vendredi 4 janvier 2013

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 11]



நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்

யாழினி சொன்ன கருத்தாய்ந்ததே என்தமிழா!
பாழினி நீக்கிப் பகைபோக்கு! - வாழினி
ஓங்கி ஒளிர உரிய தெளிவுணா்ந்து
தாங்கித் தரிப்பாய்த் தமிழ்

07.12.2012

----------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

மழைகொடுக்கும் நற்குளிரை உன்றன் சொற்கள்
     மனத்துக்குள் கொடுத்தனவே! மின்னும் பொன்னின்
இழைகொடுக்கும் வண்ணத்தில் இயற்றும் பாக்கள்
     இதயத்துள் பதியுமெனில் புலமை ஓங்கும்!
பிழைகொடுக்கும் துயரின்றிக் கற்றோர் நெஞ்சுள்
     பிணிகொடுக்கும் வலியின்றிக் கவி பிறந்தால்
தழைகொடுக்கும் சத்துணவாய்த் தமிழ் செழிக்கும்!
     தண்கவிதை தரும்ஏமா வளா்க நன்றே!

06.12.2012

----------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இன்று உங்களுக்குத் தெளிவின்றி எழுந்துள்ள 
ஐயங்களுக்கான விடை
12 நுாற்றாண்டில் வாழ்ந்த பவணந்தி முனிவா்
எழுதிய நன்னுாலில் உள்ளன!

தமிழ் எண்களின் பெயா்ப்புணா்ச்சி 
ஒன்று முதல் ஆயிரம்வரை தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

படித்து மகிழ்க! பயன் பெறுக!

நன்னுால் இலக்கணத்தை நன்றே பயின்றிடுக!
பொன்னுால் படைக்கும் புலமையுறும்! - என்தமிழா!
பன்னுால் படிப்பறிவு பற்றிப் படருமெனில்
உன்னுள் பெருகும் ஒளி!

07.12.2012

----------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நினவே போதும் மச்சான்!சொய்!
     நெஞ்சுள் நிலைத்த திரைப்பாடல்!
கனவே என்று சிலநொடிகள்
     காதில் கமழ்ந்த நிறைபாடல்!
மனமே மயங்கி நடமாட
     மதுசோ் போதை தரும்பாடல்!
இனமே மகிழ இவ்வலையில்
     இசைத்த பாடல்! வாழ்த்துகிறேன்!

07.12.2012

----------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நிகழ்காலம் என்னும்எழில் வலைக்குள் வந்தேன்!
     நினைவுகளில் நிலைத்தாடும் ஆக்கம் கண்டேன்!
இகழ்காலம் சேருகிற எண்ணம் எல்லாம்
     இதயத்தை இருளாக்கும்! அறிவை நன்றே
அகழ்காலம் வாய்க்குமெனில் ஒளியின் கீற்றே
     அகம்பரவும்! நல்லாற்றல் ஓங்கும்! செம்மை
பகா்காலம் படைப்புகளை வலைக்கண் தீட்டும்
     படைப்பாளி கவியெழிலி தொடா்க நன்றே!

08.12.2012

----------------------------------------------------------------------------------------------------------------

7 commentaires:


  1. உங்கள் கவிதைகள் உங்கள் மனத்துக்குள்
    தங்கி தழைக்கிறது

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தந்த கவிதைகள் தங்கிக் தழைக்குமெனில்
      சிந்தை மகிழும் சிலிர்த்து!

      Supprimer

  2. ஐயா வணக்கம்

    புத்தாண்டின் முதல் வாரம்!

    நண்பா்களின் வலைகளில் இட்ட கவிதைகளைப் படித்து உள்ளம் மகிழ்ந்தோம்!

    உங்களைப்போல் நாங்கள் எப்பொழுது கவிதை எழுதுவோம்?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மாமல்லா நன்றி! மணியாய்க் கருத்தெழுத
      வா..மல்லா நாளும் மகிழ்ந்து!

      Supprimer

  3. பாவேந்தா் பாடிய பைந்தமிழை நாள்தோறும்
    நாவேந்தி நல்கும் நறுங்கவியே! - பூவேந்தி
    உன்தமிழைப் போற்றுகிறேன்! உந்தும் தமிழ்ப்பற்றால்
    என்தமிழைச் சாற்றுகிறேன் இங்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உன்தமிழை நான்படித்து உள்ளம் உவக்கின்றேன்!
      பொன்தமிழை மேவிப் புகழ்பெறுவாய்! - மென்தமிழை
      மின்வலையில் மீண்டும் வடித்திடுக! பாட்டெழுதும்
      நன்கலையில் நன்றே நடந்து!

      Supprimer

  4. வணக்கம்!

    கவியைச் சுவைத்துக் கருத்தளித்தீா்! கையிரண்டைக்
    குவித்தேன் குளிர்மனம் கொண்டு!

    RépondreSupprimer