mardi 25 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 10 ]
ஏக்கம் நுாறு [பகுதி - 10]

சொல்லெல்லாம் இனிக்குதடி! உன்வாய் என்ன
     சொர்க்கத்தின் திருப்படியா? மின்னும் முத்துப்
பல்லெல்லாம் தோரணமா? உன்நா இன்பப்
     பயணத்தின் பொற்படகா? காதில் ஆடும்
கள்ளெல்லாம் கற்பனையை ஊட்டும் காதல்
     காவியமா? கலைஞ்சியமா? கோபங் கொண்டு
முள்ளெல்லாம் என்மீது வீசும் வண்ணம்
     முறைக்கின்றாய்! எனக்கதுவும் இனிமை பாய்ச்சும்! 46

ஒருபத்து வயதிருக்கும் அன்ற னக்கும்!
     ஓரைந்து வயதிருக்கும் அன்று னக்கும்!
இருகொத்து மலா்பறித்துக் கொடுக்கச் சொல்வாய்!
     இன்கொய்யா, மாங்கனிகள் யாவும் கேட்பாய்!
கருவிட்டு வளா்கின்ற குருவிக் கூட்டைக்
     காப்பாற்ற வேண்டிடுவாய்! காவல் செய்வாய்!
எருவிட்டுப் பயிர்செழிக்கும்! அன்பே நம்மின்
     இளமகவை நிகழ்வெண்ணி உளந்த ழைக்கும்! 47

செத்தையிலே வீடுகட்டிக் கோலம் போட்டுச்
     சோ்ந்துண்ணக் கூட்டாஞ்சோ(று) ஆக்கி, என்றன்
புத்தியிலே நின்றவளே! மறவன் என்னைப்
     புன்னகையால் வென்றவளே! இளவம் பஞ்சி
மெத்தையிலே நான்படுத்தால் மெல்ல வந்து
     மேவுதடி உன்னினைவு! முடிவில் என்மெய்
கட்டையிலே போனாலும் ஆன்மா உன்றன்
     கட்டழகைச் சுற்றுமடி! காதல் பெண்ணே! 48

செல்லமெனச் செல்வமென வந்த பெண்ணே!
     சிந்தனையாம் செந்தேனைத் தந்த பெண்ணே!
வெல்லமென இனிக்கின்ற கதைகள் பேசி
     விண்ணுலகச் சொர்க்கத்தை விளைத்த பெண்ணே!
இல்லமென ஒன்றமைய, இன்பம் சூழ,
     இசைந்தாடும் தேவைதையே! இதயப் பெண்ணே!
கொல்லுமெனை உன்னழகு! நாளும் நாளும்
     கூடுதடி உன்னேக்கம்! கோதைப் பெண்ணே! 49

கண்மூடித் தியானத்தில் அமா்ந்த காட்சி
     காணுகின்ற கவியென்னை ஏதோ செய்யும்!
மண்மூடி வைத்திட்ட புதையல் போன்று
     மனம்மூடி காதலினை வைத்தல் ஏனோ?
என்மூடி இட்டாலும் என்றன் நெஞ்சம்
     என்னவளே உன்னழகைச் சுவைத்துச் சொக்கும்!
பொன்மூடி இட்டதுபோல் பொலியும் ஆடை
     புகழ்க்கோடிக் கவிகொடுக்கும் புதுமைப் பெண்ணே! 50
                                             (தொடரும்)

8 commentaires:

 1. தொலைந்த தமிழை மீட்டெடுக்கும் கவிதைகளை கண்டேன் ஐயா..தொடர்ந்து வருகிறேன்..

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தொலைந்த மரபைத் தொகுத்தாய்ந்தே என்றும்
   நிலைத்த புகழை நிறுவு!

   Supprimer
 2. Réponses

  1. வணக்கம்!

   அருமைத் தமிழின் அமுதினை உண்ணப்
   பெருமை பெருகும் பிணைந்து!

   Supprimer
 3. வழமைப் போல் அற்ப்புதம்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   வண்ணக் கருத்திற்கு எண்ணிலா நன்றிகள்!

   நற்பதம் பார்த்துச் செய்த
   நறுஞ்சுவை இனிப்பைப் போன்று
   சொற்பதம் பார்த்துச் செய்த
   சுடர்மிகு கவிகள் யாவும்
   அற்புதம் என்றே நம்மை
   ஆடிடச் செய்யும் என்பேன்!
   பொற்பதத் தமிழே! தாயே!
   புலவனின் உயிரே போற்றி!

   Supprimer

 4. காலை புலா்ந்ததும் கண்கள் கவிதேடி
  வேலை தொடரும்! வியன்தமிழின் - சோலையை
  நாளும் படைக்கும் நறுந்தலைவா! என்மனத்தை
  ஆளும்உன் பாட்டின் அழகு!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஆளை அசத்தும் அருமழகி! என்னுடையை
   மூளை அமர்ந்து முழங்குகிறாள்! - காளைநான்
   பண்நெய்தேன்! எக்கம் படர்ந்தோங்கி நள்ளிரவில்
   புண்ணானேன் நாளும் புரண்டு!

   Supprimer