samedi 10 février 2018

விருத்த மேடை - 19

விருத்த மேடை - 19
  
அறுசீர் விருத்தம் - 19
[வெண்டைளை விருத்தம்] [நேரசை 18 எழுத்துகள், நிரையசை 19 எழுத்துகள்]
  
சொல்வது தெளிந்து சொல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
கற்றவர் போற்றி மகிழ்ந்திட,
   கல்லார் உணர்ந்து நடந்திட,
பெற்றவர் ஏற்று மொழிந்திட,
   பிள்ளைகள் பேணித் திகழ்ந்திட,
மற்றவர் சாற்றிப் புகழ்ந்திட,
   மாணவர் கற்று வளர்ந்திட,
நற்றவ ஞானியர் சொல்லென
   நன்றே தெளிந்து நவில்கவே!
  
[நேரசையால் தொடங்கி அடிக்கு 18 எழுத்துகளைப் பெற்று வந்தது]
  
தெளிவுடை நீரின் குளிரென,
   தேனடை நல்கும் சுவையென,
வளமுடைத் தோப்பின் உரமென,
   மாண்புடைப் பெண்ணின் வடிவென,
களமுடை வீரன் நடையென,
   கற்புடை நெஞ்சின் ஒளியென,
உளமடை வண்ணம் தெளிவுடன்
   உன்னுரை மின்ன நவில்கவே!
  
[நிரையசையால் தொடங்கி அடிக்கு 19 எழுத்துகளைப் பெற்று வந்தது]
           [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
அடியின் ஈற்றுச்சீர் விளமாகும். வெண்டளை பயின்று வரவேண்டும். அடியின் இறுதிக்கும் அடுத்த அடியின் முதலுக்கும் [வெண்பாபோல்] வெண்டளை கட்டாயமில்லை.
  
நான்கடிகள் ஓரெதுகை பெற வேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.
  
நேரசையில் தொடங்கும் ஓரடி 18 எழுத்துகளையும், நிரையசையில் தொடங்கும் ஓரடி 19 எழுத்துகளையும் பெற்றிருக்கும். [இப்பாடலில் விளங்காய் வராது]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire