mardi 27 février 2018

கலிப்பா மேடை - 10   

கலிப்பா மேடை - 10
  
நேரிசைக் கலிவெண்பா!
  
கலிவெண்பா ஒருபொருள் நுதலியதாக இருக்க வேண்டும். வெண்பாவைப் போல் வெண்டளை கொண்டிருக்க வேண்டும். வெண்பாவைப் போல் "நாள், மலர், காசு, பிறப்பு" என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும். சிற்றெல்லை பதின்மூன்று அடிகளாகும். பேரெல்லை அளவில்லை.
  
இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகை பெற வேண்டும். அடிதோறும் மூன்றாம் சீரில் மோனை பெற வேண்டும்.
  
கலிப்பாவின் வகையாகிய இப்பாடல் இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இரண்டு வகைப்படும்.
  
நேரிசைக் கலிவெண்பாவில் இரண்டடிகளுக்கு ஒரு முறை தனிச்சீர் எதுகையுடன் வரவேண்டும்.
  
துாது, உலா, மடல் ஆகிய பிரபந்தங்களை நேரிசைக் கலிவெண்பாவால் பாடுதல் மரபாகும்.
  
நேரிசைக் கலிவெண்பா
  
நான் பிறந்த புதுவை!
  
அலைதவழ் தண்புதுவை! அந்தமிழ்த் தாயின்
கலைதவழ் பண்புதுவை! கன்னல் - குலைதவழ்
பாக்கள் படைக்கின்ற பாவலர் வாழ்புதுவை!
பூக்கள் மணக்கும் பொழில்புதுவை! - ஈக்களெனச்
சந்தக் கவிமீது தங்கிச் சுவைக்கின்ற
சிந்தை யுடையவரின் சீர்ப்புதுவை! - விந்தையெனச்
சாலை அமைந்திருக்கும்! சோலை மலர்ந்திருக்கும்!
ஆலை நிறைந்திருக்கும்! அன்றாடம் - காலைக்
கதிரழகு கண்ணைக் கவர்ந்திழுக்கும்! கற்றோர்
மதியழகு நெஞ்சை மயக்கும்! - நதியழகு
ஏந்தி நடக்கும் இனிய தமிழுக்குள்
நீந்திக் கிடக்கும் கவிநெஞ்சம்! - பூந்தியெனக்
.....................................................................
.....................................................................
.....................................................................
.....................................................................
வீட்டுக்கோர் பாவலன் மின்னும் புதுவையிலே
பாட்டுக்கோர் பாரதியாய் நான்பிறந்தேன்! - நாட்டினில்
மின்வலை மீதினில் பண்வலை நன்கிட்டு
வன்னிலை பற்றுடன் பொன்னிலை - அன்புடன்
பாட்டின் அரசன்..யான் மீட்டும் தமிழிசையைக்
கேட்டுச் சுவைக்கும் கிளர்புதுவை! - ஏட்டினில்
கொள்ளா அழகுடைய கோலப் புதுவைக்கண்
எல்லாரும் வாழ்வார் இணைந்து!
  
          பாட்டரசர் கி. பாரதிதாசன்
  
நீங்கள் பிறந்த ஊரைக் குறித்து அல்லது வாழும் ஊரைக் குறித்து 24 அடிகளுக்கு மிகாமல் நேரிசைக் கலிவெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் கலிவெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire