dimanche 4 février 2018

விருத்த மேடை - 13

விருத்த மேடை - 13
  
அறுசீர் விருத்தம் - 13
[காய் + மா + தேமா + காய் + மா + தேமா]
  
விருத்த மேடை - 12 அடிதோறும் முதல் சீர் காயாக வந்தது. அரையடிதோறும் முதல் சீர் காயாக வரும் மற்றொரு வகையும் இலக்கியத்தில் உள்ளது.
  
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
   இனியிந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
   துயர்வண்ணம் உறுவ துண்டோ?
மைவண்ணத் தரக்கி போரில்
   மழைவண்ணத் தண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்!
   கால்வண்ணம் இங்குக் கண்டேன்!
         [கம்பன் பால. ஆற்று. 17]
  
காய் + மா + தேமா + காய் + மா + தேமா என இதன் வாய்பாட்டை முடிவு செய்யலாம். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.
  
ஏறுபோல் நட!
  
சீரேந்தும் நெஞ்சம் கொண்டு!
   செயலேந்தும் ஆற்றல் கொண்டு!
பேரேந்தும் ஆக்கம் கொண்டு!
   பீடேந்தும் ஊக்கம் கொண்டு!
மாரேந்தும் வன்மை கொண்டு!
   மரபேந்தும் நன்மை கொண்டு!
கூரேந்தும் ஏறைப் போன்று
   குலமேந்தி நடையைப் போடு!
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire