lundi 14 janvier 2013

ஒற்றுமையைப் பொங்குக!



ஒற்றுமையைப் பொங்குக!


பொங்குகவே! பொங்குகவே! பூந்தமிழின் மாட்சி!
     புவிமலர்ந்து பூத்தாடத் திருக்குறளின் ஆட்சி!
தங்குகவே! தங்குகவே! தண்டமிழின் மாண்பு!
     தடையுடைக்கும் தமிழ்வன்மைக் கீணையாமோ வேம்பு!
மங்குகவே! மங்குகவே! மடடையிருள் போக்கு!
     மதம்;;..சாதி இவைநீக்கிப் பொங்கலினை ஆக்கு!
தொங்குகவே! தொங்குகவே தமிழ்அடியை வேண்டி!
     சொல்லுகவே வாழ்த்தொலியை உலகலவைத் தாண்டி!

காத்துவரும் நன்னெறியில் கடமையினை ஆற்று!
     கமழ்ந்துவரும் திசையெட்டும் தமிழிசைக்கும் காற்று!
பூத்துவரும் பேரழகாய்ப் பாதையினை மாற்று!
     புகழ்மணக்கும் பொற்றமிழின் புத்தாண்டைப் போற்று!
கூத்துவரும்! பாட்டுவரும்! பொதுவுடைமை சாற்று!
     கூடிவரும்! கொழித்துவரும்! நன்வளங்கள் நோற்று!
மூத்துவரும் இனிமையிலே பன்னூல்கள் நூற்று!
     மொழியுலகை ஆளவேண்டும் முத்தமிழே வீற்று!

எல்லாரும் எல்லாமும் ஏற்றுயரக் காட்டு!
     எளியவரும் செழித்தவரும் ஒப்புநிலை மீட்டு!
கல்லாரும் தெளிவுபெற அறிவொளியைக் கூட்டு!
     கலையொளிரக் கவியொளிர வாழ்வுதனைத் தீட்டு!
நல்லாரும் வல்லாரும் பாடிவைத்த பாட்டு!
     நாளைவரும் தலைமுறைக்கு நறுந்தமிழைக் சூட்டு!
பொல்லாரும் பொடியாக வைத்திடுவோம் வேட்டு!
     புவித்தமிழர் ஒற்றுமையாய் இணைந்துநடை போட்டு!


27 commentaires:

  1. வீரிய விதை எடுத்து
    வீதி எல்லாம் விதைத்திடுவோம்...
    விதையினின்று புறப்படும்
    விருட்சத்தின் கிளைகளில்
    வீடொன்று கட்டிடுவோம்
    இனியும்
    வீழாதிருக்க
    வாழ்வாங்கு வாழ்ந்திடும்
    வான்புகழ் வெய்யோனை
    வாயார புகழ்ந்திடுவோம்....


    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வீரியம் மிக்க விதைகளாய் நற்றமிழா்
      சீரியல் தந்தாய் சிவந்து!

      Supprimer
  2. பொங்குக எங்கும் தமிழர் நலம் பொங்குக! வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தங்கள் வருகைக்குத் தந்தேன் வணக்கம்!நற்
      பொங்கல் இனிமை பொழிந்து!

      Supprimer
  3. இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல்த் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெருக மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு மலர வாழ்த்துகின்றேன் .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பாள் அடியாள் அளித்த அரும்வாழ்த்தும்
      செம்பால் சுவையின் திரட்டு!

      Supprimer
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
    அன்புடன்
    நாடிகவிதைகள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மணியின் வருகையை நான்வர வேற்றேன்!
      அணியின் அழகை அளித்து!

      Supprimer
  5. அருமை !இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் கோடி!
      கருத்திற்குத் தந்தேன் கவி

      Supprimer
  6. தன்னம்பிக்கையும், மகிழ்வும் தரும் எழுச்சிமிகு வரிகளால் இனிய கவிதை படைத்திட்டீர். மனம் மகிழ்ந்து இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்து மகிழ்கிறேன் யான்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பால கணேசா் படைத்த எழுத்துக்கள்
      சாலச் சிறந்ததெனச் சாற்று!

      Supprimer
  7. பொங்குகவே! பொங்குகவே! பூந்தமிழின் மாட்சி!

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மாமரைச் செல்வி வடித்த..வள வாழ்த்துக்குப்
      பாமறை கற்றவனின் பாட்டு!

      Supprimer
  8. பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திங்களைப் போற்றியே! தீந்தமிழ் போற்றியே
      பொங்கலைப் போற்றியே பொங்கு!

      Supprimer
  9. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வந்து வழங்கிய வாழ்த்துக்கு நன்றிகளைத்
      தந்து வழங்கும் தமிழ்!

      Supprimer
  10. கவிஞரே பாரதிதாசன் ஐயாவே..
    வலையுலகம் கண்டிட்ட களஞ்சியமே
    விளைந்திட்டேன் உங்களை வாழ்த்திடவே
    பிழை பொறுத்து ஏற்றிடுங்கள் மனம் மகிழ...

    இலக்கணம் எதுகைமோனை இன்னபல சேர்த்து
    இயம்பிடத் தெரியவில்லை ஐயா.. இருந்தும்
    தலைக்கனம் இல்லாப் பெருந்தகை உங்களுக்கு
    தயவுடன் பணிந்து தருகிறேன் என் வாழ்த்து!

    அருமையாக இருக்கிறது ஒற்றுமைப்பொங்கல்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இளமதியே! உன்றன் இனியதமிழ் பாடி
      உளமகிழ் வுற்றேன் உயா்ந்து!

      Supprimer
  11. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    என் இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு மற்றும்
    பொங்கல் வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருணா அளிக்கும் அருந்தமிழ்! பொங்கல்
      திருநாள் அளிக்கும் சிறப்பு!

      Supprimer

  12. ஒற்றுமையைப் பொங்குக!
    ஒப்பிலாக் கவிதை!
    ஒவ்வொரு நாளும்
    உங்கள் கவித்தேனைக் குடித்து
    எங்கள் கவியாற்றல் வளருகிறது!

    பொங்குகவே பொங்கல்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மாமல்லன் தந்த மணங்கமழ் வாழ்த்துக்குப்
      பாமல்லன் என்றன் பணிவு!

      Supprimer

  13. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்ச்செல்வம் தந்திட்ட தைப்பொங்கல் வாழ்த்தை
      அமிழ்தாய்ச் சுவைத்தென் அகம்!



      Supprimer

  14. தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

    அன்புடன் வந்தே அளித்த அரும்வாழ்த்திற்(கு)
    இன்புடன் நன்றி இயம்புகிறேன்! - இன்பொங்கல்
    நன்னாளைப் போற்றி நறுந்தமிழா் எந்நாளும்
    பொன்னாளைக் காண்க பொலிந்து!

    RépondreSupprimer