருவழித்தல் அவனின் தன்மை!
பொருளையெலாம் வீணாகச் செலவ ழித்தால்
புவியினிலே எவருக்கும் இல்லை நன்மை!
உருவாகும் எதிர்காலம் ஓங்க வேண்டின்
உயர்சோதி வடலூரார் வழியை ஏற்பீர்!
கன்றுக்குத் தாய்மடியைத் காட்டி யே,பால்
கறந்துவிடும் நம்மினந்தான் திருந்தப் போமோ?
ஒன்றுக்கும் உதவாத கதைகள் பேசி
ஊரினையே பலபிரிவாய்ப் பிரித்தல் நன்றோ?
ஒன்றாகும் கடவுளென உணர்ந்து சொன்ன
ஒழுக்கத்தின் சீலர்நம் வடலூர் வள்ளல்!
நன்றாகும் அருட்பெருஞ் சோதி கொள்ளை
நாட்டோர்கள் பெறுவாரேல் ஏது தொல்லை!
பலன்காண உயிர்ப்பலியைச் செய்ய வேண்டாம்!
பாமரரைத் தனியாக ஒதுக்க வேண்டாம்!
நிலங்கண்ட மழையினது தன்மை போன்று
நீடுபுகழ்ச் சன்மார்க்க நெறிகள் பேணீர்!
புலங்கொழிக்கும் பொதுநோக்கும் புவியில் மேவப்
புத்தமிழ்தாம் அறநெறிகள் வாழ்வில் சூழ
நலங்கொடுக்கும் அருட்பெருஞ் சோதி ஒன்றே
நாட்டினிலே தனிப்பெருங் கருணை யாமே!
அருட்சோதி ஆண்டவனைப் போற்றிப் போற்றி
அன்புதனைப் பல்லுயிர்பால் தூண்டி வைத்தார்!
மருட்சார்பு தீர்ந்திடவே வாழ்வில் என்றும்
வள்ளலவர் அருளாட்சி வேண்டும் மென்றார்!
பொருள்சேரப் புகழ்சூழ் எவ்வு யிர்க்கும்
பொதுமைநிலை சன்மார்க்கம் வேண்டி நின்றார்!
இருள்நீக்கும் மாமருந்தாம் ஈடில் லாத
இன்பவொளி அருட்சுடரை ஏற்றி னாரே!
ஒருமையுடன் இறைவனடி போற்ற வேண்டும்!
உவகையுடன் அவனருளை வேண்ட வேண்டும்!
பெருமைபெறும் அவன்புகழைப் பேச வேண்டும்!
பிறவாத பெருநிலையைப் பெறுதல் வேண்டும்!
அருமையுடன் அவனருளாம் சோதி தன்னில்
அனைவருமே முழ்கிநனி யுயர்தல் வேண்டும்!
கருணைமிகும் வாழ்வொன்றே வேண்டும் என்ற
கமழ்கின்ற வழிசொன்ன வள்ளல் வாழ்க!
தயவு செய்து உங்கள் திரை அமைப்புகளை மாற்றுங்கள். எதையும் படிக்க முடியவில்லை.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
திரையினை மாற்றும் திறன்எனக்(கு) இல்லை!
வரைமுறை சொல்வீா் வடித்து!
ஆ! சொல்ல மறந்துவிட்டேன். நான் கை பேசி வழியாக படிக்கிறேன் என்பதை.
RépondreSupprimerநன்றி.
Supprimerவணக்கம்!
வலைவீசும் வண்ணத் தமிழ்சுவைக்க வா!வா!
தொலைபேசி தன்னில் தொடா்ந்து!
அருட்பெருஞ்சோதி வடலூர் வள்ளலாரைபற்றி நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது ஐயா. நன்றி.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பூந்தளிர்ப் பாவாய்! புனைந்த கருத்திற்கு
மாந்தளிர் தந்தேன் மகிழ்ந்து!
அருமையான யாப்புக் கவிதை. என் வலைத்தளம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி. தொடர்வோம் நட்பை இனிதாக....
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
யாப்பு மலா்பறிக்க வந்திடுக! இன்கவிதைத்
தோப்புக்கு நாளும் தொடர்ந்து
RépondreSupprimerமின்வலை உறவுகளே வணக்கம்!
வருகைக்கு நன்றி! வலையுலகில் நானும்
பெருமைக்குச் செல்வேன் பெயா்ந்து
மாண்பு மிகு கவிஞர் அய்யா அவர்களுக்கு
RépondreSupprimerதங்கள் கவிதைகளை கண்டேன்
அங்கே தமிழின் அழகைக் கண்டேன்
கவிதை யாவும் ...
அறிவின் வழியாக உயிரில் கலக்கிறதே !!!
-அன்புடன் லிங்கம் மாமல்லன்
05/01/2013
மாண்பு மிகு கவிஞர் அய்யா அவர்களுக்கு
RépondreSupprimerதங்கள் கவிதைகளை கண்டேன்
அங்கே தமிழின் அழகைக் கண்டேன்
கவிதை யாவும் ...
அறிவின் வழியாக உயிரில் கலக்கிறதே !!!
-அன்புடன் லிங்கம் மாமல்லன்
05/01/2013