samedi 15 septembre 2012

கடல்கடந்த கன்னித்தமிழ்




கடல்கடந்த கன்னித்தமிழ்
 
முந்துபுகழ் குமரியிலே எங்கள் அன்னை
      முன்தோன்றி முடிசூடி நன்றே ஆண்டாள்!
சிந்துநதி கரையினிலே சீராய் ஆடிச்
     சிறப்புடைய பண்பாட்டில் செழித்தே நின்றாள்!
சந்தமொளிர் நடையழகால், மின்னும் வண்ணத்
     தனிப்புகழ்சேர் அணியழகால் உலகை வென்றாள்!
முந்தையர்தம் ஆட்சியிலே இமயம் மீதில்
     முத்தமிழாள் தன்கொடியைப் பறக்கச் செய்தாள்!

தென்பொதிகைச் சோலையிலே ஆடிப் பாடித்
     திசையெட்டும் சீர்மேவி மேன்மை பெற்றாள்!
இன்னமுதை மிஞ்சுகின்ற சுவையைப் பெற்றே
     இனிமையெனும் சொல்லுக்குப் பொருளாய் ஆனாள்!
பொன்மொழியை நற்கலையை உலகுக் கீந்து
     பொதுவுடமை பூத்தாட இன்பங் கண்டாள்!
மண்ணழகைக் காக்கின்ற அறங்கள் சூடி
     மணித்தமிழாள் நனிபுகழை நமக்குத் தந்தாள்!

வற்றாத செல்வங்கள் தமிழுக் குண்டு!
     வள்ளுவனார் வாய்மறையும் அவற்றுள் ஒன்று!
குற்றால அருவியெனக் குளிரைத் தந்து
     கொஞ்சுதமிழ் வாழ்கின்றாள் காலம் வென்று!
கற்றோரும் மற்றோரும் தமிழைக் கண்டு
     காதலுளம் கொள்வதனால் உரைத்தார் அன்று
முற்றுநலம் பெற்றுமெளிர் மொழியைக், கன்னித்
     தமிழென்று! வாழ்வுயரக் காப்பாய் நன்று!

அகநூலும் புறநூலும் தமிழின் மாண்பு!
     அமுதூறும் தொகையிரண்டும் அன்பின் ஊற்று!
சுகங்கூறும் பரிபாட்டும், பதிற்றுப் பத்தும்,
     சுடருகின்ற நற்றிணையும், ஐந்து நூறும்
புகழ்கூறும்! பூந்தமிழின் பொலிவைக் கூறும்!
     புவியாண்ட பொற்றமிழின் நெறியைக் கூறும்!
நிகர்கூற இணையில்ல வளங்கள் பெற்ற
     நெடுந்தமிழே! என்னுயிரே! இறையே வாழி!

கடல்கடந்து வந்தாலும், வறுமை கூடிக்
     கண்ணீரில் கரைந்தாலும், நோயாய் வாடி
உடல்தளர்ந்து போனாலும், உள்ளம் சோர்ந்தே
     உயிர்நுடங்கி விழுந்தாலும், பகைவர் சேர்ந்தே
இடர்கொடுத்து வதைத்தாலும், இணைந்து நின்றோர்
     எனைப்பிரிந்து எதிர்த்தாலும், இருளைப் போக்கிச்
சுடர்உயர்ந்தே ஒளிரும்நற் றமிழைக் காக்கத்
     துணிவேந்திக் கொடியேந்தும் மறவன் யானே!

அறிவார்ந்த நற்றிறத்தால் அயலார் நாட்டில்
     அடைந்துபொருள் ஈட்டுகின்ற தமிழர்! நன்கு
செறிவார்ந்த கல்வியினால் வல்லார் மண்ணில்
     சிறந்தபணி யாற்றுகின்ற தமிழர்! பொல்லா
இழிவார்ந்த சிங்களவர் செய்த சூதால்
     இவ்வுலகில் புலம்பெயர்ந்து வாழும் ஈழர்!
வழியாகச் செந்தமிழாள் கடலைத் தாண்டி
     வாழ்வருள மாண்பருளத் துணையாய்ச் சென்றாள்!

புலம்பெயர்ந்த தமிழரெலாம் கடமை யெண்ணிப்
     புகழ்த்தமிழைக் காத்தனரோ? தமிழைப் பேசி
உளம்நிறைந்து களித்தனரோ? நம்மின் பிள்ளை
     ஒண்டமிழைக் கற்றனரோ? தமிழர் இங்கே
வளம்நிறைந்த வண்டமிழில் பெயர்கள் சூடி
     மனம்நிறைந்து மகிழ்ந்தனரோ? பொருளைச் சேர்த்து
நலம்நிறைந்து வாழ்கின்றோம்! நமது அன்னை
     நலங்குன்றிக் கிடக்கின்றாள்! கொடுமை என்னே?

ஒன்றிணைந்து தமிழரெலாம் சேவை செய்தே
     உவந்தனரா? உயர்ந்தனரோ? இனத்தைக் காக்க
நன்றுணர்ந்து வாழ்ந்தனரோ? போட்டி போட்டு
     நற்றமிழை வளர்த்தனரோ? அயலார் மண்ணில்
நன்குழைத்துக் களைப்பேய்திக் காலம் ஓட
     நம்மொழியை மறந்திட்டோம்! தூக்கம் கொண்டோம்!
இன்றிளைத்துக் கிடக்கின்றாள் தமிழாம் கன்னி!
     இன்பமுறும் நாள்என்றோ? தோழா செல்க!

வழிபாட்டில் தமிழ்மணக்கும் நாளும் என்றோ?
     வள்ளுவனார் திருப்பெயரை ஒளித்தல் என்றோ?
பழிஏட்டில் தமிழர்பெயர் ஏறா வண்ணம்
     பைந்தமிழர் நிலையறிந்து வாழ்தல் என்றோ?
விழிக்கூட்டில் தமிழ்மகளை அமரச் செய்து
     வெல்லுதமிழ் புகழ்பாடிக் களித்தல் என்றோ?
வழிகேட்டு நிற்கின்றேன்! தமிழா நன்கு
     மல்லாந்து உறங்குகிறாய்! விழித்தல் என்றோ?

ஆளுக்கோர் சங்கமினித் தோன்றும் தோழா!
     அவரவரும் தலைவரென உரைத்துக் கொள்வார்!
கேளிக்கை யாகவினை செய்தல் ஏனோ?
     கீழ்போட்டுத் தமிழ்ப்பண்பைப் புதைத்தல் ஏனோ?
வாடிக்கை யாகவிழாப் பலவும் செய்தோம்!
     வருகின்ற தலைமுறைக்கே என்ன செய்தோம்?
ஆடிக்கை தட்டியது போதும்! போதும்!!
     அருங்கன்னித் தமிழ்வாழக் கொள்கை காண்க!

கயற்கன்னித் தமிழ்மீது காதல் கொண்டு
     கவிஞன்யான் உணர்வேந்திக் கருத்தைச் சொன்னேன்!
அயல்மண்ணில் இனம்வாழ, மொழியும் வாழ
     ஆய்ந்துணர்ந்து நற்பாதை படைப்பீர் ஐயா!
உயிர்பின்னி இருக்கின்ற ஆசை! இந்த
     உலகெங்கும் தமிழொலியே மணக்க வேண்டும்!
அயர்வின்றி உழைத்திடுவேன்! தமிழே! உன்றன்
     அருமைமகன் யானிருக்கக் கவலை ஏனோ?

11 commentaires:

  1. பாடல் அருமை. பாராட்டுக்கள்.

    ஒரு சிறிய வேண்டுகோள்:

    தங்கள் தளத்தில் ஆவலுடன் கருத்திட வரும் என்னைப் போன்றவர்களுக்கு சற்றே எரிச்சல் ஊட்டும்
    "WORD VERIFICATION"
    என்பதனை தயவுசெய்து நீக்கி விடுங்கள், ஐயா.

    நன்றியுடன்/நட்புடன்
    VGK

    RépondreSupprimer
    Réponses
    1. ஐயா வணக்கம்!

      கருத்துக் கிங்கே தடைபோடக்
      கவிஞன் எனக்கு மனவருமோ?
      குருத்துச் சொற்கள்! குறைசொற்கள்!
      கொடுமை கொடுக்கும் கொலைச்சொற்கள்!
      இருக்க வேண்டாம் என்றெண்ணி
      இட்டேன் இந்த முறையினையே!
      வருத்தம் வேண்டாம் இதற்காக!
      வழிகள் செய்வேன் விரைவினிலே!

      உலகம் தமிழை ஓதிடவே
      உழைக்கும் தமிழன்! தமிழ்ததாய்
      திலகம் போன்றே படைப்புகளைத்
      தீட்டி வைப்பேன் திறன்பெறவே!
      குலவும் தமிழை வாழ்வென்று
      கொள்கை கொண்டோர் திருவடியை
      உலவும் பொழுதும், என்னான்மா
      உறங்கும் பொழுதும் வணங்கிடுமே!

      கவிஞா் கி.பாரதிதாசன்
      தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
      http://bharathidasanfrance.blogspot.fr/
      kavignar.k.bharathidasan@gmail.com
      kambane2007@yahoo.fr

      Supprimer
  2. ஒவ்வொரு வரியும் தமிழின் சிறப்பை சொல்கின்றன ஐயா... (முந்தைய பகிர்வும் அறிந்து கொண்டேன்) நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கடல்கடந்து வாழும் கவிஞன்என் நெஞ்சைப்
      படம்வரைந்து காட்டிடும் பாட்டு!

      Supprimer
  3. வணக்கம் ஐயா...
    என் தளம் வரை வந்து
    அங்கே கருத்திட்டு என்னை வாழ்த்தியமைக்கு
    என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

    அன்னைத் தமிழுக்கு இங்கே
    தண்ணிலவு ஒளிபோன்ற
    குளிர்நிறை சொற்களால்
    அழகிய பாமாலை ஒன்றைக் கண்டு
    அகமகிழ்ந்து போனேன்....

    ////வாடிக்கை யாகவிழாப் பலவும் செய்தோம்!
    வருகின்ற தலைமுறைக்கே என்ன செய்தோம்?////

    மேற்கண்ட வரிகள் என்னில் ஆழமாகப் பதிந்தது...
    வாழ்நாள் முடிவதற்குள்
    தமிழுக்காக
    வரும் தலைமுறைக்கு
    அத்தமிழை
    எடுத்துச் செல்ல
    ஏதாவது
    செய்ய வேண்டும் என்று பதியமிட்டுச் சென்றது...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வேடிக்கை இனிவேண்டாம்! வெல்லும் தமிழ்காக்க
      நாடிக்..கை சோ்த்திடுவோம் நாம்!

      Supprimer
  4. ஐயா வணக்கம்!

    'இனி' என்ன, 'எல்லாரும் இந்நாட்டு மன்னர்' அல்லவா? ஆளுக்கோர் சங்கம்தான், அவரவரும் தலைவர்தான்!.

    "வாடிக்கை யாகவிழாப் பலவும் செய்தோம்

    வருகின்ற தலைமுறைக்கே என்ன செய்தோம்?

    ஆடிக்கை தட்டியது போதும் ....."

    சரியாக உணர்ந்து முறையாகச் செயல்படுத்த வேண்டிய வரிகள்.

    -தாமரை,

    பிரான்சு

    ---

    Sent via Epic Browser

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஆளுக்கோர் சங்கம்! அனைவரையும் ஏமாற்ற
      நாளுக்கோர் சங்கம் நடத்து!

      Supprimer

  5. கடல்கடந்து கம்பன் கவிகளை ஓதி
    உடல்நெகிழ்ந்து ஓங்கும் கவியே! - இடா்அகன்று
    ஓடும் உனைக்கண்டே! உண்மை உறவுகள்
    பாடும் புகழைப் பறந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      விருத்தப்பாக் கம்பனை வேண்டித் தொழுதால்
      கருத்துப்பா வந்து கமழும்! - கரும்புப்பா
      என்றே கவியுலகம் ஏற்றுச் சுவைத்திடும்!
      இன்றே படிப்பீா் இசைத்து!

      Supprimer

  6. கடல்கடந்து கம்பன் கவிகளை ஓதி
    உடல்நெகிழ்ந்து ஓங்கும் கவியே! - இடா்அகன்று
    ஓடும் உனைக்கண்டே! உண்மை உறவுகள்
    பாடும் புகழைப் பறந்து!

    RépondreSupprimer