காதல் ஆயிரம் [பகுதி - 6]
51.
வெல்லும் அவள்விழி சொல்லும் கதைகளில்
துள்ளும் துயர்நீங்கி என்மனம் - கொள்ளுமே
பேரின்பம்! மின்னிடும் பேரழகிக்(கு) ஈடாக
ஓரின்பம் உண்டோ உவந்து?
52.
கல்லுளம் கொண்டவனை மாற்றும் கனிமொழியாள்!
நல்லுளம் பெற்றுள நன்னெறியாள் - கள்ளுள
மொந்தை அளிக்கும் முழுசுகம்போல் எப்பொழுதும்
சிந்தையை ஈர்ப்பாள் சிரித்து!
53.
காலனே வந்தென்னைக் கட்டி இழுத்தாலும்
வேலாம் விழியாளை யான்மறவேன்! - நூலாம்
இடைகொண்ட என்னவள் பார்வையில் தோற்கும்
படைகொண்ட மன்னர் படை!
54.
அழகுக்(கு) அழகூட்டும் பேரழகு! வண்ண
மெழுகுக்(கு) உறவூட்டும் மேனி! - பொழுதெல்லாம்
சிந்தை மயக்கிடும் செந்தமிழாள்! இன்பமுடன்
விந்தை புரிவாள் விழைந்து
55.
அன்பு கமழ்ந்திடப் பண்பு மிளிர்ந்திட
இன்ப நெறியும் இனித்திடத் - துன்பங்கள்
தீர்ந்திட நன்மைகள் சேர்ந்திடச் சுந்தர
ஊர்வசி பெற்றாள் உளம்!
56.
தூக்கம் வராமல் துணையும் இராமல்உன்
ஏக்கம் எனதுயிரைத் தாக்குதடி - பூக்கும்
கனவுகள் பொங்குதடி கண்மணியே நாளும்
எனைவாட்டும் பொல்லா இரவு!
57.
வண்ண முகத்தழகில் வஞ்சி இடையழகில்
சொன்ன மொழியழகில் சொக்குகிறேன் - அன்புத்
துணைதேட ஆசைகளோ தூண்டுதடி! ஐயோ
எனைவாட்டும் இந்த இரவு!
58.
கதைகள் கதைக்கக் கவிகள் படைக்க
இதமாய் இணைந்து களிக்கப் - பதமாய்
வினைமூட்டி நெஞ்சத்துள் மோகம் விளைக்கும்
எனைவாட்டும் இன்னல் இரவு!
59.
அணைபோட்(டு) அடக்கியும் ஆசைகள் போகா!
துணையின்றித் துன்பம் அகலா! - மணியே
உனையெண்ணி உள்ளம் உருகுதடி! அய்யோ
எனைவாட்டும் ஏக்க இரவு!
60.
ஈருடல் ஓருயிராய் ஏகிடவும் வாழ்வெல்லாம்
பேரின்பத் தேனைப் பெருக்கிடவும் - சீராய்க்
கணையேற்றும் கற்பனையால் கண்ணுறக்க மின்றி
எனைவாட்டும் என்றும் இரவு!
(தொடரும்)
அணைபோட்டும் அடங்காத ஆசை பெருகுதய்யா
RépondreSupprimerகாதல் ஆயிரம் கவி காணவே கால்கள் விழையுதய்யா..
Supprimerவணக்கம்!
கால்கள் விழையுமெனத் தந்த கருத்தெண்ணித்
தோள்கள் புடைத்தோங்கித் துள்ளுகிறேன்! - தாள்கள்
பலவெழுதி நான்பட்ட பாடுகளை இன்று
நலமெழுதிக் காத்தாய் நன்கு!
த.ம.1
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நன்றிகள் பல!
RépondreSupprimerஎன்னவள் பார்வையில் தோற்கும்
படைகொண்ட மன்னர் படை!
அருமையான ஈற்றடி!
உங்கள் வெண்பாக்களின்
நடையும், ஈற்றடியும்
எங்களை சொக்க வைக்கிறது!
Supprimerவணக்கம்
போற்றும் அடிகளைப் போந்தருளும் பேரழகைச்
சாற்றும் தமிழோ தழைத்தோங்கும்! - ஊற்றாக
மாற்றடி வந்தாலும் மங்கை முகமன்றோ
ஈற்றடி நல்கும் இனித்து!
RépondreSupprimerஇரவுப் பொழுதை இனியகவி யாக்கிப்
பரவும் தமிழைப் படைத்துள்ளீா்! - சீரில்
விரவும் இனிமை வியப்பூட்டும்! நாளும்
மரபு மணியே வழங்கு!
Supprimerவணக்கம்!
மரபு மணியென்று மாண்புடைத்த உன்றன்
வரவு வளங்கொடுக்கும் என்பேன்! - பரவுகிற
ஏக்கப் பெருக்கில் இதயச் சுமைகூடும்!
துாக்கப் பெருக்கைத் துடைத்து!