jeudi 17 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 3]
காதல் ஆயிரம் [பகுதி - 3]

21.
விரும்புகிறேன் என்றாள்! விழிகளில் நின்றாள்!
திரும்புகிறேன் என்றாள்! திசைமாறிச் சென்றாள்!
வருந்துகிறேன் என்றாள்! வளமாக வந்தாள்!
அரும்புகிறேன் என்றாள் அணைத்து!

22.
படித்தவை நெஞ்சுள் பதிய மறுக்கும்!
பிடித்தவை யாவும் பிறழும்! – துடித்து
முடித்தவை மூலையிலே தூங்கி கிடக்கும்!
அடிப்..பெண்ணே ஈவாய் அருள்!

23.
பித்தமெலாம் சேர்ந்து பிதற்றுதடி! உள்ளுயிரின்
சத்தமெலாம் உன்பெயரைச் சாற்றுதடி! – நித்தமும்
முத்தமெலாம் பாட்டாகி மூளையிலே அச்சாகிச்
சித்தமெலாம் மின்னும் சிரித்து!

24.
ஒன்றி உறவாட ஓடிவா! அன்பே!நீ
யின்றி எனக்கே(து) இனிவாழ்வே! – என்னவளே!
குன்றிக் குலைந்தேன்! குளிர்ந்தேன் மடல்கண்டு
நன்றி நவின்றேன் நயந்து!

25.
தேனினிக்கும்! தீங்கனியும் செங்கரும்பும் தாமினிக்கும்!
பாணினிக்கும்! பாலினிக்கும்! பைங்கொடியே! - ஊணினிக்கும்!
அத்தனையும் தாண்டி அருந்தமிழாய் நீயினிப்;பாய்!
இத்தரையில் இல்லை இணை!

26.
கண்ணில்லை என்பார்கள் காதில்லை என்பார்கள்
உண்மையிலே காதலுக்(கு) ஒண்டொடியே! - எண்ணி
மிரண்டுவிடும் அச்சத்தை விட்டென்பால் வந்தால்
திரண்டுவிடும் இன்பமாம் தேன்!

27.
கற்பனைக் கெட்டாக் கலையழகே! என்வாழ்வில்
நற்றுணை செய்திட்ட நாயகியே! - நற்றமிழாம்
பாக்காட்டில் வாழ்கின்ற பாவையே! பொற்புடைய
பூக்காடே! வாபக்கம் பூத்து!

28.
பஞ்சுபோல் உள்ளமும் பட்டழகு மேனியும்
இஞ்சிபோல் சின்ன இடுப்பழகும் - கொஞ்சிட
மஞ்சம் கொடுத்தஎழில் மாதுனையே என்றுமென்
நெஞ்சம் உருகும் நினைந்து!

29.
நீராடச் சென்றிடும் நேரிழையே! என்நிலை
வேராட விட்டே விலகாதே! - தீராத
நோய்ப்பட்டு வாடுமென் நோக்காட்டை ஆற்றிடவே
வாய்விட்டுப் பேசநீ வா!

30.
சுற்றுதே என்தலை! தூயஎன் நெஞ்சுனைப்
பற்றுதே! என்னையுன்கண் பற்றுதே! - முற்றுதே
மோகம்! அதுதணிய மொய்க்குழல் மாதே!என்
ஆகம் தழுவ அணை!

(தொடரும்)

15 commentaires:

 1. //பித்தமெலாம் சேர்ந்து பிதற்றுதடி! உள்ளுயிரின்
  சத்தமெலாம் உன்பெயரைச் சாற்றுதடி! – நித்தமும்
  முத்தமெலாம் பாட்டாகி மூளையிலே அச்சாகிச்
  சித்தமெலாம் மின்னும் சிரித்து!//
  எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காதல் ரசம் இன்னும் சொட்டிக்கொண்டிருக்கிறது.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தேன்சொட்டும் இன்னடைபோல் நான்கட்டும் வெண்பா!உன்
   ஊன்தொட்டு நன்றே சுவையூட்டும்! - மான்சொக்கும்!
   மீன்சொக்கும்! வண்ண மயில்சொக்கும்! மாதழகில்
   தான்சொக்கும் என்னுயிரும் தாழ்ந்து!

   Supprimer
 2. முத்தெனக் கொஞ்சிடும் முப்பது பாக்களும்
  சத்தென நம்முள் சதிராடும்! – மொத்தத்தைக்
  கொத்தெனச் சேர்த்துக் கொடுத்திட்டால் சித்தத்தைப்
  பித்தென வாட்டும் பிடித்து!


  -

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   முக்கோடிப் பாக்கள் முடித்தாலும்! என்னவளின்
   அக்கோடிப் பேரழகை அள்ளி அளித்திடுமோ?
   சிக்காகி நிற்கின்றேன்! சின்னவள் சிந்தனையில்
   கொக்காகி நிற்கின்றேன் கூா்ந்து!

   Supprimer
 3. இந்தப் பத்தும் காதல் வித்துக்கள்.காதல் வெண்பா மழையில் நனைந்தேன்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   காதலின் வித்தாகும் கன்னல் கவிபடித்தால்
   ஊதலின் நல்லிசை ஊற்றுாறும்! - மோதல்
   விழியழகு பூக்கும் மொழியழகு! இன்ப
   வழியழகு பூக்கும் வளா்ந்து!

   Supprimer
 4. காதல் ஆயிரம் அல்ல கோடியாய்ப் பொங்கி
  வழிந்து கொண்டு இருக்கிறது இங்கே ! அருமை !

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கோடிக் கவிதைகள் கொட்டிக் கொடுத்தாலும்
   பாடி முடித்தவை பாதியென்பேன்! - வாடியே
   சூடிக் கொடுத்த சுடா்க்கொடிபோல், செந்தமிழைச்
   சூடிக் களித்தல் சுகம்!

   Supprimer
 5. //பித்தமெலாம் சேர்ந்து பிதற்றுதடி! உள்ளுயிரின்
  சத்தமெலாம் உன்பெயரைச் சாற்றுதடி! – நித்தமும்
  முத்தமெலாம் பாட்டாகி மூளையிலே அச்சாகிச்
  சித்தமெலாம் மின்னும் சிரித்து!//

  உங்கள் பித்தம் தமிழ்மேல் தவளக்கண்டு
  நாங்கள் நித்தம் நெகிழ்ந்து போனோமையா
  திங்கள் முத்தம் எமக்கு தந்ததுவோ என
  எங்கள் சித்தம் உவகை கொள்ளுதையா...

  அருமையாக இருக்கிறது அத்தனை வெண்பாக்களும்!
  ஐயா உங்கள் கவியில் கவரப்பட்டு ஏதோ நானும் இங்கு எழுதுகிறேன். தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தி திருந்திட வாய்ப்புத்தாருங்கள்...மிக்க நன்றி!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்ககம்!

   தவழும் இளமதி தந்த கவியுள்
   திவளும் செழுந்தேன் திரண்டு! - துவளுமென்
   நெஞ்ச நினைவுகளைக் கொஞ்சும் கவிபடித்தால்
   விஞ்சும் கவிதை மிளிர்ந்து!

   Supprimer
 6. பஞ்சுபோல் உள்ளமும் பட்டழகு மேனியும்
  இஞ்சிபோல் சின்ன இடுப்பழகும் - கொஞ்சிட
  மஞ்சம் கொடுத்தஎழில் மாதுனையே என்றுமென்
  நெஞ்சம் உருகும் நினைந்து!
  எந்த வரியையும் ஏன் வார்த்தையையும் தவிர்க்க முடியாது முழுவதுமாய் மனதில் ஆழமாய் அமர்ந்தது.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   எந்த அடியையும் ஏன்?எந்தச் சொல்லையும்
   சிந்த மனமின்றிச் சோ்த்தனையோ! - சிந்தையுடன்
   தந்த கவிபடித்துத் தந்த கருத்தினிக்கும்
   அந்த அமிழ்தை அளித்து!

   Supprimer
 7. Réponses

  1. மீண்டும் வணக்கம்!

   நறுந்தமிழ் வாக்குக்கே நன்றி நவின்றேன்!
   பெறுந்தமிழ் இன்பப் பெருக்கு!

   Supprimer

 8. தமிழ் உறவுகளே வணக்கம்!!

  வெண்பா படித்து விளைத்த கருத்திற்குத்
  தண்பா தழைக்க தமிழளித்தேன்! - உண்டுவக்க
  நாளும் வருகவே! நல்ல உரைகளை
  மேலும் தருகவே வென்று!

  RépondreSupprimer