காதல் ஆயிரம் [பகுதி - 2]
11.
இசைக்கே மயங்கும் இதயம்!உன் பாட்டின்
அசைக்கே மயங்குதடி! அன்பே! – அசைத்து
விசைக்கே இழுக்கும் விழியிரண்டும் என்னைப்
பிசைக்கும் இதமாய்ப் பிடித்து!
12.
நிறைந்து மணக்கும் நினைவுகள் கோடி!
உறைந்து மணக்கும் உணர்வுகள் கோடி!
இறைந்து மணக்கும் எழில்மலர் கோடி!
குறையேது பூங்குயிலே கூறு?
13.
படைத்திடும் பாட்டெல்லாம் பாவையுன் நெஞ்சம்
கிடைத்திடும் என்றே கிளம்பும்! – தடையை
உடைத்திடும் வன்மை! உழைத்திடும் ஊக்கம்!
புடைத்திடும் காதலைப் போற்று!
14.
மனம்நடத்தும் நாடகம்! மங்கையுன் னோடு
தினம்நடத்தும் தேர்வலம்! தேனே! – மணக்கும்
குணம்நடத்தும் வாழ்வே! குவிக்கும் இனிமை
இனம்நடத்தும் பாக்கள் இயம்பு!
15.
கடல்சேர் நதியே! கதிர்சேர் உலகே!
உடல்சேர் நிலமே! உணர்க! - சுடரும்
மடல்சேர் கவிதை மணக்கும் மங்கை
இடம்சேர் உயிரின் இயல்பு!
16.
சுவைஞன்! சுடரும் கலைஞன்! இனிய
கவிஞன்! எனக்கில்லை கட்டு! – புவியின்
அழகை அருந்திக் கவியெழுதக் காதல்
தொழுகை நடக்கும் தொடர்ந்து
17.
மையெழுதும் கண்களால் பொய்யெழுதும் பூவே!உன்
கையெழுதும் காதல் கவிதைகளில் காளைநான்
தையெழுதும் இன்பத்தைத் தானேந்தி, என்னுயிர்ப்
பையெழுதும் மெய்யொளிர் பாட்டு
18.
கண்ணாய் இருந்தாய்! கனிந்த கவிபாடிப்
பொன்னாய்ப் பொலிந்தாய் பொழுதெல்லாம்!
– என்னவளே!
விண்ணாய் விரிந்து விளைந்திடும் ஆசைகளைச்
சொன்னால் மணக்கும் தொடர்ந்து!
19.
படம்பிடித்த பார்வையை! பாவலன் நெஞ்சுள்
இடம்பிடித்த செய்கையை! இன்பம் - படர
வடம்பிடித்த வண்டமிழை! என்னென்று சொல்வேன்?
திடம்பிடித்த என்னுள் திரண்டு!
20.
பார்த்ததும்! பட்டென்று தொட்டதும்! கைகளைக்
கோர்த்ததும்! கூடிச் சிரித்ததும்! – வேர்த்ததும்!
ஆர்த்தெழும் ஆசைகளை அள்ளி அளித்ததும்
கூர்த்தெழும்! என்செய்வேன் கூறு?
(தொடரும்)
அனைத்தும்!
RépondreSupprimerஅணைத்தது!
அருமை!
கவிதை!
Supprimerவணக்கம்!
அனைத்துக் கவிகளும் அன்பைப் பொழிந்தே
அணைத்து மகிழ்ந்தன ஆழ்ந்து! - மணக்கும்
கருத்தால் கலக்கும் கவிசீனி வாழ்க!
விருந்தாய்த் தமிழை விளைத்து
ஆயிரம் கதை சொல்லும் பாயிரம் ..!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
காதல் கவிகள் கடல்அலை போல்தொடர
மாதவள் கொண்டாள் வடிவு!
எதைச்சொல்லி வாழ்த்துவது? இத்தனைப் பண்ணும்
RépondreSupprimerகதைசொல்லிக் காதலை எண்ணிப் – பதைக்கும்!
புதைந்திருக்கும் ஆசைகள் புத்துயிர்ப் பெற்றே
சிதைந்திடுமே சின்னவர்கள் நெஞ்சு!
Supprimerவணக்கம்!
சிதைக்கும் செயலன்று! காதல் மனத்தை
உதைக்கும் செயலன்று! துடித்துப் - பதைத்தே
புதைக்கும் செயலன்று! காதல் பொலிந்து
கதைக்கும்! களிக்கும் கமழ்ந்து!
சுவைஞன் என்ற வார்த்தை நல்லாயிருக்கு.
RépondreSupprimer//மனம்நடத்தும் நாடகம்! மங்கையுன் னோடு
தினம்நடத்தும் தேர்வலம்! // அத்தனை காதல் வரிகளும் அசத்துகிறது. மரபில் காதல் சொல்லும் உங்கள் பாங்கு அதிசயிக்க வைக்கிறது.
Supprimerவணக்கம்!
நல்ல தமிழில் நவின்றுவரும் சொல்!சுவைஞன்!
சொல்லச் சுவைப்போம் தொடா்ந்து!
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
RépondreSupprimerதமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
அந்த அமுதத் தமிழை இவ்வளவு சிறப்பாக வர்ணித்து நீங்கள் சொல்லும் விதமே தனி.
அருமை..தொடருங்கள்...
Supprimerவணக்கம்!
அன்னைத் தமிழின் அடிகளைப் போற்றிடவே
என்னைப் படைத்தான் இறை!
RépondreSupprimerஆயிரம் வெணபாக்கள்!
வியப்பைத் தருகிறது!
எதிர்வரும் காலம்
தமிழ்க் காதலின் மாமறையாய் ஓதும்!
Supprimerவணக்கம்!
காதல் மறையாய்க் கவிஞன்என் ஆயிரத்தை
ஓதி மகிழும் உலகு!
RépondreSupprimerவெண்பா அனைத்தும் விருந்தாய் இனித்தன!
நண்பா தொடா்கவே நன்கு!
Supprimerவணக்கம்!
நறுந்தமிழ்ச் செல்வன் நவின்ற குறளில்
உறுந்தமிழ் செல்வம் உயா்ந்து!
அததனையும் அருமை
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கண்ணனின் தாசன் கணித்த கருத்துக்கள்
மன்னனின் மாண்பொளிர் வாக்கு
RépondreSupprimerதமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
வருக வருகவே! வண்ணக் கருத்தைத்
தருக! தருகவே நாளும்! - உருகியே
உள்ளம் உவந்தாடும்! ஓங்கு தமிழ்ப்பாட
வெள்ளம் விரைந்தோடும் வென்று!