dimanche 9 septembre 2012

நல்ல தமிழ் [பகுதி - 3]




திருநிறைச்செல்வன் - திருநிறைசெல்வன்

   திருநிறைச்செல்வன் என்று வல்லினம் மிகுத்தல் தவறாகும். திருநிறைசெல்வன் என்பது வினைத்தொகையாகும், வினைத்தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறைசெல்வன் என்று எழுதுக. இது போல் திருவளர்செல்வன், திருவளர்செல்வி ஆகிய இடங்களில் வல்லினம் மிகாமல் எழுதுக.

புள்ளாங்குழல் - புல்லாங்குழல்

   புள்ளாங்குழல்  என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் எனப் பொருட்படும். எனவே மூங்கில் குழாயில் உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை என்று பொருள்).

சக்கரை - சருக்கரை

   சக்கரை என்று சிலர் எழுதுகின்றனர். சருக்கரை, () சர்க்கரை என்று எழுதுவதே சரியாகும். மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் முதற்பாகத்தில் 86 ஆம் பாடலில்  'சுவை மிக்க சருக்கரை பாண்டவர்'  என்று வருவதைக் காண்க. வடலூர் வள்ளலார் அளித்த திருவருட்பாவில், அருள் விளக்க மாலையில் 'சர்க்கரையுங் கற்கண்டின் பொடியு மிகக்கலந்தே' என்று வருவதைக் காண்க.

சிறிதரன் - சிரீதரன்

   சிறிதரன் என்று எழுதுவது தவறாகும். வடமொழிச் சொல்லாகிய ஸ்ரீதரன் என்பது, தமிழில் சிரீதரன் என்று எழுத வேண்டும். பெரியாழ்வார் திருமொழியில் 58 ஆம் பாடலில் 'குழகன் சிரீதரன் கூவ' என்றும், 147 ஆம் பாடலில் 'செய்தன சொல்லிச் சிரித்தங் கிருக்கில் சிரீதரா' என்றும் வருவனவற்றை காண்க.

கலை கழகம் - கலைக் கழகம்

   கலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருட்படும். கலைக்கழகம் என்று வல்லினம் மிகுத்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருட்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

பெறும் புலவர் - பெரும் புலவர்

   பெறும் புலவர் என்றால் பரிசைப் பெறுகின்ற புலவர் எனப் பொருட்படும். பெரும் புலவர் என்றால் புலமையுள் பெரிய புலவர் எனப் பொருட்படும். எனவே செயலறிந்து எழுதுக.

தந்த பலகை - தந்தப் பலகை

   தந்த பலகை என்றால் அவன் எனக்குத் தந்த மரப்பலகை எனப் பொருட்படும். தந்தப் பலகை என்று வல்லினம் மிகுத்தால் யானையின் தந்தத்தால் ஆன பலகை எனப் பொருட்படும். எனவே இடமறிந்து எழுதுக. 

செடி கொடி - செடிக் கொடி

    செடி கொடி என்றால் செடியும் கொடியும் எனப் பொருட்படும். செடிக் கொடி என்று வல்லினம் மிகுத்தால் செடியின் மேல் ஏறியுள்ள கொடி எனப் பொருட்படும். எனவே கருத்துணர்ந்து எழுதுக.

நடுக்கல் - நடுகல்

   குறிலிணை மொழிகளில் வரும் முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். சான்று: திருக்குறள், முழப்பக்கம், விழுப்புண், பொதுப்பணி, புதுப்பாட்டு, அணுக்குண்டு ஆகிய சொற்களைப்போல் நடு என்ற சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.. சான்று: நடுத்தெரு, நடுப்பக்கம். ஆனால் நடுகல் என்ற சொல் வினைத்தொகையாகும். வினைத்தொகையில் வல்லினம் மிகா. புறநானூறு 306 ஆம் பாடலில் ''நடுகல் கைதொழுது பரவும்'' என்று வருவதைக் காண்க.

காவேரி - காவிரி

   காவிரி என்ற சொல்லிவிருந்து காவேரி என்ற போலிச் சொல் உருவாகியுள்ளது. காவிரி என்னும் சொல்லுக்குச் சோலைகளை உருவாக்குவது வள்ர்ப்பது என்னும் பொருள் உண்டு. ( கா - சோலை) காவிரிப் பூம்பட்டினம், காவிரிப்புதல்வர், காவிரி நாடன் என எழுதுவதே சிப்பாகும்.
                                                                                                                                           (தொடரும்)

8 commentaires:

  1. மேலும் நிறைய தெரிந்து கொண்டேன்...

    மிக்க நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மேலும் வியன்தமிழின் மேன்மையைக் கற்றிடுவீா்
      மாளும் பிழைகள் மடிந்து!

      Supprimer
  2. வணக்கம். நான் தஞ்சாவூர் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். அவ்வகையில் எந்நாடு சென்றாலும், தாய்த் தமிழை மறவாமல், தமிழ் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் தங்களின் சீரிய பணி பாராட்டிற்குரியது.தங்களை வலைப் பூ வழியாக சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
    நேரமிருக்கும்போது என் வலைப் பூவிற்கு வருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
    வலைப் பூ முகவரி
    http://karanthaijayakumar.blogspot.com/

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஊாின் பெயரேந்தி ஓங்கும் தமிழளித்தீா்!
      வோின் பலாவும் விளைவும்!


      Supprimer
  3. நல்ல தமிழ் 3 படித்தேன்.
    மனத்திருத்தினேன்.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மனத்தில் இருத்தி மணித்தமிழைக் காத்தே
      இனத்தின் எழிலை எழுது!

      Supprimer

  4. எழுதும் எழுத்துக்கள் இன்சுவை ஏந்த
    விழுதென ஆக்கம் விளைத்தீா்! - தொழுதுளம்
    ஏற்று மகிழ்ந்தேன்! இனியகவி வாணரை..நான்
    போற்றி மகிழ்ந்தேன் புனைந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஆற்றும் பணிகளைப் போற்றும் தமிழ்ச்செல்வா!
      ஈற்றும் இனிக்க எழுதுகிறாய்! - ஊற்றாக
      உன்னுள் உயர்தமிழ் ஓங்கிச் சுரக்கிறது!
      என்றும் எனக்குள் இரு!

      Supprimer