samedi 17 février 2018

விருத்த மேடை - 23

விருத்த மேடை - 23
  
அறுசீர் விருத்தம் - 23
[கூவிளங்காய் 4 + தேமா + புளிமா] [வெண்டளை விருத்தம்]
  
துாற்றுதல் ஒழி [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
முன்னொருசொல் பின்னொருசொல்
   மூச்சறவே பேசுவதோ?
      மோதல் வரவே
வன்னுறும்சொல் வாழ்வறும்சொல்
   வாய்கிழிய வீசுவதோ?
      வாய்மை மறந்து
துன்புறும்சொல் தோய்வுறும்சொல்
   தோள்சுமந்து செல்லுவதோ?
      தொல்லை துடைக்கும்
அன்புறும்சொல் பூத்திடுக!
   இன்புறும்சொல் காத்திடுக!
      ஆளும் அருளே!
  
       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
நான்கு கூவிளங்காயும் ஒரு தேமாவும் ஒரு புளிமாவும் ஓரடியில் வரவேண்டும். இவ்வாய்பாட்டில் வெண்டளை இயற்கையாய் அமையும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.
  
ஓரடியில் ஒற்று நீக்கிக் கணக்கிட 21 எழுத்துகள் இவ்விருத்தம் பெற்றிருக்கும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.02.2018

1 commentaire:

  1. கடலளவு கற்றுத் தருகிறீர்கள் நீங்கள் . கைப்பிடியளவு அல்ல அல்லா , விறல் நுனியளவு கற்றாலே போதும் அய்யா

    RépondreSupprimer