விருத்த மேடை - 30
அறுசீர் விருத்தம் - 30
[புளிமா + தேமா + கூவிளம் + புளிமா + தேமா + கருவிளம்]
நினைப்பது முடியும் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
நிலையாய் நின்றே நன்மனம்
நினைக்கும் எண்ணம் நிறைவுறும்!
கலையாய் நின்றே நன்மனம்
கணிக்கும் பாடல் மணமுறும்!
மலையாய் நின்றே நன்மனம்
வடிக்கும் கொள்கை புகழ்பெறும்!
தலையாய் நின்றே நன்மனம்
தழுவும் அன்பே அருள்தரும்!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
புளிமா + தேமா + கூவிளம் + புளிமா + தேமா + கருவிளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைய வேண்டும். ஒற்று நீக்கிக் கணக்கிட 17 எழுத்துகளை ஓரடி பெற்றிருக்கும்.
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
24.02.2018
அருமை
RépondreSupprimer