mardi 4 septembre 2012

காலத்தை வென்றவன் கம்பன்




திருராம கதைபாடி
அருண்ஞான மதிசூடி
உருவான புகழ்த்தமிழ்க் கம்பா! - தமிழ்க்
கருவாக மிளிருதே உன் பா!

என்றுமுள தமிழ்ச்சீரை
இயம்பியதால் நற்பேரை
வென்றதுவே கம்பதிரு வுள்ளம்! - தமிழ்
நின்றுதழைத் தொளிர்ந்தவுயர் இல்லம்!

திருராமன் வில்லழகும்
சீதையவள் சொல்லழகும்
பெரும்பயனை நல்குமெனப் பாடி - கம்பன்
பெயர்பெற்றான் பூந்தமிழைச் சூடி

ஞாலத்தை உட்கொண்டு
ஞானத்தின் வழிகண்டு
காலத்தை வென்றவனே கம்பன் - அவன்போல்
கவியெழுத இல்லையெரு கொம்பன்

கால்வண்ணம் கைவண்ணம்
கவிவண்ணம் கண்டவனாம்
பால்வண்ண நெஞ்சுடைய கம்பன்! - உயர்
பாவலர்தம் மனம்வாழும் அன்பன்!

தந்தைமொழி தட்டாமல்
சிந்தையுள இராமனவன்
தந்தமொழி நன்மைதரும் என்பேன் - நாளும்
சந்தமுடன் பாடியதை உண்பேன்!

தோள்கண்டார் தோள்காண
தாள்கண்டார் தாள்காண
சீர்கொண்ட இராமனவன் உருவம்! - கண்டால்
பேர்கொண்ட வாழ்வுநமைத் தழுவும்

வல்லதமிழ் வாணரெலாம்
சொல்லிமகிழ் காவியத்தை
அள்ளிமனம் பருகுவதைப் பாரு! - இங்கு
அதற்கிணை உண்டோநீ கூறு!

2 commentaires:


  1. காலத்தை வென்றவன்! கன்னல் கவிநடையின்
    கோலத்தை வென்றவன்! கொஞ்சுதமிழ் - ஞாலத்தை
    நன்காளக் கண்டவன்! நன்விருத்க்த காவியத்தில்
    அன்பாளக் கண்டவன்! ஆடு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்றுபோய் நாளை..வா என்னும் அறநெறியை
      அன்றாய்ந்து அளித்த அருட்கம்பன்! - என்றும்
      பகையின்றி வாழப் படைத்தான் கவிகள்!இன்
      தொகையென்று கற்பீர் தொடர்ந்து

      Supprimer