mardi 1 janvier 2013

ஆங்கிலப் புத்தாண்டே!



ஆங்கிலப் புத்தாண்டே

பூங்குயில் பாட்டிசைக்க! பூக்கள் தலையசைக்க!
தேங்கொடிச் சிட்டுச் சிரித்துவக்க! - பாங்குறவே
மாங்கிளை தொங்கும் மதுக்கனியாய் வாழ்வினிக்க!
ஆங்கிலப் புத்தாண்டே ஆக்கு!

வண்ண மயிலாட! வஞ்சிக் கொடியாட!
எண்ணம் இனித்தே இசைந்தாடப்! - பெண்ணழகாய்த்
தேங்குசுவை ஏந்தித் திரண்ட நலமேந்தி!
ஆங்கிலப் புத்தாண்டே ஆடு!

ஒன்றே குலமாம்! ஒருவனே தேவனாம்!
நன்றே உலகம் நடந்துவர! - என்றென்றும்
தீங்கிலா வாழ்வுபெறத் தித்திக்கும் தேனொழுக
ஆங்கிலப் புத்தாண்டே ஆழ்!

இதுவரை வந்த இழிவகற்று! நீதி
எதுவரை உண்டோ இயம்பு! - பொதுமறையை!
ஓங்குபுகழ் வள்ளுவத்தை ஓதி உலகுயர
ஆங்கிலப் புத்தாண்டே ஆா்த்து!

பிறப்பெக்கும் எவ்வுயிரும்! சிந்தனைகள் யாவும்
சிறப்பெக்கும் வண்ணம் செழிக்க! - அறிநெறியைத்
தாங்கி உலகம் தழைக்க! அரும்பணியை
ஆங்கிலப் புத்தாண்டே ஆற்று!

01.01.2013

20 commentaires:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனீய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்வலைச் சீா்பாடும் இன்கவி வாணனே!
      உன்வலை ஓங்கும் உயா்ந்து

      Supprimer
  2. அருமை!
    அருமை!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமை அருமையென அள்ளிச் சுவைக்கும்
      பெருமை இனிமைப் பெருக்கு!

      Supprimer
  3. அழகான வரிகள் ஐயா
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் ஐயா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகாக வாழ்க்கை அமையட்டும்! கண்ணன்
      குழலாக இன்பம் கொடுத்து

      Supprimer

  4. வெண்பாவில் பாட்டெழுதி விட்டிருந்தார் வாழ்த்தாக
    ஒண்பாவும் கண்டே உவந்தேனே-பண்பார்
    பாரதிக்கி தாசனாம் பாவேந்தர் நேசனாம்
    யாரவர்கே என்றும் நிகர்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நிகரிலா வண்ணம் நிலத்தில்நான் ஓங்கப்
      பகன்றளித்தீா் கன்னற் பழம்!

      Supprimer
  5. அறநெறியைத் தாங்கி உலகம் தழைக்க...

    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா. தங்கள் ஆசி என்றென்றும் எங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      அறநெறி சூடி அருந்தமிழ் பாடு!
      நிறைநெறி ஓங்கும் நிலைத்து!

      Supprimer
  6. அன்புடையீர் வணக்கம்! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இளங்கோ அளித்த இனியதமிழ் வாழ்த்து
      வளங்கோ அளித்த வரம்!

      Supprimer

  7. வணக்கம்!

    நன்றி!

    தமிழ்மணம் தந்த தகைமையைக் கண்டே
    அமிழ்தம் சுரக்கும் அகத்து!

    RépondreSupprimer

  8. மின்வலை உறவுகளே வணக்கம்!

    வாழ்த்து மழையை வளமுடன் தந்துவந்தீா்
    தாழ்த்தி வணங்கும் தலை!

    RépondreSupprimer
  9. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      வண்ண வலையுலகை நன்றே வளம்வந்தீா்!
      நண்ணும் நலத்தை நவின்று!

      Supprimer
  10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்



    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புதுவைத் தமிழனைப் போற்றி மகிழும்
      மதுரைத் தமிழன் மனம்

      Supprimer
  11. பாவினால் புத்தாண்டிற்கு வரவேற்பு... படிக்கும் போது நாவினால் வரவேற்ற சுகம்....

    சுகம் கொடுத்த தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு இனியதாக அமைய வாழ்த்துகிறேன்...

    அன்புடன்,
    ஷங்கர்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சங்கா் வருகையைச் சாற்றிடவே என்னெஞ்சே
      பொங்கும் தமிழைப் பொழி

      Supprimer