jeudi 1 février 2018

சந்தக் குறட்டாழிசை

வெண்பா மேடை - 62
  
சந்தக் குறட்டாழிசை
  
ஒரு பாடலின் எல்லா அடிகளிலும் ஒரே வகையான சந்தம் அமைந்திருந்தால் அதனைச் சந்தப் பாடல் என்பார்கள்.
  
சந்த மாத்திரை
  
குற்றெழுத்துக்கு ஒரு மாத்திரை. நெட்டெழுத்துக்கும், குறில் ஒற்றுக்கும், நெடில் ஒற்றுக்கும் இரண்டு மாத்திரை [ அ - ஒரு மாத்திரை] [ஆ, அன், ஆண் - இரண்டு மாத்திரை]
  
அருமை யானனடை! அமுத மானதொடை!
அழகி லாடுமுடை ஒளிருதே!
பெருமை யானகவி! உரிமை யானமொழி!
ஒருமை யாகவெனை இணையுதே!
  
தனன தானதன தனன தானதன
தனன தானதன தனதனா
  
என்ற சந்தத்துடன் மேலுள்ள பாடல் அமைதுள்ளமையால் இது சந்தக் குறட்டாழிசை யாகும்.
  
ஓர் எதுகையில் அமைந்த சமமான இரண்டடிகள் வரவேண்டும். ஓரடியில் எத்தனைச் சீா்களும் வரலாம். மேலுள்ள பாடலில் அடிக்கு ஏழு சீர்கள் உள்ளன. முதல் சீரும், மூன்றாம் சீரும், ஐந்தாம் சீரும் மூன்று சந்த மாத்திரைகளைப் பெற்றுள்ளன. இரண்டாம் சீரும், நான்காம் சீரும், ஆறாம் சீரும் ஐந்து சந்த மாத்திரைகளைப் பெற்றுள்ளன. இறுதியில் உள்ள சீர் வேறு வகைத் தாளத்துடன் ஐந்து சந்த மாத்திரைகள் பெற்றுள்ளது. [தனன - முன்று மாத்திரை, தானதன - ஐந்து மாத்திரை, தனதனா - ஐந்து மாத்திரை]
  
ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். மேற்கண்ட அமைப்பில் எங்கும் ஒற்றுகள் வாராமை நோக்கத் தக்கது.
  
சந்த மாத்திரைக் கணக்கில் பல்வேறு சந்தங்களில் இப்பாடலை அமைத்துப் பாடலாம்.
  
வருக செம்மையுற! உழுக நன்மையுற!
வரைக மென்மையுற அன்பாலே!
தருக வன்மையுற! தமிழி[ன்] இன்பமுற!
தனிமை தண்மையுற என்தாயே!
  
தனன தந்ததன தனன தந்ததன
தனன தந்ததன தந்தானா
  
என்ற சந்தத்தில் அமைந்துள்ள குறட்டாழிசை. 1, 3, 5 ஆகிய சீர்கள் மூன்று சந்த மாத்திரைகளைப் பெற்று வந்தன. 2, 4, 6, ஆகிய சீர்கள் ஐந்து மாத்திரைகளைப் பெற்று வந்தன. 7 ஆம் சீர் ஆறு சந்த மாத்திரைகளைப் பெற்று வந்தது.
  
மேற்கண்ட அமைப்பில் எழுசீர்ச் சந்தக் குறட்டாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.01.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire