jeudi 1 février 2018

விருத்த மேடை - 11

விருத்த மேடை - 11
  
அறுசீர் விருத்தம் - 11
[கட்டளை அறுசீர் விருத்தம்]
  
எழுத்தெண்ணிப் பாடுவது கட்டளை யாகும். [கட்டளை வெண்பா. கட்டளைக் கலிப்பா. கட்டளைக் கலித்துறை...] கட்டளைக் கலித்துறை ஓரடிக்கு ஐந்து சீர்களைப் பெற்று நேர் 16. நிரை 17 எழுத்துகளைப் பெற்று வரும். கட்டளைக் கலித்துறையின் இலக்கணத்தைப் பெற்று ஓரடிக்கு ஆறு சீர்களை உற்று நேரில் தொடங்கினால் 19 எழுத்துகளையும். நிரையில் தொடங்கினால் 20 எழுத்துகளையும் பெற்று வருவது கட்டளை அறுசீர் விருத்தமாகும். பெரியாழ்வரின் திருப்பல்லாண்டு இவ்வகையைச் சார்ந்ததாகும்.
  
நேரசையால் தொடங்கி 19 எழுத்துகளால் அமைந்த விருத்தம்
  
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்[து]
   எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி
   வந்தொல்லைக் கூடுமினோ!
நாடு நகரமும் நன்கறி யநமோ
   நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து
   பல்லாண்டு கூறுமினே!
  
[பெரியாழ்வார் திருப்பல்லாண்டு - 4]
  
நிரையசையால் தொடங்கி 20 எழுத்துகளால் அமைந்த விருத்தம்
  
உடுத்துக் களைந்தநின் பீதக வாடை
   உடுத்துக் கலந்ததுண்டு!
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன
   சூடுமித் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு
   வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப்
   பல்லாண்டு கூறுதுமே!
  
[பெரியாழ்வார் திருப்பல்லாண்டு - 9]
  
இலக்கண விளக்கம்
  
ஓரடி ஆறு சீர்களைப் பெற்றிருக்கும். அடியின் ஈற்றுச் சீர் விளங்காயாக இருக்கும். முதல் ஐந்து சீர்களில் விளங்காய் வராது. வெண்டளை பெற்றிருக்கும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரும்.
  
அடியின் ஈற்றிலிருந்து அடுத்த அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை.
  
ஒன்று, ஐந்தாம் சீர்களிலில் மோனை அமையும். ஏகாரத்தில் முடிய வேண்டும்.
  
ஒற்றுகளை நீக்கி எழுத்தினை எண்ணுதல் வேண்டும்.
  
கற்ற தொழுகு!
  
நன்றே பயின்று நறுநெறி ஆய்ந்து
நலமுற வாழ்ந்திடுவாய்!
ஒன்றே குலமாம் ஒருவனே தேவாம்
உலகுக் குணர்த்திடுவாய்!
வென்றே புகழை விளைத்து மகிழ
விரைந்து செயல்படுவாய்!
குன்றே வலிமை கொடுத்திடும் கல்வியைக்
கூடி ஒழுகுகவே!
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire