காதல் ஆயிரம் [பகுதி - 13]
121.
எங்கோ இருந்தே எனதுயிரை ஈர்த்தாளும்
செங்கோட்டி யாழின் சிறப்பிசையே! – செங்கரும்பே!
நுங்கும் குளிரிழக்கும்! நுண்மொழியோ தேன்சுரக்கும்!
இங்கு..நீ சொர்க்கம் எனககு!
122.
தேவி தரிசனம் கிட்டாதா? தேன்கவி
தூவித் தரிசனம் தோன்றாதா? – பாவியென்
ஆவி கடைசேர ஆசைகள் தீராதா?
கூவிக் குலையும் குரல்!
123.
தரிசனம் வேண்டுமடி! தண்டமிழே என்மேல்
கரிசனம் வேண்டுமடி! கண்மணியே! – அரிய
அரி..சனம் வேண்டுமடி ஆழ்ந்துருகி! உன்றன்
வரிமணம் வேண்டுமடி வாழ்வு!
124.
தூக்கம் இலாமல் துவளுதடி! வாழ்விலென்றும்
ஊக்கம் இலாமல் உளறுதடி! – தாக்குமொரு
ஏக்கம் இலாமல் எனதுயிரை ஆட்கொள்ள
ஆக்கம் அளிப்பாய் அனைத்து!
125
அன்பே! அமுதே! அருந்தமிழே! ஈடிலா
இன்பே! எழிலே இசைமழையே! - பொன்னாகும்
பண்பே! பசுமைப் படர்வளமே! உன்பார்வை
தண்பே(று) அளிக்கும் தழைத்து!
126
மாதுரைத்த செய்திகளை மாண்பாக மின்மடல்
தூதுரைத்துப் போனதடி! துன்கடலில் - மீதுரைந்து
நான்கிடக்கும் காட்சிகளை நன்றே உரைப்பதெனில்
வான்கடக்கும் சோகம் வரிந்து!
127.
ஏதென் இனிமை இளயவளே நீயின்றி!
சூதுன் விழிகள்! சுடும்!குளிரும்! – போதைதரும்!
மாதுன் நினைவுகளை மாமழையாய்ப் பெய்கின்ற
தூதேன் விடுத்தாய்த் துணிந்து
128.
பாட்டின்முன் வந்தாடும் பாவையைப் பார்த்திடவே
வீட்டின்முன் வந்தாடும் வேளையிலே! - மீட்டுமிசை
காட்டுமுன் கண்ணழகு! கன்னல் கனியழகு!
வாட்டும்என் னெஞ்சை வளைத்து!
129.
தூதொன்(று) உரைத்துத் துடிதுடிக்கச் செய்தனையே!
வாதொன்(று) உரைத்து வதைக்காதே! – மாதுனைச்
சாதென்(று) உரைத்துத் தமிழ்கொடுத்தான்!
சாடுவதேன்
தீதென்(று) உரைத்து தினம்!
130.
நம்மொழி பாடி நடமிடும் பேரழகே!
செம்மொழி பாடிச் செழிப்பூட்டும்! – அம்மாடி
உன்மொழி பாடி உருகுதடி என்னெஞ்சம்!
இன்மொழி பாடி இளைத்து!
(தொடரும்)
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
RépondreSupprimerஅணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.
ஏங்கும் உந்தன் இதயஒலி கேட்டுப் போலியாய்(த்)
RépondreSupprimerதூங்கும் உம் காதலி இன்னுமா எழவில்லை!
தாங்கும் பொறுமையுடன் சற்றுக் காத்துநில்லும்
பாங்கி வந்திடுவாள் பரவசமுடன் உமைச்சேர..
ஐயா ஆயிரம் வெண்பா மாலை தொகுப்பாக வெளியிடலாமே ..
RépondreSupprimer