mardi 11 septembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [ பகுதி - 1 ]




வலைப்பூக்களுக்கு நான் எழுதிய கவிப்பூக்கள்

வணக்கம்

தங்கள் மின்வலையை இன்றுதான் படித்தேன்
திங்களைப் போன்று கருத்துக்கள் ஒளிர்ந்தன
வாழ்த்துக்கள்

அழைப்..பூப் கவிதை மிகஅருமை!
            கவிஞா் ஏமா சொல்இனிமை!
மழை..பூ போன்ற தமிழ்ப்பொழிவில்
            மனப்பூ குளிரும்! மகிழ்ந்தாடும்!
இழைப்..பூ வேலை! பலவண்ணம்!
            இணைப்பு கொடுக்கும் நெஞ்சத்துள்!
பிழைப்..பூ இன்றிக் கவிபாடும்
            பிழைப்பு வளர வாழ்த்துகிறேன்!

---------------------------------------------------------------------------

வணக்கம்

இலங்கா திலக மின்வலையை
           
இன்று கண்டேன்! இன்புற்றேன்!
உளங்..கா மணத்தை ஏற்கின்ற
           
உயா்ந்த தமிழின் சுவையுற்றேன்!
நலங்கா துள்ள பொற்றுணிபோல்
           
நன்றே மின்னும் கவிச்சோலை!
துலங்கா துள்ள உலகழுக்கைத்
           
துடைக்கத் துணிந்து பாடுகவே!

07.09.2012

--------------------------------------------------------------------------- 

வணக்கம்

புலவா் இராமா நுசம்கவியைப்
     பிரட்டிப் பிரட்டி நான்படித்தேன்!
குலவும் தமிழின் சந்தங்கள்
     கும்மிக் கொட்டி ஆடினவே!
நிலவும் கொடுமைக் கெதிராக
     நீட்டும் போர்வாள் இவா்கவிதை!
உலவும் பகையே ஓடிவிடு!
     உண்மைத் தமிழர் இருக்கின்றார்!

07.09.2012

--------------------------------------------------------------------------- 

வணக்கம்

நல்ல நல்ல பாடல்களை
     நன்றே தொகுத்துப் படைத்துள்ளீா்!
வல்ல வல்ல கருத்துகளை
     வடிவாய் வழங்கி மகிழ்துள்ளீா்!
சொல்லச் சொல்ல மணக்கின்ற
     சுடரும் எழுத்தா் தனபாலா்
மெல்ல மெல்லத் தமிழுலகில்
     மேவிப் பறக்கக் காண்கின்றேன்

07.09.2012

---------------------------------------------------------------------------  

வணக்கம்

காக்காய் என்று சிலபேரைக்
     கழித்தல் உண்டு! அதுவேறு!
சோக்காய்க் காக்காய் படம்போட்டுச்
     சொன்ன கவிதை மிகஅருமை!
சீக்காய் உள்ள சமுகத்தின்
     சீழை துடைத்து மருந்தேந்தும்
நோக்காய் ஆக்கம் அமையட்டும்!
     நோஞ்ச உலகை நிமிர்த்தட்டும்!

07.09.2012

---------------------------------------------------------------------------  

வணக்கம்

சின்ன சின்ன மலரெடுத்துச்
     சோ்த்துக் கட்டும் மாலையென
எண்ண எண்ண சுவைபெருகும்
     எழுத்தைக் கண்டு வியக்கின்றேன்!
பின்னப் பின்ன முழுமையெறும்
     வண்ணப் பூபோல் சீனிகவி
மின்ன மின்ன இவ்விருத்தம்
     என்னுள் வந்து பிறந்ததுவே!

08.09.2012

---------------------------------------------------------------------------  

வணக்கம்

வரலாற்றுச் சுவடுகளை வடிவாய்த் தீட்டி
     வரலாறு படைக்கின்ற தோழா! உன்றன்
தரம்போற்ற எனக்குள்ள எண்ணம் தோன்ற
     தண்டமிழில் தருகின்றேன் விருத்தம் ஒன்று!
உரமேற்ற நிலம்போன்றறே உன்றன் பக்கம்
     ஒப்பின்றி விளைந்துளது! நன்றே முற்றி
மரமேற்ற வைரமென வன்மை காண்க!
     மகிழ்வோடு வாழ்த்துகிறேன் உயா்ந்து வாழ்க!

08.09.2012

---------------------------------------------------------------------------  

வணக்கம்
 
இருபதாண்டு நிறைவெண்ணிப் பாடி வைத்த
           
இன்கவிதை இனியவனை வணங்கு கின்றேன்!
பெருகமீண்டும் பூத்தாடும் இளமைக் காலம்!
           
பேரின்பம் அளிக்கின்ற அழகின் கோலம்!
தருகயாண்டும் தண்டமிழின் இன்றேன் ஊறும்
           
சால்புடைய அருங்கவிகள்! கதைகள் யாவும்!
வருகஈண்டு பாரதியென் வலையைக் காண!
           
வளா்கீத மஞ்சரியே! வாழ்க!வாழ்க!

08.09.2012

---------------------------------------------------------------------------  

வணக்கம்

புதியதோர் உலகைச் செய்யப்
           
புறப்படும் தோழா! வெல்க!
பதிவையோர் உயிராய் எண்ணிப்
           
படைத்துள கவிதை நன்று!
சதியையோர் பக்கம் தள்ளு!
           
சரித்திரப் பக்கம் பேசும்!
விதியையோர் பக்கம் தள்ளி
           
மதியிலோர் வாகை சூடு!

08.09.2012

---------------------------------------------------------------------------  

வணக்கம்

சுடா்மிகு பூவே என்று
     சூட்டிய கவிதை கண்டேன்!
உடல்மிகு சூட்டைக் காதல்
     உயிர்மிகும் வண்ணம் தந்தீா்!
இடா்மிகு வாழ்வைப் போக்கும்
     இதழ்மிகும் இன்றேன்! சோலை
மடல்மிகும் மணத்தை உன்றன்
     வலைமிகும் என்பேன்! வாழ்க!

08.09.2012

---------------------------------------------------------------------------  

வணக்கம்

தந்தை பெரியார் அவா்களின் எழுத்துகளை மிக நன்றாகப் படிக்கவும், பெரியார் இல்லை என்றால் இன்று தமிழனே இல்லை! மகளி்ர் மாநாட்டில்தான் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது, நனறாகப் படிக்கவும் பிறகு எழுதவும்,

மந்தை மாடாய்த் தமிழினத்தை
     மட்டம் தட்டி வைத்தார்கள்!
கந்தை என்றே தமிழா்களைக்
     கைகள் தீண்ட மறுத்தார்கள்!
சிந்தை தெறிக்கக் கேள்விகளைச்
     செதுக்கிச் செதுக்கி எழுதியநம்
தந்தை பெரியார் இல்லையெனில்
     தமிழன் எது? மாலதியே!

08.09.2012

---------------------------------------------------------------------------  

வணக்கம்
 
உண்மை நட்புக் கீடாக
     உலகில் சொல்லப் பொருளேது?
தண்மை இருக்கும்! பிழையெதிர்க்கும்
     வண்மை இருக்கும்! ஒருபொழுதும்
கண்..மை போன்றே இருளிருக்கக்
     கமழும் நடபில் இடமில்லை!
பெண்மை ஓங்கக் கவிதைகளைப்
     பேணும் கவிஞா் கயல்வாழி!

10.09.2012

10 commentaires:

  1. வலைப் பூக்களைக் கவிப் பூக்களாலும், விருத்தப் பாக்களாலும், தாங்கள் போற்றும்விதம் கண்டு
    மகிழ்ந்தேன். நன்றி வணக்கம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வலைப்பூக்கள் மின்ன வடித்திட்ட என்றன்
      கலைப்பூக்கள் கண்டீா் கமழ்ந்து!

      Supprimer
  2. அருமை வரிகளால் வாழ்த்தி விட்டீர்கள்... மிக்க நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உங்கள் வலையில் உவப்புடன் நான்படைத்த
      பொங்கும் கவிதைகளைப் போற்று!

      Supprimer
  3. தீந்தமிழில் சொற்சிலம்பமாடி
    பைந்தமிழின் பெருமை ப்றைசாற்றிடும்
    நற்றமிழனின் தேனூறும் கவிகண்டு
    பெற்றத்தாய் கண்ட சேயானேன்!

    தொடருங்கள்! தொடர்கிறோம்!
    http://www,krishnaalaya.com

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தித்திக்க நான்படைத்த சிந்தனையில் பாட்டெழுதும்
      உத்திகளைக் காண்பாய் உவந்து!

      Supprimer
  4. மிக்க நன்றி ஆசிரியரே!
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மிக்க சுவையிடன் மீட்டிய பா..படித்தால்
      சொக்கும் மனங்கள் சுழன்று!

      Supprimer

  5. வலைக்கண் வடித்திட்ட வண்ணங்கள், என்னுள்
    கலைக்கண் அளித்தனவே! காதல் - நிலைகண்போல்
    ஆசை தொடரும்! அருந்தமிழை நன்கிசைத்து
    ஓசை உணரும் உயிா்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நண்பர் வலைகளில் நானளித்த பாக்களைப்
      பண்புடன் இங்குப் படைத்துள்ளேன்! - விண்மதிபோல்
      மின்னும் பதிவினை வேண்டிக் கருத்திட்டீர்!
      இன்னும் தொடரும் இது!

      Supprimer