vendredi 9 février 2018

விருத்த மேடை - 18

விருத்த மேடை - 18
  
அறுசீர் விருத்தம் - 18
[வெண்டளை விருத்தம்]
  
செய்வது துணிந்து செய் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
துணிவே துணையெனக் கொள்வாய்!
   துயரினை மோதியே வெல்வாய்!
அணியே திரண்டிங்[கு] எதிர்த்தால்
   அரிமா திறங்கொண்[டு] அழிப்பாய்!
பிணியே பிடித்த உலகாம்
   பிழையைக் களைந்து நடப்பாய்!
பணியே சிறக்கக் குறளைப்
   படித்துப் புகழைப் படைப்பாய்!
  
அச்சம் அகற்றிச்சீர் சூடு!
   அருந்தமிழ் காக்க..நீ கூடு!
உச்சம் தலைமேல்நம் தாயின்
   உரையைத் தரித்துக்கூத் தாடு!
துச்சம் புரியும் கொடியோர்தம்
   தோலை உாித்துப்பண் பாடு!
கொச்சம் மிளிரும்நற் பாக்கள்
   கொழித்து மணக்கும்பூக் காடு!
  
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
அடியின் ஈற்றுச்சீர் மாவாகும். வெண்டளை பயின்று வரவேண்டும். அடியின் இறுதிக்கும் அடுத்த அடியின் முதலுக்கும் [வெண்பாபோல்] வெண்டளை கட்டாயமில்லை.
  
நான்கடிகள் ஓரெதுகை பெற வேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.
  
நேரசையில் தொடங்கும் ஓரடி 17 எழுத்துகளையும், நிரையசையில் தொடங்கும் ஓரடி 18 எழுத்துகளையும் பெற்றிருக்கும். [இப்பாடலில் விளங்காய் வராது]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire