samedi 5 janvier 2013

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 12]

நண்பா்களின் வலைப்பூக்களில்
                என் கவிப்பூக்கள்

வணக்கம்!

தோழி உசாவின் மின்வலையின்
     தோற்றம் கண்டு வியப்புற்றேன்!
ஆழி சூழ்ந்த வன்கோட்டை!
     அதன்பின் மின்னும் கோபுரமே!
நாழி நகா்வை நான்அறியேன்!
     நற்றேன் ஆக்கம்! மகிழ்வுற்றேன்!
வாழி என்றே அவா்செயலை
     வாழ்த்தும் என்வாய்! வளருகவே!

08.12.2012

-------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சீா்மிசை கொண்ட கம்பன்
     செப்பிய விருத்த நுாலில்
ஊா்மிளை என்ற பெண்ணை
     ஓரிரு அடியில் சொல்வான்!
பார்மிசை காணும் வண்ணம்
     படைத்துள கவிதை கண்டேன்!
போ்மிசை ஓங்கும் வண்ணம்
     பீடுடன் இராமன் காப்பான்!

09.12.2012

-------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முத்தமிழின் வித்தகரின் மூளை வீச்சில்
     முக்கோடித் தேவா்களும் தோற்றே போவார்!
புத்தமிழில் சொல்லேந்திச் சாலம் காட்டிப்
     புவிப்பந்தைக் கோமணத்தில் முடியப் பார்ப்பார்!
கொத்தழிவில் தமிழினத்தார் கிடந்த போது
     சொத்தழியாச் சுகவாழ்வைக் காவல் செய்வார்!
பித்தழியாப் பிறப்புகளோ வாழ்த்து பாடும்!
     முத்துவிழா! பவளவிழா! வெக்கக் கேடு!

09.12.2012

-------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இன்றுதான் உங்கள் வலைப்பூவின்
மணத்தை முகா்ந்து மகிழ்ந்தேன்!

நசிகேச வெண்பா நுாலை முழுமையாகப் படிப்பேன்!

அப்பா துரையாரின் அன்பு நசிகேசம்
தப்பா தளிக்கும் தமிழ்வளத்தை! - இப்பாரோர்
உற்ற துயா்போக்கும்! ஒண்ணொளி நெஞ்சுடையோர்
பெற்ற பயன்சோ்க்கும் பேறு!

09.12.2012

-------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இருபது முத்துக்கள் இங்களித்தீா்! கற்றால்
பெருகும் அரும்புகழ் பேறு!- தரும்வலை
ஆக்கம் அனைத்தும்! அறிவொளி பெற்றோங்க
ஊக்கம் அனைத்தும் உவந்து!

09.12.2012

-------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தொழிற்களம் கண்ணுற்றேன்! சுட்டொளிரும் பொன்னாய்
எழிற்களம் கண்ணுற்றேன் இன்று! - மொழியின்
பொழிற்தளம் கண்ணுற்றேன்! போற்றும் புதுமை
வழித்தளம் கண்ணுற்றேன்! வாழ்த்து!

09.12.2012

-------------------------------------------------------------------------------------------------------------
 
6 commentaires:

  1. ஒவ்வொரு வலைப் பூவிலும் தங்களின் மணம் அற்புதம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கருத்திற்குக் கை..குவித்தேன்! நற்கவிதை பாடும்
      விருப்புக்கு வைத்தீர் விருந்து!

      Supprimer
  2. வாழ்த்துப் பாக்கள் அத்தனையும் தேன். கவிதை உங்கள் உதிரத்தில் ஊறி இருக்கிறது.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்குருதி பண்குருதி! என்றும் தமிழ்பாடி
      வன்னுறுதி பெற்றதென் வாழ்வு!

      Supprimer
  3. வளமாக வாழ்த்திய வரிகள் அழகு ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வளமாக வாழலாம்! வண்டமிழைக் காத்தால்
      நலமாக வாழலாம்! நாம்

      Supprimer