samedi 31 mai 2014

புன்னகைப் பூவே!




புன்னகைப் பூவே!

எடுப்பு!

புன்னகைப் பூவே! புன்னகைப் பூவே! - நெஞ்சுள்
பொங்கிவரும் பொற்றமிழ்ப் பாவே!
                                  (புன்னகை)

தொடுப்பு

மென்னடை யோடு மின்னிடை கண்டு - சந்தம்
மீட்டுகிறான் சீர்தொடுத்து இக்கவிக் கோவே!
                                  (புன்னகை)

முடிப்பு

இலக்கணம் கற்றவள்! இலக்கியம் பெற்றவள்! - நீ
தலைக்கனம் இன்றியே தமிழ்மணம் உற்றவள்!
சிலையென நின்றவள்! சிந்தையை வென்றவள்! - நீ
அலையென ஆசைகள் அளித்தெனைக் கொன்றவள்!
                                  (புன்னகை)

தேன்கவி என்றவள்! தீங்கனி என்றவள்! - நீ
நான்கவி பாடிட நற்றமிழ் தந்தவள்!
மான்விழி கொண்டவள்! வான்மழை போன்றவள்! - நீ
ஊன்பெறும் உயிர்பெறும் உணர்வென வந்தவள்!
                                  (புன்னகை)

என்னெனச் சொல்வதோ? ஏதெனச் சொல்வதோ? - பாயும்
மின்விழி கணைகளை எப்படி வெல்வதோ?
பொன்னெனக் கொள்வதோ? புகழென ஏற்பதோ? - நலம்
பொழிந்திடும் தைமகள் புதல்வியாயச் சேர்ப்பதோ?
                                  (புன்னகை)

உன்னுரு கண்டுளம் உருகுவ தேனடி? - மின்னும்
பொன்னுரு முழுவதும் புவிதழ்த் தேனடி!
என்னுயிர் புகுந்துள இன்னொளி நீயடி! - உன்
மென்மடி பெற்றதும் நான்சிறு சேயடி!
                                  (புன்னகை)

சிரிப்பினைக் கண்டதும் சிதறுதே நெஞ்சம்! - மலர்
விரிப்பினைக் கண்டதும் விளையுதே மஞ்சம்!
தரித்துனைக் கொண்டதும் ஆசைகள் கொஞ்சும்! - அன்பே
தனித்துனைக் கண்டதும் அவைகடல் விஞ்சும்!
                                  (புன்னகை)

01.06.2014

17 commentaires:


  1. வணக்கம்!

    நண்கா்களின் கருத்துக்களை வெளியிடு என்ற கட்டளையைதை் சொடுக்காமல்
    நீக்கு என்ற கட்டளையைச் சொடுக்கிவிட்டேன்! அனைத்துக் கருத்துக்களும்
    ஓடி மறைந்தன!

    நண்கா்களை மீண்டும் எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
    பேராசியா் சோசப் ஐயா அவா்கள் தம் கவிதை கருத்துக்களை எழுதவும்!

    அன்புடன் கி. பாரதிதாசன்

    RépondreSupprimer
  2. வணக்கம் கவிஞரையா!

    இசையோடு பாட எழுதிய பாடல்
    அசைத்தாடும் அகிலத்தை நன்கு!...


    அருமையான ஒப்பீடுகள் ஐயா!

    உங்கள் கவி நயம் அற்புதம்!


    அத்தனை அழகான, இலகுவான சொற்பதங்கள்!
    என்னையும் ஏதாவது எழுதத் தூண்டுகிறதே...

    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பூங்கொடி வந்து புகழாரம் சூட்டிட
      ஏங்குமே என்னுயிா் இங்கு!

      Supprimer
  3. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாடிக் களிப்பவளைப் பசுந்தமிழை எந்நாளும்
      சூடிக் களிப்பவளைச் சொல்லு!

      Supprimer
  4. ஐயா,
    வணக்கம்.
    நேரடியாகக் கணினியில் தட்டச்சு செய்ததால் எழுத்துப் பதிவில் இல்லை நினைவில் இருந்தே மீட்டெடுக்கிறேன். உங்களின் கவிதைப் பெண்களைக் கவனிப்போர்க்கே கவிதை தோன்றுமே ஐயா! அழிந்தால்தான் என்ன.......?
    ஆயிரம் எழும். மற்றபடி நான் பேராசிரியன் அல்லேன். புலவனோ பண்டிதனோ ஆகேன்.
    அடிப்படைத் தமிழறிந்து மேலும் கற்கப் பெரும் பசியுறும் ஒரு சிறுவனுக்குள்ள தகுதியுடன் தங்களைப் போன்றோரின் மாணவாய் இருக்கவே பெரிதும் மனம் அவாவுகிறேன்.
    இதோ என் அழிகவி
    “புன்னகையில் கண்ணிமைத்து அன்னமென வண்ணகவி
    பொன்பழித்து வந்ததுவோ அங்கு?- என்றன்
    மென்மனது கண்திறந்து கண்டிதனைக் கொண்டதனால்
    இன்கவிதை ஈந்ததுவோ இங்கு!
    முத்தும்வாய் இன்னமுதும் மீன்களதும் வாழுமுகம்
    சத்தமிலா வித்தைசெயும் கடலோ - அன்றிச்
    சித்தமெலாம் ஆண்டு’என்றன் சிந்தையெலாங் கொண்டதனால்
    சந்தமுள செந்தமிழின் உடலோ?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புன்னகையின் சீா்படித்து மென்னடையில் பாவடித்து
      என்னெழுத்தைப் போற்றிமகிழ் அய்யா! - என்றும்
      பொன்னகையின் மின்னொளியை விஞ்சுகிற ஆற்றலுடைப்
      பூந்தமிழில் நெஞ்சுருகும் நெய்யா!

      சந்தமுள செந்தமிழைச் சொந்தமெனக் கொண்டவரே!
      வந்துதினம் தீட்டிடுக பாட்டு! - நாளும்
      சிந்தையிலே நான்பதித்து வந்தனைகள் செய்திடுவேன்
      தந்ததன தாளமிசை போட்டு!

      Supprimer
  5. "தேன்கவி என்றவள்! தீங்கனி என்றவள்! - நீ
    நான்கவி பாடிட நற்றமிழ் தந்தவள்!" என்ற
    அடிகளை விரும்புகிறேன்.

    RépondreSupprimer
  6. வார்த்தைகளால் கட்டிப்போட்டீர்கள் அய்யா..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சுட்டும் விழிச்சுடாில் கட்டுண்டு இருப்பதனால்
      கொட்டும் கவிகள் கொழித்து!

      Supprimer
  7. வணக்கம் !
    இனிய நற் கவிதை கண்டு இதயம் மகிழ்ந்தது வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய கவிதை! இதயக் கவிதை!
      பனிபோல் குளிரும் படைப்பு!

      Supprimer
  8. அருமை அருமை கவிஞரே

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    10

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெருமையுடன் வந்தாள்! பெரும்பசி தந்தாள்!
      அருமையுடன் மின்னும் அழகு!

      Supprimer
  9. புன்னகைப் பூவின் புகழ்த்தரும் தேனருந்தி
    என்னகம் ஏங்கும் இனித்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னகம் ஏங்கும் எழுதிய நற்குறளில்
      புன்னகைப் பூவின் புகழ்!

      Supprimer
  10. புன்னகைப்பூ பாடல் வரிகளில் வசீகரித்த விதம் அருமை..

    RépondreSupprimer