lundi 28 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 14]





காதல் ஆயிரம் [பகுதி - 14]

131
திமிரென்று திட்டாதே! தீங்கனிப் பாவாய்! 
தமிழென்று கொண்டாடு! தண்வாய் - உமிழ்நீர்
அமுதென்று நாளும் அருந்திடுவோம்! வாழ்வை
நமதென்று நாட்டுவோம் நன்கு!

132
சித்திரப் பூம்பாவாய்! சிந்தும் சிரிப்பழகை
எத்திறம் கொண்டுநான் ஏத்துவதோ? - முத்தமிழே!
உத்திரம் போன்றஎன் உள்ளம் உடையாமல்
பத்திரம் செய்கவே பார்த்து!

133.
முத்தமிழ்ச் சொற்கள்! மலர்முல்லை பற்கள்!என்
நித்திரை நீக்கும் நிலவுமுகம்! - புத்தமுத
முத்திரை முத்தங்கள் மோகப் பயிர்விளைக்கும்!
சித்திரைப் பெண்ணாய்ச் சிரித்து!

134.
என்னடி செய்தாய்? எந்நொடியும் உன்னினைவே!
கண்ணடி மேவும் சுககனவே! – பொன்னடி!
என்னடி தொட்டதால் ஏறுதடி உச்சிவரை!
உன்னடி ஊட்டும் உணர்வு!

135.
ஏடெடுத்துப் பாட! இனியசொல் என்னிதய
வீடெடுத்து நன்றாய் வினைபுரியும்! - ஈடிலாப்
பீடெடுத்துப் பெண்ணழகில் பின்னிக் கிடந்திட
மூடெடுத்து நிற்கும் முனைந்து!

136
எண்ணத்தில் என்னடீ ஏக்கம்? எடுத்ததை
வண்ணத்தில் தொய்த்து வடிவாக்கு! – மின்னிடும்
கன்னத்தில் நீதந்த கற்கண்டாம் முத்தங்கள்
என்னகத்தில் ஏற்றும் எழில்!

137.
போற்றடி காமன் புரிசெயலை! நீ..இன்ப
ஊற்றடி! என்றன் உயிரடி! – காற்றடி
ஏற்(று)அடி பாடிட ஏறிடும் போதையினால்
ஈற்றடி இல்லை இனித்து!

138
போர்தொடுத்து நிற்குதே பொன்விழிகள்! நெஞ்சே..நீ
தேரெடுத்துச் செல்லாதே! காதலாம் - வேர்செழிக்க
நீரெடுத்து ஊற்று! நெடுந்தமிழாள் உள்மயங்கிச்
சீர்கொடுத்து வாழ்வாள் செழித்து!

139.
குழல்தழுவும் மல்லிகை! கோதை மலர்சேர்
கழல்தழுவும் நற்சிலம்பு! கன்னி – நிழலால்
எழில்தழுவும் பொன்னிலம்! இப்படியும் வாழக்
குழல்தழுவும் கண்ணா கொடு!

140.
நோய்என்ன செய்யும்! நுவன்று தடுக்கின்ற
தாய்என்ன தந்தையென்ன செய்யும்!சொல்? - மாய்க்கின்ற
காய்என்ன செய்யும்! உயிர்சுரக்கும் காதலை
வாய்என்ன செய்யும் வரண்டு

(தொடரும்)

5 commentaires:


  1. -
    கனிரசத்தை உண்டால் கனிவாய் இனிக்கும்
    தனிரச காதல் தவிப்பை – இனிமையாய்ப்
    பண்ணில் பிழிந்து படைக்க அதைப்படிக்கும்
    பெண்ணின் பெறுநிலையை எண்ணு!!


    -

    RépondreSupprimer
  2. நோய்என்ன செய்யும்! நுவன்று தடுக்கின்ற
    தாய்என்ன தந்தையென்ன செய்யும்!சொல்? - மாய்க்கின்ற
    காய்என்ன செய்யும்! உயிர்சுரக்கும் காதலை
    வாய்என்ன செய்யும் வரண்டு//mikavum sirappu

    RépondreSupprimer

  3. அனைத்து வெண்பாக்களும்

    அமுதம்! அமுதம்!

    அள்ளிப் பருகி ஆனந்தக் கூத்தாடுகிறேன்

    RépondreSupprimer

  4. வண்ண விழியழகில் எண்ணம் நிலைபெற்று
    நண்ணும் கவிகள் நறுந்தோட்டம்! - இன்னமுதக்
    காதல் கனிவெண்பா கற்றுக் களிப்பவா்க்குச்
    சாதல் இலையெனச் சாற்று!

    RépondreSupprimer
  5. தனித்து எதையும் சொல்ல முடியாது எல்லாமே அற்புதம் ஐயா.

    RépondreSupprimer