mercredi 19 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 4 ]



ஏக்கம் நுாறு [பகுதி - 4]
 
மணியென்ன? மலரென்ன? மிளிரும் வண்ண
     அணியென்ன? அவளுடைய முகமே மின்னும்!
கனியென்ன? அமுதென்ன? கன்னல் ஊறும்
     கன்னியவள் செவ்விதழே வெல்லும்! கொட்டும்
பனியென்ன? காற்றென்ன? பாவை பார்க்கும்
     பார்வையிலே என்னுள்ளம் குளிரும்! என்னை
இனியென்ன செய்வாளோ? எதிலும் எங்கும்
     இளையவளின் திருமுகமே தோன்றும்! தோன்றும்! 16

அலைதொட்டு விளையாடும்! சிறிய நண்டும்
     அடிதொட்டு விளையாடும்! உன்றன் கண்கள்
வலையிட்டு விளையாடும்! காதல் போதை
     மனமுட்டி விளையாடும்!  உணா்ச்சி பொங்கித்
தலைதொட்டு விளையாடும்! உயிரின் இன்ப
     மலைதொட்டு விளையாடும்! பெண்ணே உன்றன்
கலைகொட்டி விளையாடும் காட்சி கண்டு
     கவிகொட்டி விளையாடும் கவிஞன் நெஞ்சம்! 17

கடற்கரையில் நாமிருவா்! தொலையில் சிலபோ்
     கடுகளவு தெரிகின்றார்! கண்ணே நம்மின்
உடற்கரையில்! உள்ளுருகும் உயிர்கள் இன்ப
     உறைகரையில்! உளறுமொழி கவிதை! காதல்
தொடா்..கரையில் நாம்படித்தோம்! நாளும் நாளும்
     தொடா்கதையை நாம்படைத்தோம்! என்றும் நெஞ்ச
மடற்கரையில் அலைபாயும்! தென்றல் வீசும்!
     மல்லிகையே! மருக்கொழுந்தே! என்றன் வாழ்வே! 18

அளவெடுத்துச் செய்திட்ட படகு! நம்மின்
     அகமிரண்டும் அரங்கேறும் மேடை! யாரும்
உளவெடுத்துச் சாற்றாமல் அரணாய்க் காத்த
     ஒண்காதல் திருநாடு! அதனைச் செய்யச்
செலவெடுத்த செம்மலுக்கு நன்றி சொல்வோம்!
     சிறப்புடைய தச்சன்தன் திறமை வாழ்க!
மலரெடுத்து மதுஊட்டும்! பருவ நுாலின்
     வரியெண்ணி எழுத்தெண்ணி பாடும்! ஆடும் 19

தவிக்கின்றேன் உனைக்கண்ட அன்றும் இன்றும்
     தயவாக ஒருபார்வை பார்த்தால் என்ன?
குவிக்கின்றேன் கையிரண்டை! குளிர்ச்சி நல்க
     கோவையிதழ் மலா்ந்தென்முன் சிரித்தால் என்ன?
அவிக்கின்றேன் பொங்கிவரும் உணா்வை! நெஞ்சம்
     அடைகின்ற துன்பத்தைக் கேட்டால் என்ன?
கவிக்கின்றேன் என்றுமலா் உரைத்தல் உண்டோ?
     கவிக்(கு)இன்தேன் ஊட்டிடவே கண்ணே வாராய்! 20

                                              (தொடரும்)

8 commentaires:

  1. மிக அருமையான கவிதை கண்டேன். மகிழ்ந்தேன்.
    இன்னும் வருவேன். தங்கள் எனது வலை வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
    மகிழ்ந்தேன். பணி தொடர வாழ்த்து.இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாடி களிப்பீா்! பசுந்தமிழ் இன்னிசையைச்
      சூடிக் களிப்பீா் சுவைத்து!

      Supprimer
  2. அடட என்ன அற்புதம் வாழ்த்துக்கள் சகோ எங்க பக்கமும் வந்து போங்க

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நற்றமிழ் அன்னை நல்கிய நல்லருளால்
      பொற்புடன் தந்தேன் பொழில்!

      Supprimer
  3. அங்கங்கே... ஏங்க வைக்கும் வரிகள் மேலும் கொஞ்சுகின்றன...

    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கொஞ்சு களிக்கும் குளிர்தமிழ்ப் பாக்களை
      நெஞ்சுள் நிறைப்பாய் நெகிழ்ந்து!

      Supprimer

  4. கோடி மலர்களைக் கொட்டிக் கொடுப்பதுபோல்
    பாடிப் படைத்தீா் பசுந்தமிழை! - நாடிமனம்
    ஓடி வருகுது..பார்! ஒவ்வொன்றாய் தானெடுத்துத்
    தேடிப் பருகுது..பார் தோ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாடிப் படைத்த பசுந்தமிழை உண்டிடவே
      நாடி வருகின்ற நற்றமிழா! - கோடிமுறை
      சூடி மகிழ்கின்றேன் துாயமன நன்றிகளை!
      ஆடி மகிழ்கின்றேன் ஆழ்ந்து!

      Supprimer