காதல் ஆயிரம் [பகுதி - 11]
101.
என்றும் மணக்கும் எழிலே! இளையவளே!
இன்றுன் இனிக்கும் மடல்பெற்றேன்! – என்னுயிருள்
நின்று கமழும் நெடும்தமிழ்போல் உன்பார்வை
வென்று கமழும் விரைந்து!
102.
சித்தம் மயங்கச் சிலிர்த்தெழுந்து உள்ளினிக்கப்
புத்தம் புதுவுலகைப் போந்தாளத் - தித்திக்கும்
முத்தக் கடல்மூழ்கி முத்தெடுத்துக் காமனுடன்
யுத்தம் புரிவோம் இணைந்து!
103.
முத்துச் சரமே! முகிழ்த்த மலர்க்காடே!
பித்து கொடுக்கின்ற பேரழகே! – நித்தமும்
நெஞ்சம் பொதிந்தாட நீங்காத இன்பத்துள்
மஞ்சம் பொலிந்தாட வா!
104.
முத்திரை மோதிரம்! மோகத் திருவரசன்
சித்திரை தேர்வலம்! சின்னவளே - முத்தமிழின்
புத்துரை பொன்னலம் போந்து புனையும்..பா
நித்திரை நீக்கும் நிலைத்து!
105
அல்லிக் குளக்கரையில் அன்பாம் அமுதருந்த,
அள்ளி அணைத்(து)அரைக் கண்மூடச் - சொல்லரிய
வெள்ளிக் கிழமை விரைந்துவரும்! ஆசைமனம்
துள்ளிக் குதிக்கும் தொடர்ந்து!
106
ஞாயிற்றுக் கிழமையில் நங்கை தரிசனம்
ஆயிற்(று) எனில்பொங்கும் ஆனந்தம்! - சேயிழையின்
வாயிட்டு வண்ணங்கள் வந்தாட வில்லையெனில்
போயிற்று வீணாய்ப் பொழுது!
107.
எடுத்தெழுதும் பேரழகு! இன்னுதடு நாளும்
கொடுத்தெழுதும் கன்னத்தில் கோலம்! - எடுப்பாய்த்
தொடுத்தெழுதும் முல்லை! தொடர்ந்தெழுத வா..வா
அடுத்தெழுதும் ஆசை அளித்து!
108.
கிர்ரென்(று) அடித்துக் கிளம்பும் தொலைப்பேசி
உர்ரென்(று) உறங்குவதேன் ஓய்ந்தின்று?
– சர்ரென்றும்
விர்ரென்றும் நெஞ்சோடு வேல்விழியாள் எண்ணங்கள்
குர்ரென்று குத்தும் குவிந்து!
109
பாட்டினிக்கும்! ஆனால் படம்இங்(கு) இனிக்குதடி!
கூட்டினிக்கும்! கோலம் இனிக்குதடி! - தீட்டுகின்ற
சீட்டினிக்கும்! சீர்பல சேர்ந்தினிக்கும்!
உன்மொழியைக்
கேட்டினிக்கும் நெஞ்சம் கிடந்து!
110
திண்டாட வைத்தவளே! தேவி சரண்என்று
மன்றாட வைத்தவளே! மல்லிகையே! - இன்றமிழை
உண்டாட வைத்தவளே! ஊர்வசியே! காதலைக்
கொண்டாட வைத்தவளே! கொஞ்சு!
(தொடரும்)
// கிர்ரென்(று) அடித்துக் கிளம்பும் தொலைப்பேசி
RépondreSupprimerஉர்ரென்(று) உறங்குவதேன் ஓய்ந்தின்று? – சர்ரென்றும்
விர்ரென்றும் நெஞ்சோடு வேல்விழியாள் எண்ணங்கள்
குர்ரென்று குத்தும் குவிந்து//
இனிமை புதுமை
Supprimerவணக்கம்!
காடு மணக்கும்! கனிமணக்கும்! நானெழுதும்
ஏடு மணக்கும் இளையவளால்!- பாடும்
பொதுமை மணக்கும் புலவன்என் நெஞ்சுள்
புதுமை மணக்கும் மொலிந்து!
RépondreSupprimerதிண்டாட வைத்தவளே
மன்றாட வைத்தவளே
உண்டாட வைத்தவளே
கொண்டாட வைத்தவளே
என்ன அழகிய ஓசை
இரண்டாம் சீரும் ஒன்றிவரும் அழகு!
உள்ளம் உங்கள் தமிழைக் கண்டு ஏங்குகிறது!
Supprimerவணக்கம்!
இன்பூக்கள் பூத்தாடும்! ஈடிலா ஆயிரத்தில்
மென்பூக்கள் பூத்தாடும் மேன்மையுடன்! - என்பாக்கள்
ஆசை கொடுக்கும்! அருந்தமிழ்த் தேன்சுரக்கும்!
ஓசை கொடுக்கும் உயா்ந்து!
அருமை இதுவன்றோ ஆர்வலரே
RépondreSupprimerபுதுமை படைக்கின்றீர் தமிழ்மொழியில்
இனிமை உங்கள் கவி இளமை என்றும்
மகிமை மாறாத மாரிகாலக் குளிர்மை!
Supprimerவணக்கம்!
இளமதி! என்றன் உளம்மகிழ்ந் தாட
நலநிதி போன்றே நயந்தாய்! - வளமாய்ப்
பனிபோல் குளிரும் படைப்புக் களித்தாய்
கனிபோல் இனிக்கும் கருத்து!