மே ஒன்று
உழைப்பவர் ஒன்று
மற்றவர் அவர் பின் என்று
மேதினிக்கு உரைப்பதுதான்
மே..ஒன்று!
உழைப்பவர் உயர்ந்தால்
உலகம் உயரும்!
உழைப்பவர் தாழ்ந்தால்
உலகம் தாழும்!
மே..ஒன்று
உழைப்பவர் திருநாள்!
உண்மையில் இதுதான்
உலகின் திருநாள்!
ஆண்டான்
அடிமை
வேண்டாம் இனிமேல்!
கூண்டுக் கிளிபோல்
மாண்டது போதும்!
மூண்டது புரட்சி!
தோன்றிய திருநாள் மே!
வரலாற்றை
வடித்தது கரமாற்றல்!
வாழ்வை மாற்றியது
ஒற்றுமையின் உரமாற்றல்!
ஒளிரும் திருநாள் மே!
பாட்டாளி அனைவரும்
கூட்டாளி யாக்கிக்
கூத்தாடும் திருநாள் மே!
இல்லாமை வீழ
எல்லோரும் வாழ
பொதுமைத் திருநாள் மே!
தோள்கள் எழுந்தால்
நாள்கள் வணங்கும்!
தோழர் இணைந்தால் - மத
வேழம் அடங்கும்!
துன்பம் துடைத்திட
இன்பம் படைத்திட
பொங்கியது புரட்சி!
பூத்த திருநாள் மே!
பாடுபடும் பாட்டாளி
பஞ்சாலைத் தொழிலாளி
அஞ்சிக் கிடப்பதுவோ?
கஞ்சிக்கு அழுவதுவோ?
வாடுதுயர் ஓட்டிடவும்
கூடுபுகழ் தீட்டிடவும்
வந்தது புரட்சி!
தந்தது மகிழ்ச்சி!
உழைப்பின் திருநாள் மே!
முதலாளிகள்
தொழிலாளர் முதுகேறிப்
பயணம் செய்தனர்!
சுரண்டிக் கொழுத்தனர்!
சுட்டு எரித்தனர்!
திரண்டது புரட்சி!
மிரண்டது உலகு!
மீட்சியின் திருநாள் மே!
முதலாளிகள்
உழைத்தவர் முதுகெலும்பை
உறிஞ்சிக் குடித்தனர்!
பிழைத்தவர் வழியின்றிப்
பிரண்டு துடித்தனர்! - துயரில்
வரண்டு மடிந்தனர்!
பொல்லாக் கொடுமையைப்
பொசுக்க வேண்டி
எழுந்தது புரட்சி!
விழுந்தது கொள்ளை வர்க்கம்!
விளைந்தது உழைப்பின் சொர்க்கம்!
வெற்றித் திருநாள் மே!
வேர்வை விருந்து!
வெந்து கிடந்தோர்
வேதனைக்கு மருந்து!
விடுதலை போன்று
விளைந்த திருநாள் மே!
கொள்ளை அடித்தவன்
பல்லைப் பிடிங்கிய நாள் மே!
உழைக்கும் தோழர்களின்
உரிமைத் திருநாள் மே!
எட்டு மணிகளைக்
கொட்டி முழங்கிய நாள் மே!
உலகம் போற்றி
உவக்கும் திருநாள் மே!
02.05.2014
உழைக்கும் மனிதர்களின் உரிமைத்திருநாள் மே
RépondreSupprimerஅருமை ஐயா
நன்றி
Supprimerவணக்கம்!
உழைக்கும் சமுக உாிமைத் திருநாள்!
விழைக்கும் நலத்தின் விாிப்பு!
புதுக்கவிதையாக இருப்பினும் சந்தமும் இனைந்து அழகு சேர்க்கிறது கவிதைக்கு.
RépondreSupprimerஅருமை ஐயா
Supprimerவணக்கம்!
புதுக்கவிதை தந்தேன்! புகழ்தமிழ் கொஞ்சும்
மதுக்கவிதை தந்தேன் மகிழ்ந்து!
அருமை ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
Supprimerவணக்கம்!
அருமைத் திருநாளை ஆழ்த்தபுகழ் கொண்ட
உாிமைத் திருநாளை ஓது!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
மே தினத்தை பற்றி மிக அருமையாக கவிதையில் சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
வடித்த வாிகளை வண்டமிழ்த் தேனைக்
குடித்த வாிகளைக் கொள்!
வணக்கம் !
RépondreSupprimerஅழகிய மே தினக் கவிதை அருமை ! வாழ்த்துக்கள் ஐயா .
Supprimerவணக்கம்!
அழகிய மே..நாளை ஆரமுதை அள்ளி
வழங்கிய மே..நாளை வாழ்த்து!
உழைப்பாளர்களின் சிறப்பை விளக்கும் உன்னதக் கவிதை! அருமை! வாழ்த்துக்கள் ஐயா!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
உழைப்பவர் சீரை உரைக்கும் கவிதை
இழைத்துள சொற்கள் இனிப்பு!
"உழைப்பவர் உயர்ந்தால்
RépondreSupprimerஉலகம் உயரும்!
உழைப்பவர் தாழ்ந்தால்
உலகம் தாழும்!
மே..ஒன்று" என்ற
உண்மையை வரவேற்கிறேன்!
Supprimerவணக்கம்!
சீவலிங்கம் இங்குச் செதுக்கிய சீரனைத்தும்
துாவும் மலரைத் தொடர்ந்து!
கொள்ளை அடித்தவன்
RépondreSupprimerபல்லைப் பிடிங்கிய நாள் மே!//நிதர்சன நிலை.அருமையான கவிதை.
Supprimerவணக்கம்!
தொல்லை கொடுத்தவனின் பல்லைப் பிடுங்கிய..நாள்
எல்லையிலா இன்பநாள் மே!
மே தினம் பற்றிய அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
துன்பம் அடைந்து துவண்ட தொழிலாளா்
இன்பம் அடைந்த..நாள் மே!
RépondreSupprimerவண்ண மலராட! வாழை இலையாட!
எண்ணம் இனித்தாட என்தோழா! - மண்ணே
மகிழ்தாட! வாழ்வு மணந்தாட! சட்டம்
திகழ்ந்தாட வந்த தினம்!
Supprimerவணக்கம்!
வறுமையில் வாடி வதங்கிய தோழா்
பொறுமையும் பொங்கி வெடித்ததுவே! - பெறுசீா்
உாிமைத் திருநாளை ஓதி மகிழ்ந்த
அருமைக் கவிதை அமுது!