பாவேந்தன்
முத்தொளிரும் தமிழ்பாடி,
புத்துலகச் சீர்சூடி,
மெத்தப்புகழ் பெற்றவுயர் புலவன்! - கவி
வித்தைகளை விளைத்ததமிழ் உழவன்!
புதுவைநகர் புகழ்மேவ,
பொதுமைநிலை மணம்வீச,
புதுமையொளிர் நூல்படைத்த மாந்தன்! - நம்
பூந்தமிழை அரசாண்ட வேந்தன்!
தேனூறும் அவன்தமிழில்
நானூறிப் போனதனால்
ஊன்புடைத்துப் பாக்கள்யான் தீட்ட, - அவை
கூன்விழுந்த நெஞ்சங்களை மாற்ற!
குடிவாழ மொழிவாழ
அடியோடு பகைவீழ
இடியாகும் பாவேந்தன் பாட்டு! - பாடி
எதிர்கால பிள்ளைக்கே ஊட்டு!
அஞ்சாத அரிமாவாய்,
துஞ்சாமல் பணிசெய்து
நஞ்சான இந்திதனை எதிர்த்தான்! - புகழைக்
கொஞ்சுதமிழ் வரலாற்றில் பதித்தான்!
சாதியெனும் பேய்ஒழிய,
சார்ந்துள்ள மதம்அகல,
நீதிபெற அவன்செய்த புரட்சி - அதனால்
நிலம்மீது நாம்பெற்றோம் மகிழ்ச்சி!
தன்மானம் நாமுறவே
தமிழ்மானம் காத்திடவே
பொன்வானக் கதிராக எழுந்தான்! - இந்தப்
புவிவாழப் பகுத்தறிவைப் பொழிந்தான்!
ஈரோட்டுப் பெரியாரின்
போரீட்டிப் பாவேந்தன்
சீராட்டிக் கொடுத்தநெறி கூறு! - அது
செந்தமிழின் வாழ்வென்று பாடு!
பாவேந்தன் பைந்தமிழை
நாவேந்தும் நாவலர்கள்
காவேந்தும் பூந்தேனை உண்பார்! - அவன்
கவிதைக்கே ஈடில்லை என்பார்!
அடிமையெனும் ஓர்சொல்லை
அகராதி நீக்கிவிடும்!
மிடிமையொளிர் பாவேந்தன் உலகு! - பார்
வியந்ததமிழ் அரசாளும் அழகு!
அந்தப் புரட்சிக் கவிஞரி்ன் பெயரைத் தாங்கிய நீங்கள் அவருக்காய் பாடிய பா சிறப்பு. தென்றலாய்க் குளிர்ந்தும், புயலாய்ச் சீறியும், நண்பனாய் தோளில் கை போட்டும்.... எத்தனை ரசனைமிக்க எழுத்துக்கள் பாவேந்தருடையவை. உங்கள் கவிதையில் கடைசிக்கு முந்தைய பாராவில் வரும் வரிகளை வழிமொழிந்து, உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
RépondreSupprimerபுதுமையொளிர் நூல்படைத்த மாந்தன்! - நம்
RépondreSupprimerபூந்தமிழை அரசாண்ட வேந்தன்!//
ஐயாவின் புகழை அழகான தமிழில் உரைத்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சாதியெனும் பேய்ஒழிய,
RépondreSupprimerசார்ந்துள்ள மதம்அகல,
நீதிபெற அவன்செய்த புரட்சி - அதனால்
நிலம்மீது நாம்பெற்றோம் மகிழ்ச்சி!
இன்னமும் திருந்தா மக்களைத் திருத்த மீண்டும் ஒரு பாரதியும் பாரதிதாசனும் பெரியாரும் பிறக்க வேண்டும் போல... அழகான வரிகளால் அழகுற சொன்ன விதம் சிறப்பு ஐயா. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
த. ம. 2
RépondreSupprimer
RépondreSupprimerபாவேந்தா் பற்றேந்தி
பாடும் புலவா!
பைந்தமிழின் சீரேந்தி
உழைக்கும் தோழா!
என் நண்பா!
வணங்குகிறேன் உன் தமிழை!
வாழ்த்துகிறேன் உன் தமிழை!
இனிய பொங்கல் வாழ்த்தக்கள்!
இதல்லவோ கவி !
RépondreSupprimerவணங்குகிறேன் ஐயா !
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !
RépondreSupprimerஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலின் வாழ்த்தக்கள்
சித்தாண்டுச் செந்தமிழின் சீருரைப்பாய் - சத்தாண்ட
நன்னிலம் நன்றே விளைவதுபோல் நற்கவியில்
உன்னுளம் ஓங்கி ஒளிர்