mardi 6 février 2018

விருத்த மேடை - 15

விருத்த மேடை - 15
  
அறுசீர் விருத்தம் - 15
[அரையடிக்கு மா + மா+விளம்]
  
விருத்த மேடை - 2 ல் [மா + மா + காய் அரையடிக்கு] என்ற வாய்பாட்டில் வந்த விருத்தத்தைக் கண்டோம். அதில் காய் வரும் இடத்தில் விளம் வரும் விருத்தத்தை
இலக்கியத்தில் காண்கிறோம்.
  
வானார் திங்கள் வாண்முக
   மாதர் பாட வார்சடைக்
கூனார் திங்கள் சூடியோ[டு]
   ஆடல் மேய கொள்கையான்
தேனார் வண்டு பண்செயும்
   திருவா ருஞ்சிற் றேமத்தான்
மானார் விழிநன் மாதொடும்
   மகிழ்ந்த மைந்தன் அல்லனே!
         [திருஞானசம்பந்தர் - 3248]
  
மா + மா + விளம்
   மா + மா + விளம்
  
என்ற வாய்பாட்டில் நான்கடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.
  
காலம் அழியேல்! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
ஆலம் வேலம் தருநலம்,
   ஆன்றோர் சான்றோர் இடுவளம்,
ஞாலம் சூட்டும் புகழ்ச்சரம்,
   நன்மை கூட்டும் தமிழ்வரம்,
கோலம் மின்னும் அறநெறி,
   கொள்கை மின்னும் அறிவொளி,
காலம் நல்கும் உணர்ந்திடு!
   கணித்துக் கணித்துச் செயற்படு!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!

[ஔவைபோல் மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும், கவியேறு வாணிதாசனும் ஆத்திசூடி பாடியுள்ளனர். இன்றைய புலவர் பலரும் ஆத்திசூடி பாடியுள்ளனர்]
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire