அறுசீர் விருத்தம் - 17
[விளம்+விளம்+மாங்காய்+விளம்+விளம்+ மாங்காய்]
இந்திரன் முதலுள சுரர்வைகும்
ஏழுடன் ஒருதிசை வேழம்போல்
அந்தநெ டுங்கிரி வரவோடும்
அருகினில் உறுகுல கிரியாகித்
தந்தியின் முகமுள அவுணன்றான்
சடசட முதிரொலி யுடன்வந்தான்
முந்திய தந்தம துருமாறி
முறைமுறை நின்றதொர் திறனேபோல்
[கந்த புராணம் - 1504]
விளம்+விளம்+மாங்காய் என்ற வாய்பாட்டில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும். நான்கடிகள் ஓரெதுகை பெற வேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும். [விளம் வரும் இடங்களில் மாங்காய்ச் சீரும், மாங்காய் வரும் இடங்களில் கருவிளச் சீரும் எங்கோ ஓரிடம் வரும்]
கொடுமையை எதிர்த்துநில் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
உயர்வெனும் தாழ்வெனும் வண்ணத்தை
ஒழித்திட எழுக..நீ! எந்நாளும்
துயர்தரும் மடமையை மண்விட்டுத்
துரத்திட எழுக..நீ! நெஞ்சத்துள்
மயர்வுறும் மாந்தரை நெறியிட்டு
மாற்றிட எழுக..நீ! ஏமாற்றிப்
பெயர்பெறும் வாதியைத் தோல்நீக்கிப்
பிழிந்திட எழுக..நீ புலியோனே!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.02.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire