jeudi 1 février 2018

விருத்த மேடை - 10



விருத்த மேடை - 10

அறுசீர் விருத்தம்  - 10
[ ஐந்து ஈரசைச் சீர்கள் + ஈற்றில் காய், இயற்சீர் வெண்டளையில் அமைய வேண்டும்]

ஐம்பொறி ஆட்சி செய்!

மெய்,வாய், செவி,கண், விரிமண மூக்கு
   விளைத்த வினையாவும்!
பொய்வாய் நுழைந்து புழுபோல் நெளிந்து
   புரிந்த செயல்யாவும்
செய்வாய் அடங்க! சிறுமை ஒடுங்க!
   செழுமை ஒளிமேவும்!
நெய்வாய் நெறியை! நிறைவாய் அருளை!
   நிலைத்த புகழ்கூடும்!

ஐம்பொறி ஆடிடும் ஆட்டம் அடக்கியே
   ஆட்சி புரிந்திடுவாய்!
செம்மறி யாகத் திரிந்திடும் போக்கைத்
   திருத்தி நடந்திடுவாய்!
நம்வழி என்ன? நலவழி என்ன?
   நயக்க உணர்ந்திடுவாய்!
செம்மொழி யாகச் செழித்திடும் வண்ணம்
   சிறப்பை அணிந்திடுவாய்!

ஐந்து ஈரசைச் சீர்களும், ஈற்றில் காய்ச்சீரும் ஓரடியில் வரவேண்டும். இயற்சீர் வெண்டளையில் அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகளைப் பெற வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.01.2018

1 commentaire:

  1. வணக்கம் ஐயா!

    தங்களின் கற்பித்தலைத் தொடர்ந்து கற்றிட முடியாவிடினும்
    அவ்வப்போது பார்த்துப் பயின்று வருகிறேன்.
    அவ்வகையில், அறுசீர்விருத்தம் 10 இலக்கணத்திற்கமைய எழுதிய விருத்தம் தருகிறேன்.
    தவறெனில் சுட்டிக்காட்டுங்கள். மிக்க நன்றி ஐயா!

    வண்ணத் தமிழே! வானின் அமுதே!
       வடிவே! பேரழகே!
    மண்ணில் உதித்த முதன்மை மொழியே!
        மலரே! மதுக்கனியே!
    பண்ணில் ஏற்றிப் பாடிக் களிக்கப்
       பலமாய் இருப்பாயே!
    எண்ணம் மணக்க எழுத்திச் சுவைக்க
       என்..நா அமர்வாயே!

    RépondreSupprimer