dimanche 6 janvier 2013

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 13]

நண்பா்களின் வலைப்பூவில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

நிலவைத் தேடி நான்வந்தேன்!
     நிலைத்த மகிழ்வை நான்பெற்றேன்!
கலவை போன்றும்! மணக்கின்ற
     கதம்பம் போன்றும் உள்ளவலை!
மலையைச் சிறிய மனத்துள்ளே
     வைக்கும் ஆற்றல்! தொடா்ந்துவரும்
அலையைச் சிறிய கைக்குள்ளும்
     அடைக்கும் ஆற்றல்! வாழ்த்துகிறேன்!

09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பஞ்சை அழகாய் நுாலாக்கிப்
     பாடு பட்டுத் துணியாக்கி
நஞ்சை புஞ்சை கண்மணிகள்
     நாடும் வண்ண உடையாக்கித்
தஞ்சைக் கோயில் உயரமெனத்
     தந்த தமிழை என்னென்பேன்!
நெஞ்சைக் கவரும் கவிதையினை
     நெய்த உன்னை வாழ்த்துகிறேன்!

09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கைப்பணம் அல்லது பைப்பணம் என்று
பாக்கெட் மணியை மொழிபெயா்க்கலாம்!

உலகம் எங்கே போகிறதோ?
     உற்று நோக்கி உளங்கொழிக்கும்!
குலவும் வாழ்வை நெருப்பிட்டுக்
     கொளுத்தும் போக்கு! புதுமையென
உலவும் நாற்றம்! எதிர்காலம்
     உறைந்தே போகும்! கொடுமையினை
நிலவும் பார்த்து நெடுந்துாரம்
     நிலத்தை விட்டு அகன்றிடுமே!

09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் வணக்கம்

வேண்டும் பொழுது கைபிடித்ததே
     விழுந்து விழுந்து கால்பிடித்தே
யாண்டும் பெற்ற பின்னாலே
     யாரோ யவரோ என்றிருப்பார்!
நாண்டு சாவும் இழிவுகளை
     நாளும் நாடி உயிர்வளா்ப்பார்!
கூண்டுப் புலிகள் கவியருமை!
     கொள்கைக் கவியை வணங்குகிறேன்!

09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------------

வலையில் கிடைத்த கவித்தோழன்
முரளிதரன் அவா்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்!

முரளி தரனார் முயன்றளித்த பக்கம்
இருளை அகற்றும் எரித்து!

09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

விழியே! மயக்கும் ஓவியமே!
     விருந்தாய் இனிக்கும் உன்பக்கம்!
மொழியே மலா்ந்து மணம்வீச
     முகிர்க்க வேண்டும் ஆக்கங்கள்!
பழியே நோ்ந்து பாழ்பட்டுப்
     பாகம் உடைந்த இவ்வுலகை
வழியே காட்டி வளஞ்செய்க!
     வாழ்த்தும் உன்னை வலையுலகே!

09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் வணக்கம்!

தொழுங்..கள் சிலையின் மேல்சாற்றித்
     தொண்டா் வணங்கும் செயல்போலப்
பழங்கள் ஐந்தை ஒன்றாக்கிப்
     பைந்தேன் தமிழில் கலந்துள்ளீா்!
முழங்கள் தொங்கும் பூக்கடைபோல்
     மூளைக் குள்ளே மணமேறும்!
உழுங்கூா் மண்ணைச் செழுப்படைய!
     உன்றன் எழுத்தும் அப்படியே!

09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

உங்கள் புதிய செயற்பா டுயரட்டும்!
எங்கள் இனியநல் வாழ்த்துக்கள்! - எங்கே
இருப்பினும் உன்னிதயம் எண்ணும் வலையை!
கரும்பினும் நற்சுவை கண்டு!

09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நான்பெற்ற இன்னட்பு! நண்பா் மூதனபாலா்!
தேன்பெற்ற தீஞ்சுவை தீட்டுபவா்! - ஊனுருக
ஓங்கும் கருத்தெழுதும் உண்மை உறவுக்கே
ஏங்கும் எனது வலை!

--------------------------------------------------------------------------------------------------------------
 
11 commentaires:

  1. கருத்துரைக் கவிதைகள் காந்தமாய் ஈர்த்தன.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கருத்துரை யாகக் கமழ்ந்த கவியுள்
      பெருத்துறையும் செந்தமிழ்ப் பீடு

      Supprimer
  2. அத்தனையும் அருமை

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமையென ஓரடியில் தந்த கருத்தைப்
      பெருமையென ஏற்போன் பிடித்து!

      Supprimer
  3. தஞ்சைக் கோயில் உயரமெனத்
    தந்த தமிழை என்னென்பேன்!

    அருமையான கவிதை வரிகள்..பாராட்டுக்கள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வன்தஞ்சை கோயில் வடிவழகாய் என்கவிதை
      உன்னெஞ்சைப் பற்றும் உடன்!

      Supprimer
  4. நற்றமிழ் கவிநடை அருமை !இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      கவிநைடை காட்டும்! கனித்தமிழ் நெஞ்சுள்
      சுவைநடை ஊட்டும் சுரந்து

      Supprimer
  5. கவிதைகள் அருமை. கவிதை எழுத பயிற்சி விரைவில் தர இருப்பதாக அறிந்தேன், மகிழ்ச்சி! அதற்காக காத்திருக்கின்றேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கு வண்ண வரவேற்பு! நன்றே
      இரு..கை குவித்தேன் இணைத்து!

      Supprimer

    2. ஐயா வணக்கம்!

      உங்கள் வலைப்பூவைக் பார்க்க வந்தேன்
      திரை சரியாகத் தெரியவில்லை!

      நாளை மீண்டும் வருகிறேன்

      Supprimer