mardi 20 février 2018

விருத்த மேடை - 24



விருத்த மேடை - 24

அறுசீர் விருத்தம்  - 24
[கூவிளம் 5 + கூவிளங்காய்] [வெண்டளை விருத்தம்]

தெய்வம் நீ யென்றுணர்! [பாரதியின் புதிய ஆத்திசூடி]

உள்ளமே ஆலயம்! அங்குறும்
   உள்ளொளி நல்லிறை! செந்தமிழாம்
வெள்ளமே மந்திரம்! சூடிடும்
   மென்மலர் அன்பெனும் ஆரமுதாம்!
கள்ளமே நீக்குதல் சீரருள்
   காண்வழி! வான்வழி! ஐந்தடக்கம்
கொள்ளுமே நன்னலம்! பொன்னலம்!
   கூட்டுமே சக்தியை யென்றுணர்க! 

       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
 
ஐந்து கூவிளமும் ஒரு கூவிளங்காயும்  ஓரடியில் வரவேண்டும். இவ்வாய்பாட்டில் வெண்டளை இயற்கையாய் அமையும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.

ஓரடியில் ஒற்று நீக்கிக் கணக்கிட 19 எழுத்துகளை இவ்விருத்தம் பெற்றிருக்கும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire