காதல் ஆயிரம் [பகுதி - 12]
111
பாடவா... பாடிக் களித்ததும் சொர்க்கத்தைச்
சூடவா... நெஞ்சம் துடிக்குதடி! – ஆடவா...
தேடவா... தேனிலவை! சின்ன விழிபாதி
மூடவா காதல் மொழிந்து!
112
என்னென்(று) உரைப்பேன்? இளையவள் பேரழகை!
பொன்னென்றும் பூவென்றும் போற்றிடுவேன்
- இன்பத்தின்
கண்ணென்று காட்டுவதும் கால்அளவே! அப்பப்பா...
விண்ணென்று செல்லும் விரிந்து!
113
ஒவ்வொரு பாட்டும் உயிரோ(டு) இணைந்துவிடும்!
செவ்விதழ்ச் செல்வியின் சீர்தரும்! – கவ்விய
அவ்விரு கண்களோ ஆழ்கடல் ஒக்குமே!
தவ்விடும் நெஞ்சம் தவித்து!
114
பாடும் குயிலே! நடமாடும் பொன்மயிலே!
வாடும் மனத்தால் வதைகின்றேன்! – பீடுகளைச்
சூடும் சுடர்க்கொடியாள் தூர இருக்கின்றாள்!
ஏடும் எழுத்தும் எதற்கு?
115.
இருவிழி நல்கும்! இதயம் இலகும்!
வரும்வழி நல்கும் வசந்தம்! - பெரும்சீர்
தரும்மொழி நல்கும் தனிச்சுகம்! காதல்
திருமொழி நல்கும் சிறப்பு!
116
எண்ணும் பொழுதெலாம் இன்பம் சுரக்குதடி!
கண்ணும் சொருகிக் கமழுதடி! – பெண்ணழகே
மண்ணும் மணக்கும்! மலர்தாள் நடந்துவரப்
பண்ணும் மணக்கும் படர்ந்து!
117.
மீண்டும் வசந்தம் விளைந்து செழித்ததடி!
தூண்டும் துயரம் தொலைந்ததடி! - ஆண்டிட
வேண்டும் கரும்புவில் வேந்தனடி! என்னவளே!
யாண்டும் இணைந்தே இரு!
118.
காற்றில் கமழ்ந்துவரும் கற்பூர முல்லையே!
ஈற்றில் இனித்துவரும் வெண்பாவே! - ஊற்றமுதே!
ஆற்றில் நிறைந்துவரும் வெள்ளமென ஆசைபெருகும்!
போற்றிப் புனைந்தேன் புகழ்!
119.
பாவலன் பாட்டால் பவனிவரும் வெண்ணிலவு
நாவளம் கேட்டு நடனமிடும்! – கோ..வளம்போல்
பாவளம் பெற்றதும் பண்ணிசை கற்றதும்
மாவள மங்கை மனத்து!
120.
ஒருநாள் நகருமே ஓராண்டாய்! வாழ்வின்
உருநான்! உயிர்நீ! உணர்க! – கரும்பே!
வருநாள் அனைத்தும் வளர்முகம் காட்டு!
திருநாள் ஒளிரும் திரண்டு!
(தொடரும்)
நல்லதோர் கவிதை
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நல்லதோர் பாட்டாய் நவின்ற கருத்தினை
வல்லதோர் வாழ்த்தாய் வணங்கு!
RépondreSupprimerகாதல் தேன் சுரக்கின்ற கவிதைகள்!
காதலாயிரம் பிறப்பதும் இந்தக் கவிஞனிடமே !
கவிதையாயிரம் பிறப்பதும் இந்தக் கவிஞனிடமே !
அழகு ஆயிரம் இருப்பதும் இந்த மனிதனுக்கே !
கடமை ஆயிரம் இருப்பதும் இந்த மனிதனுக்கே !
நம்பிக்கையாயிரம் பிறப்பதும் இந்த மனிதனிடமே !
நன்மையாயிரம் பிறப்பதும் இந்த மனிதனிடமே !
நம்பிக்கை விதை விதைத்து, நாளும் பாடு பட்டு ,
நன்மையை நாட்டுக்களிக்கும் இந்த மனிதனுக்கு இணையாகுமா?
ஒரு போட்டி என்று வந்தால், காற்றை விட
மனவேகம் கொள்ளும் இந்த இளைஞனுக்கு இணையாகுமா?
தோழமைக்குத் தோள் கொடுப்பான்!
தீமைக்குத் தீங்கு தருவான்!
சுற்றத்தாரை அரவைணைப்பான்!
பண்பு நிறைந்த பாசமிருக்கும்!
எதையும் தாங்கும் இதயமிருக்கும்!
கோல் எடுத்து வீசினாலும்..
வாள் எடுத்து வீசினாலும்,..
வெற்றி இவரிடமே சரண்புகும்!
வெட்டுக் கத்தியாய்ப் கோபம் கொண்டாலும்,..
வெள்ளைப் பஞ்சு அவன் மனமல்லவா!
தோள்மேல் துண்டணிந்து தன்மானம் காப்பவன்!
நாள்தோறும் இவன் அன்பில் உயர்ந்து நிற்பான்!
Supprimerவணக்கம்!
முற்றும் என்னைக் கவிப்பொருளாய்
மொழிந்த கவிதைக்(கு) என்நன்றி!
சற்றும் மாற்றம் இல்லாமல்
தந்த மல்லன்! வணங்குகிறேன்!
பற்றும் தமிழ்மேல் படா்ந்ததனால்
சுற்றும் உலகம் எனைநோக்கும்!
பெற்ற பெருமை அத்தனையும்
பீடார் தமிழின் கொடையென்பேன்!
RépondreSupprimerநண்பா வணக்கம்!
கருத்தைக் கவா்கின்ற கட்டழகு வெண்பா!
விருந்தை படைக்கும் அரும்பா! - பருமையுடன்
அன்னைத் தமிழ்மகிழ மின்னும் அணிகொடுத்தாய்!
உன்னைப் பணியும் உலகு!
Supprimerவணக்கம்
கருத்தில் நிலைக்கும் கவிதை படைத்தீா்!
விருந்தின் சுவையை விளைத்து!
RépondreSupprimerஎன்னவென்று சொல்ல?
இனிக்கு வெண்பா ஒவ்வொன்றும்
காதல் கலையை வெல்ல!
Supprimerவணக்கம்
என்னவென்று சொல்ல இளையவளை! ஈடிலாக்
கன்னலென்று சொல்லக் கனிந்தவளை - பொன்னிழையின்
பின்னலென்று சொல்லப் பிறந்தவளை! இன்போதை
மின்னலென்று சொல்ல மிகும்!
ஐயா!
RépondreSupprimerசித்தமெல்லாம் இனிக்க எமக்கு
நித்தம் தமிழ்ச்சுவையைத் தந்து
பித்தாகிப் போகவைக்கும் உங்கள்
வித்தைதனை வியக்கின்றேன்...
Supprimerவணக்கம்!
முத்தை நிகா்த்த முகமுடையாள்! முத்தமிழின்
சொத்தை நிகா்த்த சுடா்க்கொடியாள்! - நித்தமும்
தத்தை மொழியும் தளிர்மொழியாள் தந்தகவி
வித்தை புரியும் விழைந்து!
பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
RépondreSupprimerதூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.