காதல் ஆயிரம் [பகுதி - 16]
151.
சில்லென்று காதல் மழைபொழியும்! சிந்தனையை
வெல்லென்(று) அழைத்து விளையாடும்! – கள்ளூறும்
சொல்லொன்று சொல்லும்! உயிர்சொக்கும்! பூங்கணைகள்
கொல்லென்று பாயும் குவிந்து!
152.
படுத்தால் உடன்படுப்பாள்! பாவையிடம் கேள்வி
தொடுத்தால் பதிலும் கொடுப்பாள்! – எடுத்தால்
தடுப்பாள்! இளமைத் துடிப்பால் பாக்கள்
விடுப்பாள்! அவையென் விருந்து!
153.
பொன்னகை என்னாம்? பொலியும் மணியென்னாம்?
புன்னகை முன்னே! புகழ்தமிழே! – என்னுயிர்க்
கன்னிகை காட்டிடும் கண்ணகைக்(கு) ஈடாக
மின்னகை உண்டோ விளம்பு?
154.
கொடிதவழும்! தையில் குளிர்தவழும்! மாயோன்
அடிதவழும் அன்பர்தம் ஆன்மா! – சுடரும்
குடிதவழும் மாண்பு! குவியழகே! உன்றன்
மடிதவழும் என்றன் மனம்!
155.
மெல்ல நடைநடந்து! வெல்லும் விழிமலர்ந்து!
வெல்லச் சுவைகலந்து விஞ்சுகிறாய்! – சொல்லவே
வல்ல புலமை வளர்ந்து மணக்கிறது!
இல்லை இனியோர் இடர்!
156.
பார்க்காத நாளெல்லாம் பட்டமரம் போலாகும்!
சேர்க்காத பாட்டெல்லாம் சீரிழக்கும்!
- பேரெடுத்து
வார்க்காத வாழ்வென்ன? வஞ்சியுடன் என்னெஞ்சம்
கோர்க்காத வாழ்வென்ன கூறு?
157.
வீட்டுக்குள் உன்னினைவு! வேலை புரிகின்ற
காட்டுக்குள் உன்னினைவு! கண்மணியே! – பாட்டெழுதும்
ஏட்டுக்குள் உன்னினைவு! எந்நொடியும் என்னிதயக்
கூட்டுக்குள் உன்னினைவு கூத்து!
158.
நான்என்ன செய்யும் நறுந்தமிழே? உன்மொழிமுன்
தேன்என்ன செய்யும்? திகைகின்றேன்! – கான்வாழும்
மான்என்ன செய்யும்? மயில்என்ன செய்யும்?உயர்
வான்என்ன செய்யும்? வடிவு!
159.
செல்லக் கவிதை! செழுந்தமிழ் நெஞ்சத்தை
அள்ளும் கவிதை! அளித்தனையே! - மல்லிகையே!
சொல்ல இனிக்கும் சுடர்தமிழ்ச் செம்மையென
உள்ளம் இனிக்கும் உவந்;து!
160.
சித்தத்தில் சிக்கிய சின்னவளே! செந்தமிழே!
மொத்தத்தில் மூழ்கினேன் மோகத்தில்! - வித்தகியே!
இத்திறத்தில் நானிருக்க, என்னாளும் நீயங்குப்
பத்திரமாய்ப் பாடுகிறாய் பாட்டு!
(தொடரும்)