dimanche 23 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 8 ]


ஏக்கம் நுாறு [பகுதி - 8]


சனிக்கிழமை உன்வருகை இன்றி, வண்ணச்
     சாலையெல்லாம் சோர்வெய்தும்! அன்பே கேளாய்!
இனிக்கிழமை என்றுரைத்து வீட்டில் தங்கி
     என்ளுயிரை வாட்டாதே? காதல் நெஞ்சம்
தனிக்கிழமை நன்னேரம் பார்ப்ப தில்லை!
     தளிர்கொடியே! உயிர்த்தாகம் தணிக்கும் ஊற்றே!
பனிக்கிழமை என்றாலும் பார்வை வேண்டும்!
     கனிக்கிழமை என்றாடிக் களிக்க வேண்டும்! 36

அணிந்துவரும் சுரிதாராய் அணைக்க ஆசை!
     அழகொளிரும் முகப்பொட்டாய் மினுக்க ஆசை!
துணிந்துவரும் காற்கொலுசாய் ஒலிக்க ஆசை!
     தொற்றிவரும் மலா்ச்சரமாய் மணக்க ஆசை!
பிணைந்துவரும் கைப்பையாய் பிறக்க ஆசை!
     பெண்ணே..உன் காதணியாய்ச் சிறக்க ஆசை!
இணைந்துவரும் நிழலாக இருக்க ஆசை!
     இருமுள்கள் ஒன்றாகி இனிக்க ஆசை! 37

தேனுாறும் செவ்வுதட்டைக் கடிக்க ஆசை!
     தென்றலென உன்னுடலைப் படிக்க ஆசை!
மீனுாரும் திருவிழிக்(கு)உம் கொடுக்க ஆசை!
     மென்விரல்கள் கோர்த்துநடை தொடுக்க ஆசை!
கானுாரும் வண்டாகச் சுவைக்க ஆசை!
     காரிகையை வீணையென இசைக்க ஆசை!
நானுாறும் உன்னழகைக் கவிதை யாக்கி
     நாட்டோறும் நறுந்தமிழில் குளிக்க ஆசை! 38

பாவாடை தாவணியா? புலவன் நெய்யும்
     பா..ஆடைத் தமிழ்மணியா? கண் பறிக்கும்
பூ..ஆடைப் பெண்மணியா? புலமை ஊட்டும்
     புகழ்மேடைப் பண்மணியா? போற்றும் வண்ண
நாவோடை மணக்கின்ற மலா்கள் பூக்கும்
     நல்லதமிழ்க் கண்மணியா? கற்க வேண்டும்
வா..காடை கவுதாரி காட்டுப் பக்கம்!
     வன்கோடை குளிரேந்தி இன்பம் சொக்கும்! 39

திரண்டிருந்த கருமேகம் வேகங் கொண்டு
     திசைமாறி ஓடுவதேன்? கோபத் தோடு
முரண்டிருந்த பறவையினம் மோகங் கொண்டு
     முத்தமழை பொழிவதுமேன்? மண்ணை நோக்கிப்
பிரண்டிருந்த மலா்க்கூட்டம் நிமிர்ந்து நின்று
     பெருமணத்தை வீசுவதேன்? வற்றி வாடி
வரண்டிருந்த என்னெஞ்சுள் இன்றேன் ஊற்று
     வழிவதுமேன்? வஞ்சியவள் வருகை என்பேன்! 40
                                            தொடரும
 

2 commentaires:


  1. வாழைக் குலையாக வந்த கவிதைகளை
    ஏழை எனக்களித்தீர் இன்புறவே! - தாழைமணம்
    காற்றில் கமழ்ந்துவரும்! கன்னல் கவிதைமணம்
    ஊற்றாய்ச்சுரந்துவரும் ஓது!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கொஞ்சும் குழந்தையெனக் கூடி விளையாடும்
      வஞ்சிக் கொடியே! வளர்தமிழே! - நெஞ்சமெனும்
      ஊற்றில் சுரந்துவரும் ஒண்டமிழே! நற்புகழில்
      ஏற்றியெனைக் காப்பாய் இனி!

      Supprimer