dimanche 11 février 2018

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
ஐயா! காலை வணக்கம்!
  
'பகர' என்ற சொல்லுக்குப் 'பெயரினையே' என்ற சொல் எதுகையாகுமா?
  
நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல்
பகர மறைபயந்த பண்பன்! - பெயரியையே
புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்
அந்தியா லாம்பயனங் கென்?
  
[பொய்கையாழ்வார், முதற்றிருவந்தாதி 33]
  
முனைவர் இளஞ்செழியன்
  
---------------------------------------------------------------------------
  
வணக்கம்
  
பகர, பெயரி - எதுகையாகும். இதனை அகர எதுகை என்றுரைப்பர்.
  
உலகநாதனாரின் உலகநீதியில்,
  
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்!
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்!
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்!
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!
  
ஓதாமல் - போகமல் என்று வந்திருப்பது ஆகார எதுகையாகும்.
  
மாறியது நெஞ்சம்
மாற்றியது யாரோ?
காரிகையின் உள்ளம்
காண வருவாரோ
  
இந்தத் திரையிசைப் பாடலில் வல்லின 'றி' க்கு இடையின 'ரி' வந்திருப்பது இகர எதுகையாகும்.
  
வருக்க எதுகை, குறில் எதுகை, நெடில் எதுகை, இன எதுகை, முரண் எதுகை,
எனப் பலவகை உள்ளன.
  
வருக்க எதுகை
  
இதயமெனும் ஏட்டினிலே தீட்டி வைத்தேன்
   இளையவளே உன்பெயரை! இனிய வாழ்க்கை
உதயமினி என்றனுக்கே உன்னால் தானே!
   உயிர்மகிழ உறவென்னும் உணவைத் தாராய்!
கதிராடும் வயல்வெளியின் தென்றல் போலக்
   கருத்துக்குள் கமழ்கின்ற காதல் காற்றே!
புதிராடும் உன்விழிக்குள் புதைந்து போனேன்
   புரியாமல் வாடுகின்றேன் மயக்கம் தீராய்!
  
[பாட்டரசர் கி. பாரதிதானின் காதல் நாற்பது - 29]
  
இப்பாடல் தகரமெய் வருக்க எதுகையாகும். த, தி, இரண்டாம் எழுத்து ஒன்றி வராவிடினும் இரண்டாம் எழுத்தின் வருக்க ஒப்புமை நோக்கி எதுகையாகும்.
  
குறில் எதுகை
  
பாடுங் குயிலே! பறந்து..வா! உன்போன்று
கானம் அளிப்பாய் கமழ்ந்து! [பாட்டரசர்]
  
இது குறில் எதுகையாகும். இரண்டாம் எழுத்து ஒன்றாவிடினும் குறில் ஒப்புமை நோக்கி எதுகையாகும்.
  
நெடில் எதுகை
  
ஏதேதோ எண்ணங்கள் என்னுள் தோன்றி
   என்னுயிரை வாட்டுதடி! இனிமை பொங்க
ஓகோகோ என்றாடும் இளமைக் காலம்
   உணர்ச்சிகளை ஊட்டுதடி! மயக்கம் தந்தே
ஆகாகா என்றொளிரும் பருவச் சிட்டே!
   ஆசைகளை மொழிந்திட்டேன் தமிழ ணங்கே!
ஈகீகீ என்றென்னை இளித்தல் வேண்டாம்
   இளங்கொடியே நீயின்றி வாழ்வே இல்லை!
  
[பாட்டரசர் கி. பாரதிதானின் காதல் நாற்பது - 14]
  
இது நெடில் எதுகையாகும். இரண்டாம் எழுத்து ஒன்றாவிடினும் நெடில் ஒப்புமை நோக்கி எதுகையாகும்.
  
இன எதுகை
  
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தால் காணப் படும் [குறள் - 114]
  
இஃது இரண்டாம் எழுத்து வல்லினம் வந்தமையால் வல்லின எதுகையாகும்.
  
அன்பீனும் ஆா்வம் உடைமை! அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு [ குறள் - 74]
  
இது மெல்லின எதுகையாகும்.
  
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு [ குறள் - 299]
  
இஃது இடையின எதுகையாகும்.
  
முரண் எதுகை
  
இளமை இனித்திடுமே! எல்லாம் அடங்கி
முதுமை வெறுத்திடுமே மூத்து! [பாட்டரசர்]
  
இளமை, முதுமை என முரண் சொல்கள் வந்தமையால் முரண் எதுகையாகும்.
  
எதுகைத்தொடையில், சீர் முழுவதும் வருவது தலையாகு எதுகையாகும். ஓரெழுத்தே வரத் தொடுப்பது இடையாகு எதுகையாகும். இனத்தானும், மாத்திரையானும் பிறவாற்றானும் வரத் தொடுப்பது கடையாகு எதுகையாகும், முன் இரண்டடிகள் ஓரெதுகை பெற்று, பின் இரண்டடிகள் மற்றோர் எதுகை பெற்று வருவது இரண்டடி எதுகையாகும். ய்,ர்,ல்,ழ் என்னும் நான்கு ஒற்றும் வந்து மிகத் தொடுப்பது ஆசிடை எதுகையாகும்.
  
தலையாகு எதுகை
  
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு [குறள் - 5]
  
முதல் சீரில் முதல் எழுத்தைத் தவிர மற்ற எழுத்துகள் ஒன்றி வருவதால் தலையாகு எதுகையாகும்.
  
இடையாகு எதுகை
  
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு [குறள் - 1]
  
இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றி வருவதால் இடையாகு எதுகையாகும்.
  
கடையாகு எதுகை
  
பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார்
இறைவன் அடிசேரா தார் [ குறள் - 10]
  
வருக்க எழுத்து ஒன்றுவதால் கடையாகு எதுகையாகும்.
  
இரண்டடி எதுகை
  
மணியுமிழந்து மாமலைமேல் மேய்வனவும் நாகம்!
   மடவர லார்கொய்ய மலர்வனவும் நாகம்!
பிணியவிழ்ந்து நன்னாளால் பூப்பனவும் வேங்கை!
   பிறங்கன்மாத் தொலைத்தவற்றுான் துய்ப்பனவும் வேங்கை!
இறைக்காசாம் நேசமருள் மாலையும் மாலை!
   எமக்கினிதா யாமவனைச் சூட்டுவதும் மாலை!
நிறைகாய்த்தி நெஞ்சஞ்சச் சுடுவதுவும் காமம்!
   நிலங்காக்கும் சேஎய்தன் நெடுநகரும் காமம்!
  
முன் இரண்டடிகள் ஓரெதுகையும், பின் இரண்டடிகள் மற்றோர் எதுகையும் பெற்றதால் இரண்டி எதுகையாகும்.
  
மூன்றாம் எழுத்து ஒன்றும் எதுகை
  
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீா்ந்த
நன்மை பயக்கும் எனின் [ குறள் 292]
  
இது மூன்றாம் எழுத்து ஒன்றி வந்த எதுகையாகும்.
  
இடையிட்டு எதுகை
  
தோடார் எல்வளை நெகிழ நாளும்
நெய்தல் உண்கண் பைதல் கலுழ
வாடா அவ்வரி வகைஇப் பசலையும்
வைகல் தோறும் பைப்பையப் பெருகலின்
நீடார் இவணென நீள்மணங் கொண்டோர்
கேளார் கொல்லோ காதலர் தோழி!
வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி
பருவம் கெய்யாது வலனேர்பு வளைஇ
ஓடா மலையன் வேலிற்
கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே!
  
இந்த ஆசிரியப்பாவில் அடி இடையிட்டு எதுகை வந்தமையால், இடையிட்டு எதுகையாகும்.
  
ஆசிடை எதுகை
  
வேந்தே! பகைவரை வென்று விளையாடப்
பாய்ந்தே தொடுப்போம் படை! [பாட்டரசர்]
  
இது யகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகையாகும்
  
காத்துக் கிடந்தேன் கயல்விழியே! வட்டியுடன்
சேர்த்துக் கொடுப்பாய் செழிப்பு! [பாட்டரசர்]
  
இது ரகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகையாகும்
  
நீ..கொண்டு வாவென்றாய்! நெஞ்சேந்தி வந்தவனை
வேல்கொண்டு தாக்கும் விழி! [பாட்டரசர்]
  
இது லகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகையாகும்
ஈந்து மகிழ்ந்தேன் இலக்கணத்தை! நன்றாக
ஆழ்ந்து தெளிதல் அழகு [பாட்டரசர்]
  
இது ழகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகையாகும்
  
மிகுதி வகையால் ய,ர,ல, ழ என்னும் நான்குமே ஆசு என்றார். ஆயினும் வல்லெழுத்தாறும், வகர ளகரமும். மெல்லினத்து ங,ஞ,ந என்னும் மூன்றும் ஒழித்து, மற்ற ஒற்றுகள் ஓரோவிடத்து ஆசாய் வரப்பெறும். ண,ம,ன என்னும் மூன்றும் வல்லினம் சார்ந்து ஆசாகா. வகார நாகர மகாரத்தோடு இணைந்து ஆசாகா எனக் கொள்க.
அடியெதுகைத் தொடை
  
கண்ணன் வந்தான்! கருத்தைக் கவரும்
வண்ணம் தந்தான்! வாழ்வே என்றான்!
  
அடிகளின் முதலில் அமையும் எதுகையை அடியெதுகை என்பர்.
  
சீரெதுகை
  
ஓரடியின் சீர்களில் அமைவது சீரெதுகையாகும். அது ஏழு வகைப்படும்.
  
கன்னல் கன்னியின் காதல் பேச்சு
1, 2 சீர்களில் எதுகை அமைவது இணையெதுகையாகும்.
  
கன்னல் மொழியாள்! மின்னல் விழியாள்!
1, 3 சீர்களில் எதுகை அமைவது பொழிப்பு எதுகையாகும்.
  
கன்னல் கவியால் காதல் சொன்னால்
1, 4 சீர்களில் எதுகை அமைவது ஒரூஉ எதுகையாகும்.
  
கன்னல் கன்னி இன்னல் துடைத்தாள்
1, 2, 3, சீர்களில் எதுகை அமைவது கூழை எதுகையாகும்.
  
கன்னல் தமிழே இன்பம் என்றாள்!
1, 3, 4, சீர்களில் எதுகை அமைவது மேற்கதுவாய் எதுகையாகும்.
  
கன்னல் கன்னி காதல் பின்னி
1,2, 4, சீர்களில் எதுகை அமைவது கீழ்க்கதுவாய் எதுகையாகும்.
  
கன்னல் கன்னி பின்னல் பின்னி
1, 2, 3, 4 சீர்களில் எதுகை அமைவது முற்றெதுகையாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.01.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire