mardi 8 janvier 2013

காலக் கவிதை [பகுதி - 1]

பட்ட அடிகளும் பாடிய கவிகளும்

என்னை அடித்துப் போட்டாலும்
       என்றன் குருதி தமிழ்பேசும்!
மண்ணைச் சுமக்கும் பொழுதென்மேல்
       மலரும் பூக்கள் கவிபாடும்!
விண்ணை அடைந்தே என்னுயிரும்
       விஞ்சும் தமிழின் புகழ்கூறும்!
அன்னைத் தமிழின் சீர்காக்க
       அருமைக் கண்ணன் எனைச்செய்தான்!

26-11-2002

-----------------------------------------------------------------------------------

கற்ற கல்வி கையளவாம்
       கற்கா அளவோ பெருங்கடலாம்!
பெற்ற கல்வி அதிகமென
       பேராணவம் சூழ் வாழ்வழிவாம்;!
மற்ற வர்தம் நுண்மதியை
       மதியா(து) இழிதல் தீவினையாம்!
சிற்றம் பலனே! என்னரசே!
       சிறந்த நெறியை அருளுகவே!

27-11-2002

-----------------------------------------------------------------------------------

இன்பத் தமிழை வளர்த்திடவே
       இருவர் இணைந்து செயற்பட்டார்!
ஒன்றாய்ச் சேர்ந்த அவர்மனத்துள்
       ஓங்கக் கண்டேன் தன்னலமே!
ஒன்றை ஒன்று கடித்திங்கே
       ஓடும் நாயாய் அவரானார்!
கொன்றை மாலை அம்பலனே
       கொழிக்கும் நட்பை அருளுகவே!

27-11-2002

-----------------------------------------------------------------------------------

நாற்றம் அடிக்கு மீன்களையே
       நறுக்கி எடுத்தே உருட்டியுடன்
மாற்றம் இன்றி என்னெதிரே
       மங்கை இனிதே சாப்பிட்டாள்!
ஆற்றில் இருக்கும் மீனாக
       அவளின் உருவம் தெரிந்ததுவே!
காற்றின் வேகக் கவிபாடிக்
       கற்போர் களிக்க வைத்தனனே!

30-11-2002

-----------------------------------------------------------------------------------
 
எண்ணும் எண்ணம் கவியாகும்
       எழுதும் ஏடு நூலாகும்!
மின்னும் இயற்கைக் காட்சியெலாம்
       என்னை எழு(து)என் முன்னாடும்!
விண்ணும் மண்ணும் என்னுள்ளே
       விளைத்த இன்பம் பலகோடி!
பண்ணும் பாட்டும் என்னுடைய
       பசியைத் தீர்க்கும் உணவன்றோ!

6-12-2002

-----------------------------------------------------------------------------------
 
வெள்ளைக் காரர் முகத்தினிலே
    வீர மீசை இல்லையடா!
முல்லைப் பெண்ணைக் கொஞ்சிடவே
    முகத்தில் மீசை தொல்லையடா!
எல்லை யில்லாக் காதலிலே
    இணைந்து மகிழம் அன்னவர்கள்
கொள்ளை இன்பங் கண்டவுடன்
    கூட்டை மாற்றி ஓடுவதேன்?

7-12-2002

-----------------------------------------------------------------------------------

அன்பே இன்றி அறுஞ்சுவையை
    அளிக்கும் விருந்து சுவைதருமோ?
பண்பே இன்றிச் செயல்செய்தால்
    பயனை வாழ்வில் அடைவோமோ?
இன்றே சிலர்தம் பொய்வாழ்வாம்
    ஏற்றம் அடைதல் உயர்வாமோ?
நன்றே இவைகள் தாம்ஆய்ந்து
    நல்லோர் வழியை நாடுகவே!

9-12-2002

-----------------------------------------------------------------------------------

உடையும், உடலும் வெள்ளையென
    உலவும் வண்ண எழில்பெண்ணே!
நடையில் ஏனோ திமிர்கொண்டு
    நல்லோர் தூற்றச் செல்கின்றாய்!
கடையின் கீழாய்க் கிடந்ததனால்
    கருப்பாய் உள்ளம் பெற்றனையே!
முடையாம் நாற்றம் போக்காமல்
    முகத்தில் வண்ணம் பூசுவதேன்?

12-12-2002

-----------------------------------------------------------------------------------
 
5 commentaires:

  1. கற்ற கல்வி கையளவாம்
    கற்கா அளவோ பெருங்கடலாம்!
    உண்மை வரிகள் ஐயா சிறப்பாக சொன்னீர்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்றது கைமண் அளவெனச் சிந்தனை
      உற்றவா் காண்பார் உயா்வு!

      Supprimer
  2. யாரையோ திட்டி இருக்கிறீர்கள்! யாரென்ற
    பேரையும் சொன்னால் பெருமைதான்! - ஊரையே
    திட்டினாலும் உள்ளிருக்கும் தேன்தமிழோ என்னாளும்
    கட்டிக் கரும்பின் இனிப்பு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திட்டும் நினைவுடன் தீட்டிய பாவன்று!
      கொட்டும் கொடுமனக் காரா்களின் - திட்டத்தால்
      பட்ட அடிகளைப் பாடிய இக்கவிதைக்
      சுட்ட நிகழ்வின் சுவடு

      Supprimer

  3. வணக்கம்!

    உறவின் நலம்நாடி வந்தீா்! உயா்ந்த
    குறளின் இனிமை குவித்து!

    RépondreSupprimer